டிசம்பர் 24, 2009

வழிப்பறி

பட்டப் பகலில்
விழியை ஆயுதமாக்கி
என் இதயத்தை
பறித்துச் சென்றாள்.

அவளின் ...
அடையாளங்கள் ,

செந்நிற மேனி
சிவந்த உதடு
மஞ்சள் தாவணி
மயக்கும் விழிகள்
கால் சலங்கையோ ...
கவிதையின் சந்தம் !

தகவல்
தரவேண்டிய முகவரி ...

இதயத்தை இழந்தவன் ,
கவிதை இல்லம் ,
காதல் தெரு ,
அஞ்சல் எண் 237.

( எனது தேடலைச்சுவாசி நூலிலிருந்து )

டிசம்பர் 22, 2009

காமுக (ஆ)சாமி!!!

கடவுள் வாழும்
கருவறையில் ...
கற்பூரத்தைக்
கொளுத்தும் ... பூசாரி
கற்பை கொளுத்தியதாய்
காணோளிச் செய்தி !!!

இப்போதுதான்
இடம் மாறுகிறது
என் கோபம்
பூசாரி மீதிருந்து ...
கடவுளுக்கு !

( கவிமலையின் இம்மாத "இடம் விட்டு இடம் " தலைப்புக்கான போட்டிக்கு அனுப்பப்பட்ட கவிதை )

டிசம்பர் 18, 2009

பூ


தேன் கிண்ணம்!.
..
.
(எனது தேடலைச்சுவாசி நூலிலிருந்து )

டிசம்பர் 13, 2009

வரதட்சணை


பெண் வீட்டாரிடம்
பிடிவாதாமாக வாங்கப்படும்
அதிகாரப் பிச்சை .


மங்கை ஒருத்தி மூலம்
மகனையே விலைப்பேசும்
மானங்கெட்ட வித்தை !

(எனது தேடலைச்சுவாசி நூலிலிருந்து )

டிசம்பர் 08, 2009

கண்ணாடி

மிக அழகிய
கண்ணாடிச் சுவர்கள் ...
முள்வேலியை விடவும்
மூர்க்கமாய் !!!

தரையிறங்கிய விமானத்திலிருந்து
வெளியாகும் உறவுக்காக
காத்திருக்கும் ... தருணங்களில் .

(அண்மையில் விமான நிலையத்தில் இல்லத்தரசிக்காக காத்திருந்தபோது )

நவம்பர் 25, 2009

காணாமல் போகும் முன் ...!

என் நேசத்துக்குரிய "உனக்கு"
உன் மீது எனக்கிருந்த ...
பழைய காதலின்
நினைவுச் சுவட்டோடு...
எழுதுகிறேன்.

உன்னை கையாள்வது
ஒரு கலை!.

தகவல்கள் எப்படியாயினும்
ஓர் பிணைப்போடுதான்
ஆரம்பிக்கப்படுவாய்.

உலகம் முழுதும்
வியாப்பித்திருந்த உன்னை
ஓர் மூலையில் ஒதுக்கியதில்
நானும் ஒருவன்!.

என் விடுதிக்காலத்தில்
என் தேவைகளுக்கான
தூதுவன் நீதான்!.

நட்பு
காதல்
உறவு என
அத்தனைக்கும்
பாலமும்... பலமும்
நீயே தான்!.

உன்னை பாவிக்கும் போது
சிந்திக்கும்...
அவகாசம் இருந்ததால்
நீ,
நிதானத்தின் அடையாளமானாய்!.

முன்பொரு காலத்தில்
உன்னை
புறாவின் காலில்
கட்டி அனுப்பினார்கள்
பின்...
முத்திரை குத்தி அனுப்பினார்கள்.

இன்றோ
மனித முகவரிகள்
எழுத்துகளிலிருந்து
எண்களாகிவிட்டதால்
உன் அழகு
பராமரிக்கப்படவில்லை.

அதனால்தான்...
நீ
காணாமல் போகும் முன்
“கடிதமே”!
உனக்கோர் கடிதம்
எழுதுகின்றேன்.

(முன்பு இணைய இதழில் வெளியான என் கவிதை )

நவம்பர் 20, 2009

காதல் பேசிகள்


உலகப் பந்தின்
இருவேறு திசைகளிலிருந்து
நீயும் நானும்
காதல் பேசிகளானோம்.
*
கடிகார நிமிடமுள்
சில வட்டமடிக்க ,
அலைப்பேசி மின்கலன்
சக்தி இழக்க,
ஏதேதோ ...
பேசி களித்தோம் ,
ஏதேதோ ...
பேசி களைத்தோம் .
*
இறுதியாய் ,
எதைப் பேச மறந்தோம் ...
எதைப் பேசி மறந்தோம் ...
இருவருக்கும் தெரியவில்லை! .
*
இருந்தும்
தொடர்பைத் துண்டித்து ,
தயாராகிறோம் ...
நாளைய ...
அலைபேசி அழைப்புக்காக .( திருமணத்திற்கு முன்பு ... இல்லற தோழிக்கு பேசியபோது )
(இது ஓர் மீள் பதிவுங்க ..... யாரும் என்வலைக்கு வராத காலத்தில் எழுதப்பட்டது . அதாவது ... பின்னூட்டமே இல்லாத கவிதைங்க )

நவம்பர் 17, 2009

ஏனெனில் நான் கவிஞன்

உங்கள் மனத்தராசு ...
பொருளாதாரத்தையே
எடைபோடுகிறது .
என் தராசுத் தட்டுகளில்...
ஈரமும் அன்பும் தான்
எடைக்கற்கள் .

உடுத்திய உடைகளிலேயே
உட்கார்ந்து விடுகிறது
உங்கள் விழிகள் .
திரையிடாத என்
மனதைப் பார்க்காமல் !

தடாகம் சேறானதும்
மீன் பிடிக்கின்றீர்கள் !
நானோ ...
தாமரையை இரசிக்கிறேன் .

"அவளை" நிலவென்றேன்
பொய் பேசுகிறேன் என்கிற
நீங்களேதான்
நிலவை ஓடிவரச் சொல்லி
சோறு ஊட்டுகிறீர்கள் .

அந்த ...
ரோசா செடியின்
முட்களைச் சபிக்கின்றீர் ...
நீங்கள் .
அங்கே ...
மலர்களை இரசிக்கிறேன் ...
நான் .

துக்கத்தில்
கண்ணீர் பிறக்கிறது
உங்களுக்கு .
கவிதை பிறக்கிறது
எனக்கு .
ஏனெனில் ...
நான் ... கவிஞன் .

01-12-2002- ல் மலேசியா தமிழ்நேசனில் வெளியானது ... பின் 2004 - ல் எனது தேடலைச்சுவாசி நூலிலும் இடம் பிடித்த கவிதை ... இன்று வலைத்தளத்திலும் ....
(நிழற்படம் ... கவிமாலை விருது விழாவில் கவிதை வாசிக்கும் பொது 2009 )

நவம்பர் 07, 2009

தேடலைச்சுவாசி

தேடல்
உன்
முகாரிக்கு முடிவுரையும்
பூபாளத்திற்கு வாழ்த்துரையும்
எழுதுமோர் ...
சிறகுச் சித்தாந்தம் .

இது
சுயமேம்பாட்டின்
சுருக்கெழுத்து .
வானத்தையே விலைபேசும்
வசீகர மந்திரம் .

தேடலே ...
நித்தம் உன்னை
புதிதாய்ச் செதுக்கும்
வைர உளி .
இருட்டிலும் உன்னை
ஒளிரச் செய்யும்
சூரிய வெளிச்சம் .

தேடல்
உன்
முன்னேற்றத்தை
முகவரியாய் எழுதும்.
முகத்தைப்
பொன்னேட்டில் வரையும் .

தேடல்
விடியலைக் கற்பிக்கும்
வியர்வைப் பாடம் .
வெற்றிக் கனி பறிக்க
வித்திடும் ஏணி .

தேடலினால்
சிகரங்கள்
உன்னிடம்
கைகுலுக்கும் .
தேசங்கள்
உன்னை மொழிபெயர்க்கும் .

தேடல்
வாழ்வின் பிடிப்பு
வசந்தத்தின் அழைப்பு
இது ,
என்றும் உன்னை
இளமையாய் வைத்திருக்கும்
சுவை மருந்து - இதை
தினம் அருந்து.

தேடலை என்றும் சுவாசி !
தேசத்தில் நீதான் சுகவாசி !!

(இது எனது முதல் இலட்சிய படைப்பான "தேடலைச்சுவாசி" நூலிலிருந்து.... )
( வெளியிட்ட‌ ஆண்டு.2004 சூலை )

நவம்பர் 01, 2009

முள்வேலி (கிழிந்த வாழ்வு )எங்கள் ...
கிழிந்த வாழ்வின்
உடுப்புகளும் ...
உரிமைகள் போலவே !

உலர்கின்றன ... முள்வேலியில் !!

அக்டோபர் 28, 2009

வாஸ்து

இது ,
காற்றுவரும்...
வாசல் அதை பூட்டிவிடும் !

உன்
கழிவறையில் ...
உணவு மேசை போட்டுவிடும் !!

அக்டோபர் 22, 2009

புகைத்தல் , (வெண்சுருட்டு)

விரலிடுக்கில் ...
அது கசியும்போது
காலத்தின் இடுக்கில்
நீ ...
நழுவிக்கொண்டிருக்கிறாய் !

அந்த நாற்றம்
உன்னை ...
நெருங்கும் தூரத்தை
அதிகரிக்கிறது !

அது,
கரைத்துக்கொண்டே இருக்கிறது
உன் ...
காலத்தையும்
காசையும் !

உன் ,
அழகு
ஆற்றல்
இரண்டிற்குமே
எமனகிறது அது !

அது ... நோய்களை
உனக்குள்ளும் நிரப்பும்
உன் வாரிசுக்கும் பரப்பும் !

புத்துணர்ச்சி என்று
புகைத்தால் ...
புற்று உணர்ச்சியாய் வந்து
புதைக்கும் !

ஆயிரம் கேடுகள்
அதற்குள் இருக்கு
அந்த அரக்கன்
அவசியமா உனக்கு ?புகைத்தலை நிறுத்த ...
1. நிறுத்த முடியும் என்ற நம்பிக்கையும் நிறுத்த வேண்டும் என்ற ஆசையும் இருந்தால் போதும் .
2. குறிப்பிட்ட நாள் , நேரம் வகுக்காமல் ... உடனடியாக செயல் படுத்துவது .
3. புகைக்கு மாற்றாக எதையும் எண்ணாதிருத்தல் ... நாடாதிருத்தல் .
4. அரைநாள் ... ஒருநாள் ...இரண்டுநாள் என புகைத்தலிலிருந்து விடுபட்ட உணர்வை நிறைவாக உணர்தல் . அந்த நாள் எண்ணிக்கையை
உயர்த்துதல் .
5. மருந்துக் கடையில் "நிக்கோட்டின் ஒட்டு வில்லை " உள்ளது. அதை உடலில் ஒட்டிக்கொண்டால் ... அது புகைக்கும் உணர்வை எற்படுத்தாது உதவும் . புகைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள் ... முடியும் உங்களால் !!!

பின் குறிப்பு :
10 ஆண்டுகளுக்கு முன் புகைக்க பழகி ... ஒரே நாளில் 20 முதல் 25 வரை புகைத்த நான் கடந்த 2007 இல் (13-11-2007) புகைப்பதை கைவிட்டு ... எதோ சாதித்த உணர்வோடு மகிழ்வுடன் இருக்கிறேன் . (வலியுறுத்திய இல்லறத் தோழிக்கு நன்றி )

அக்டோபர் 18, 2009

பிரிவு


பிரிவு......

நட்பில்லாதவனுக்கு ...
உடல் அசைவு .

நட்புடையவனுக்கு ...
உயிர்க் கசிவு .

( எனது தேடலைச் சுவாசி நூலிலிருந்து )

அக்டோபர் 13, 2009

உலக வெப்பம்


நாம் விழித்துக் "கொள்ளும்"
தருணம் இது !
இல்லையேல் ...
ஆர்ட்டிக் விழித்துக் "கொல்லும்"
தருணம் இது !!

அக்டோபர் 02, 2009

"அது" மட்டும் வேண்டாம்


இரும்பு பித்தளை ஈயம் என

எதை தின்று வாழ்வாய் ?


குயில் கிளிகள் குருவிகளை

எங்கே தேடி அலைவாய் ?


உடையை கல்லில் நெய்தா

உடுத்திக் கொள்ள முனைவாய்?


தண்ணீர் பாய்ந்த இடமெல்லாம்

தார்ச்சாலை புகுவது தகுமோ ?


விளைச்சல் குவித்த நிலத்தின்மீது

விண்தொடும் கட்டடம் முறையா ?


அழிவிற்கு பாதைப் போடும்

ஆடம்பர மனிதா ... உனக்கு

அவசர மற்றும்

அவசிய வேண்டுகோள் ஒன்று !


"விளை"நிலங்களை ...

"வீட்டு மனை" ...

"விலை" நிலங்கலாக்கும் ...

அது மட்டும் வேண்டாம் !


சிங்கப்பூர் , கடற்கரைச் சாலை ... கவிமாலையின் 10ஆம் ஆண்டு கவிதைப் போட்டியில் பரிசு பெற்றக் கவிதை .செப்டம்பர் 19, 2009

ஏக்கம்

பெற்றவர்களுக்கு
மணநாள் இன்று .
முத்தம் பரிசளிக்க ஆசை !

அப்பா தனிவீட்டில் ...
புது அம்மாவுடன் !.

அம்மா வேறொரு ஊரில்
புதுக் கணவருடன் !.

மணவிலக்கு பெற்றவர்களின்
மகள் நான் ...

தாத்தா வீட்டில்
தனியாக ...

(எனது தேடலைச் சுவாசி நுலிலிருந்து )

செப்டம்பர் 15, 2009

காஞ்சித் தலைவன் (அண்ணா)

வெண்பா

தறியோசை விஞ்சித் தமியோசைத் தந்த
அறிஞர் இவர்நமக்கு அண்ணன் -செறிவான

வாஞ்சையோடு சீர்த்தமிழை வார்த்தெடுத்த அண்ணாவை
காஞ்சித் தலைவனெனக் காண்.

புதுக் கவிதை

சிறியோரை தம்பியென
சீராட்டும் சீத்தலை .

பெரியாரின் பாசறையை
பிரிந்து வந்த பல்கலை .

இருமொழி வல்லமையில்
இவர் பெற்றார் முதுகலை .

எழில்கொஞ்சும் இவர்பேச்சு
எப்போதும் இளங்கலை .

பலநூறு நூல்படித்த
பைந்தமிழின் நுண்கலை .

இன்றைக்கும் காஞ்சிக்கு
இவரால்தான் உயர்நிலை .

செப்டம்பர் 13, 2009

நட்புடன் ஜமால் அழைக்க...அன்புடன் நான் எழுதும்


= அம்மா... என்னைச் சுமந்த

உயிர்க் கடவுள்.

= ஆசை ... குழந்தை குங்குமப்பூ

= இந்தியா ... பகையோடு கூட்டு சேர்ந்து ,

சொந்தகாரர்களை கொன்ற நாடு.

= ஈகத்தில் வியந்தது ... நாட்டுக்காக

உயிராயுதமாய் மாறிய ஈழத்தமிழன் .

= உண்மையானது ... என் மனைவியின்

அன்பும் நட்பும் காதலும் .

= ஊரறிந்த ரகசியம் ... கலைஞர் ...

தாத்தாவின் உண்ணாவிரதம் .

= எதிர்ப்பது ... விளைநிலங்களை

விலைநிலங்களாக மாறுவதை .

= ஏற்பது ... தன்மானத்திற்கு

இழுக்கில்லா எதையும் .

= ஐந்தினையில் பிடித்தது ...

"முல்லை ".

= ஒலியில் சிறந்தது ... என்

கிராமத்து தாவணிச் சிட்டுகளின்

மருதாணி காலில் கொஞ்சும் கொலுசொலி .

= ஓட்டு எனப்படுவது ... விரலிலும்

மக்கள் விடியலிலும் கறைப்படிந்த கருப்பு .

ஒள = ஒளவ்வபோது நினைவுக்குள் ...

கம்பிச் சிறைக்குள் கரையும் தமிழினம் .

=ஃ இன் வலிமை ... உயிர்மெய் உருவாக்கத்திற்கான

உயிர் "மெய் ".

அழைத்தவர்களுக்கு நட்புடன் ஜமால் , சத்ரியன்

நன்றி

நான் அழைப்பது : கண்ணன் , மற்றும் பா. ரா ,

மற்றவரெல்லாம் எழுதிவிட்டதால் ...

அடுத்தவர் தொடரலாம் .... நன்றி வணக்கம் ...

அன்புடன் நான் சி.கருணாகரசு .

செப்டம்பர் 08, 2009

நாட்காட்டி

ஒருவருட
ஒப்பந்த பாஞ்சாலி.
*
(எனது தேடலைச் சுவாசி நுலிலிருந்து )

செப்டம்பர் 05, 2009

மாலை

பகலுக்கும் இரவுக்கும் பாலம் !
பகலவன் பாய்விரிக்கும் காலம் !

(எனது தேடலைச் சுவாசி நூலிலிருந்து)

செப்டம்பர் 03, 2009

மனித நேயம்சோறின்றிச் சுருங்கிய
சோமாலியர் உடலில் ...
வரைகின்றன எலும்புகள்
வறுமைக் கோடுகளை .
அவர்கள் ...
பசியால் உயிர் கரைவதை
பார்த்தும் ...மனம் கரையா
பணக்கார நாடுகள் !

முள்வேலிக்குள் மூச்சுத் திணறும்
மூன்று நூராயிரம் தமிழ்ர்கள்
மரணத்தின் விளிம்பில்
மனம் வெதும்பி
காப்பாற்றுங்கள் என
கதறும் அந்த
ஈழத்தின் இன்னலை
காதில் ஏற்காது
கடமையாற்றும் நாடுகள் !.

ஒருவனுக்கு உணவில்லையேல்
உலகையே அழிக்கச் சொன்ன
பாரதி பிறந்த
பாரத நாட்டில்
சாகக்கிடக்கும் கிழவரைச்
சாக்கில் கட்டி ...
சுடுகாட்டில் வீசிய
சொந்தங்கள் !

இப்படியே ... நீளும்
இழிச் செயலால்
இன்று நான் தேடுவது ...
மனிதருக்குள்
"மனித நேயம் "
(கடற்கரைச் சாலை கவிமாலை போட்டிக்கு எழுதியது ... ஓகஸ்ட் - 2009 )

செப்டம்பர் 02, 2009

நெருப்பினில் தெரியும் நிலவு முகம்

நெஞ்சுரம் நேர்மையோடு நேர்க்கோட்டில் நின்றெழுதி
வஞ்சமதை வேரறுக்கும் வர்க்கமது -அஞ்சா
கருத்தியல்பைக் கொண்ட கவிஞன் முகமே
நெருப்பில் தெரியும் நிலவு .

(கவிமாலை போட்டிக் கவிதை யூலை- 2009 )

செப்டம்பர் 01, 2009

முத்தம் ?!

என்னைப் பார்த்துக்
கையசைத்து
கண் சிமிட்டுகிறது .

என் பார்வையும்
அந்த முகத்திலேயே
நிலைகுத்தி நின்றுவிட்டது .

என் மனம்
சிறகைப் பூட்டிக்கொண்டது .
கை கோர்த்து
கனவில் மிதக்கிறேன் ...
இல்லை பறக்கிறேன் .

மின்னலாய் ஓர் ஆசை
அந்த மெல்லிய கன்னத்தில்
ஒரு ...முத்தமாவது ...

முன்னனுபவம் இல்லை
பதற்றமாகவும் இருக்கிறது
பார்த்து விடுவார்களோ ...என்று

... ... ...
பார்த்துக் கொண்டே
பயணிக்கிறேன் .

பேருந்தின்
முன்னிருக்கையிலிருந்து
பின்னால் இருக்கும்
என்னைப் பார்த்து
கையசைத்து
கண்சிமிட்டும் ...
அந்தக் குழந்தையை !.

(எனது "தேடலைச் சுவாசி" நுலிலிருந்து )


ஆகஸ்ட் 31, 2009

விடியும் உன் கிழக்கு

காலம் கனியுமென்றோ
கதவு திறக்குமென்றோ
காத்து கிடக்காதே தோழா !-வாழ்வு
கணத்தில் ஆகிவிடும் பாழாய் !!
*
சோர்ந்து கிடக்காமல்
சுகமெனப் படுக்காமல்
கடமை ஆற்றிடு நீயும் !-அன்றோ
கஷ்டமெல்லாம் ஓயும் !!
*
சொந்த உழைப்பினில்
சிந்தும் வியர்வையில்
புதைந்து இருக்குது வெற்றி !-அதை
புதையலென எடு வெட்டி !!
*
தடைகள் இருக்கலாம்
தவறும் நிகழலாம்
விவேகமாக ஒதுக்கு !-அதனால்
விடியும் உன்றன் கிழக்கு!!
*
கவலை இல்லாமல்
முதுமையைக் கழிக்க
உனக்காகவும் சேமி !-செய்தால்
உறவுக்கு நீயே சாமி !!
*
(எனது தேடலைச் சுவாசி புத்தகத்திலிருந்து )

ஆகஸ்ட் 28, 2009

எப்படி?

கணவன் மனைவிக்குள்
கருத்து வேறுபாடு
ஒத்துப் போகாத மனங்கள்
ஒத்து போயின
"மணவிலக்கு" பெற !
(எனது தேடலைச் சுவாசி புத்தகத்திலிருந்து )

ஆகஸ்ட் 27, 2009

தண்ணீர்


காலம் கசக்கி எறிந்த
கந்தல் துணியாய்
கட்டிலில் அவர் .
@
அசையா உடலில்
அசைவது விழிகள்மட்டும் .
அதுதான் ...
உயிர் இருப்பதற்கான
ஒரே அடையாளம் .
@
வெளியூர்ப் பயணம்
வேண்டாமாம் இன்றைக்கு
சில பெருசுகளின் வேண்டுகோள் .
@
பத்து நாளாய் இப்படிதான்
பொழப்பு கெடுது...
சிலரின் ஆதங்கம் .
@
இன்றைக்கு எப்படியும்
முடிந்து விடும் ...
நம்பிக்கையோடுச் சிலர் .
@
எதிர்பார்ப்பு ...
எப்படி இருப்பினும் ,
நொறுங்கிய மனதுடன்
நெருங்கிய உறவுகள்
ஊற்றிக் கொண்டுதானிருக்கின்றன
உயிர்த் தண்ணீர் !

ஆகஸ்ட் 26, 2009

திணை வினை

தனித்து நிற்கும் மரங்கள்
கைகுலுக்குகின்றன ...
கிளைகளை விரித்து !

நெருக்கமாய் மனிதன்
தனித்து வாழ்கிறான் ...
மனமதைச் சுருக்கி !!

( எனது தேடலைச் சுவாசி புத்தகத்திலிருந்து )

ஆகஸ்ட் 24, 2009

பசி


வளர்ந்த தேசத்தால்
ஒடுக்கப்பட்டவன்!

வறுமை தேசத்தின்
சர்வாரதிகாரி!!(எனது தேடலைச் சுவாசி புத்தகத்திலிருந்து)

ஆகஸ்ட் 21, 2009

ராசிக்கல்


நம்பிக்கை இழந்தவனை
நம்பி வாழ்கிறான்
ராசிக்கல் வியபாரி!
(எனது தேடலைச் சுவாசி புத்தகத்திலிருந்து )
.

ஆகஸ்ட் 20, 2009

வேடதாரிகள்!

புன்னகையை உதட்டோரம் ஒட்டி வைத்து
*** புனிதரென காட்டிடவே நடித்து வைப்பார்
வன்மத்தை இதயத்தில் மறைத்து வைத்து
***வாஞ்சையோடு பேசுவதை தொழிலாய்க் கொள்வர்
சன்மானம் கிடைக்கின்ற இடங்கள் எல்லாம்
***தன்மானம் இழந்திடவும் காத்து நிற்பர்
இன்முகத்தை வேடமாக அணிந்துச் செல்லும்
*** இவர்போன்ற மனிதரிடம் கவனம் தேவை !

*
அக்கறையும் சர்க்கரையும் பேச்சில் உண்டு
*** அகம்பாவம் ஆணவமும் மூச்சில் உண்டு
வக்கிரத்தை வைத்திருப்பர் மூளைக் குள்ளே
*** வாக்கியத்தில் தெறிப்பதெல்லாம் பாச சொல்லே !
மக்களோடு மக்களாக வாழ நல்ல
***மானிடத்தை போர்வையாக ஆக்கிக் கொள்வர்
எக்கணமும் அரிதாரம் பூசிக் கொள்ளும்
***ஏமார்ந்தால் தலைமீது ஏறிக் கொல்லும்!

*
நல்விதமாய் பழகுவதாய் கைகள் கோர்க்கும்
***நரிபோல வஞ்சகமாய் நேரம் பார்க்கும்
வல்லவராய் தனைக்காட்ட வரிந்து பேசும்
***வசதிக்கு முன்மட்டும் வளைந்து போகும்
துல்லியமாய் கணக்கிட்டு தூண்டில் போடும்
***துடிக்கின்ற மீனுக்கும் இரங்கல் பாடும்
எல்லோர்க்கும் நல்லவராய் வேடம் போடும்
*** எச்சரிக்கை இருந்துவிட்டால் தப்பி ஓடும்
*
புத்தனென்றும் காந்தியென்றும் காட்டி கொண்டு
*** புத்தியிலே புரட்டுகளை தேக்கி வைக்கும்
சத்தியத்தின் அடிநாதம் தான்தான் என்று
***சத்தமாக பொய்யுரைத்தே காலம் தள்ளும்
கத்தியின்றி இரத்தமின்றி காயம் செய்யும்
***காரியத்தை உபத்தொழிலாய் நாளும் செய்யும்
உத்தமராய் முகமூடி அணிந்து வாழும்
***உயிர்க்கொல்லி இதுவென்று ஒதுங்கிச் செல்வீர் !

*
*
( எண்சீர் ஆசிரிய விருத்தம் )

ஆகஸ்ட் 18, 2009

கரம் கோர்ப்போம்... உயிர் மீட்போம் !

எமனோடு போராடுது
எழுதுகோல் பிடித்தகரம் !
எத்தனித்து மீட்டிடுமே
என்மினத்தின் உதவிக்கரம்!!

எழுவாய் அருள்வாய்
எம்மண்ணன் உயிர்க்காக்க !
ஏற்போம் கரம்கோர்ப்போம்
எமன்பிடியின் உயிர்மீட்க !!

சக வலைப்பதிவர் திரு.சிங்கை நாதன் அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சைக்காக 33 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.மேலும் தகவலுக்கு இங்கே செல்லுங்கள்.
பண உதவி செய்ய வேண்டிய முகவரி:
ICICI Account DetailsAccount Number: 612876559Name: M.KARUNANITHI Branch: TanjoreSingapore Account DetailsAccount Number: 130-42549-6 Name: Muthaiyan KarunanithiBank: DBS - POSB Savings
button="hori";
submit_url="http://guhankatturai.blogspot.com/2009/08/blog-post_16.html"

ஆகஸ்ட் 17, 2009

முரண்பாடு (பூக்கள் கொலை)


அவன் இறந்தான்
"பூக்கள் கொலை"
அஞ்சலிக்காக !
*
(எனது தேடலைச் சுவாசி புத்தகத்திலிருந்து )

ஆகஸ்ட் 16, 2009

உழவர் (விவசாயி)

மண்ணைக் இறையாய் மதித்து; அதுகுளிர
விண்ணையே பார்ப்பர் வெறித்தபடி! -கண்ணாய்
பயிர்க்காத்து பாரின் பசியினைப் போக்கும்
உயிராம் இவர்க்கு உழவு .

ஆகஸ்ட் 14, 2009

பால்சுரப்பி


கவிதைக்கு
பொய்தான் அழகு எனில்
இந்த கவிதை
அழகற்றதுதான்

எங்கள் துயரறிந்தால்
நெருப்புக்கும் கண்ணீர் சுரக்கும்
உலகத்த தலைவர்களை போல் – அதற்கு
மௌன மொழி தெரியாது

வாழ்விடங்களில்
குண்டுகளின் கொலைவீச்சால்
இரத்த பிசுபிசுப்பு

உயிர் அறுந்த
உடல்களை கடந்து
உயிர் இருந்த நாங்கள்
ஓடிவந்துவிட்டோம் காட்டிற்கு

தாகம் பசியைத் தவிர
தழுவிக்கொள்ள
ஏதுமில்லா நேரத்தில்
பேறுகால வலியால்
கதறி…. கதறி…. பின்
களைத்து உயிர் பிரிய
அவள்
பிணத்தை கிழித்து
பிள்ளையை எடுத்துவிட்டோம்

ஈர தொப்புள் கொடியும்
வறண்ட உதடுமாய்
சன்னமாய் அழுகிறது குழந்தை

ஏதுமில்லா காட்டில்
எங்களுக்கு சுரந்திருக்கலாம்
கண்ணீருக்கு பதில் ”பால்”

( இந்த கவிதை 5 மாதங்களுக்கு முன் எழுதியது . கவிதையின் கரு முற்றிலும் உண்மை ... திரு புலமைப்பித்தன்னின் ஊடக நேர்காணலில் கிடைத்த தகவலின்படி எழுதி வாசித்தேன் )

ஆகஸ்ட் 13, 2009

பாரினைக் காக்கும் பசுமை

இயற்கையை மீறிய
சாமி இல்லை
இயற்கையை மீறினால்
பூமி இல்லை .
*

நரப்புகள் சில உருவியபின்

நடமாடும் மனிதனைப் போல்

இயற்கையை இழந்த பூமி

இதயம் வெடிக்கிறது !

இரத்தம் வடிக்கிறது.!

*

இயற்கையைச் சிதைத்தால் ,

நம்மைப் புதைக்கும் பூமியவே

நாமே புதைக்க நேரிடும்!

*

இயற்கையை மதித்தால் _அந்த

பசுமை ஒன்றே _இந்த

பாரினை காக்க போரிடும் !

*


ஆகஸ்ட் 12, 2009

கல்


சிற்பிக்கு காகிதம்
சிலருக்கு ஆயுதம் !
*
(எனது "தேடலைச் சுவாசி" புத்தகத்திலிருந்து...)

ஆகஸ்ட் 11, 2009

பூந்தொட்டி (முரண்பாடு )

செடிக்குத் தண்ணீர்,
வேருக்கு எல்லை!
சிரிக்கிறது "பூந்தொட்டி "

(எனது "தேடலைச் சுவாசி " புத்தகத்திலிருந்து )

ஆகஸ்ட் 10, 2009

மரணம்


என்னையே ...நீ
நிழலாகச் சுற்றி வந்தாய்
நான் ...
வாழ்ந்தபோது .

நீ ,
எனக்குள் நுழைந்தபோது
நான் ...
வெறும் நிழலாகிப் போனேன் .

ஆம்
நீ ...
நிழலாக இருந்தபோது
நான் வாழ்ந்தேன் .
இன்று
நான் ...
நிழலாக கிடப்பதால்
நீ
வாழ்கிறாய் "மரணமே" !

ஆகஸ்ட் 08, 2009

புல்லாங்குழல்


இசையாய் வாழும் ...
"இரங்கற்பா"

*

ஆகஸ்ட் 07, 2009

பொதுவுடைமைப் படைப்பாளி


கழனியிலே...
பொதுவான உழைப்பாளி,
கவிதையிலே...
பொதுவுடைமைப் படைப்பாளி.
*
தன்மனதை...
கருப்பாகக் கொண்டவர்,
தன்மானத்தை...
இரும்பாகி நின்றவர்.
*
கவிஞர்...
இளமையிலே...
இறந்து போனவர்.
ஆனால்,
இமயமாய்...
இருந்து போனவர்.
*
*
( சிங்கப்பூரில், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கலை இலக்கிய விழா 2009 க்கான, கழனிக்கவி மலருக்கான என் கவிதை)

ஆகஸ்ட் 06, 2009

கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் )

அறம் பொருள் இன்பமென
வாழ்வை வகுத்து
எக்காலும் ஏற்புடையதை
ஈரடிக்குள் தொகுத்து
மந்தையாகாமல் மனிதனை
மனிதானாக்கும் இலக்கியம் !
*
இல்லற மேன்மையையும்
இனியவைக் கூறலையும்
இயல்பாய்ச் சொன்ன காவியம் !
*
காதலின் நெறி எது
கற்பின் செறிவெது வென்று
கவிதையில் சொன்னக் காப்பியம் !
*
நட்பின் உயர்வெது
நல்லோர் பண்பெது வென்று
நமக்குணர்த்தும் பொதுமறை !
*
நாடாளும் முறை எது
நாடள்வோர் நிறை எதுவென
நற்குடிக்கு சொன்ன தமிழ்மறை !
*
பசலைத் துயரத்தையும்
பழமை நட்பையும்
படைப்பில் அடக்கிய காவியம் !
*
குடிமை சிறப்பையும்
குற்றங் கடிதலையும்
குறளாய் தந்த ஓவியம் !
*
கல்லாமையின் சிறுமையையும்
கள்ளாமையின் பெருமையையும்
கல்வெட்டாக்கிய காப்பியம் !
*
புறங் கூறாமையையும்
பொறாமைக் கொள்ளாமையையும்
புரிய வைக்கும் இலக்கியம் !
*
வினைத் தூய்மை நாடவும்
விலைமாது தவிர்க்கவும்
விரும்பச் சொல்லும் படைப்பு !
*
சிற்றினம் சேராமையும்
செய்நன்றி மறவாமையையும்
செய்தியாய் தந்த சிற்பம் !
*
வாய்மையின் அழகையும்
வறுமையின் நிகழ்வையும்
வகுத்திட்ட இலக்கியம் !
*
பெருமை எதுவென்றும்
பேதைமை எதுவென்றும்
பிரித்து சொன்ன தமிழ்மறை !
*
வள்ளுவம் கற்றவன் சிறப்பான் !
மறைந்தாலும் ...அவன்
மற்றவர் நினைவில் இருப்பான் !.
*
*
(மலேசியாவில் 2005_ல் நடந்தேறிய முதலாவது உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாட்டி, உலக அளவில் வள்ளுவம் பற்றிய புதுக்கவிதைக்கான ஆறுதல் பறிசை வென்ற எனது கவிதை இது)
*
Related Posts with Thumbnails