ஜனவரி 31, 2011

மீனவர் வாழ்வு? (சீருடை மிருகம்)

ஓ........
சீருடைத் தரித்த
சீர்கெட்ட விலங்கே!


நீ...
தரையில் குடித்த
தமிழ் ரத்தம் போதாதென்றா
கடல் பக்கம்
நீட்டுகிறாய் உன்
நீண்ட நாக்கை?


எங்கள்...
ஓட்டு பொறுக்கிகளின்
மெத்தனத்தால்,
உயிர்பொறுக்கியாய் திரியும்
ஓநாய் கூடங்கள் நீங்கள்!


இன்று...
தன்மானம் பகை நெருப்பில்
எரிகிறது!
தமிழீழத்தின் அவசியம்
புரிகிறது!!


உலகே பகையை கண்டு கொள்!
உலகே பகையை கண்டுக் கொல்!!


எழுத்து... நான்,
இயக்கம்... மாணவன்,வெறும்பய(ஜெயந்த்) 

ஜனவரி 28, 2011

காலபோக்கில்....


கண்ணுக்கு தெரியும்
திருவிழா பொம்மைகள்
கைக்கு எட்டாத
ஏமாற்றம்!


உயிர் கொதிக்கும் 
பசிநேரத்திற்கு பின்னே
உலை கொதிக்கும்
காலதாமதம்!


அடிப்பட்ட சுவடோடு
எழுந்து நின்றாலும்
தொடர்ந்து கைகுலுக்கும்
தோல்வியின் முகவரி!


இப்படியாகச் சில
எம்வாழ்வில் சுழன்றடிக்க...
சூராவெளியிலும் வலைவீசும்
சூட்சமம் கற்றுகொண்டோம்.!
துயரங்கள் எதுவந்தாலும்
துணிவோடு எதிர்த்து நின்றோம்!


இன்றோ....


கண்ணுக்கு எட்டாததுகூட
கைகளில் தவழுது!


கால் அரை பசியின்றி
காலமும் கழியுது!


வெண்பஞ்சு பாதையிலே
வென்றிட துடிப்பதனால்...


மணல்திட்டை கூட
மலையென நினைக்குது!
மனசுக்குள் காயமென்றால்
மரணத்தையே வளைக்குது!


தென்றலுக்கே ஒடிந்துவிடும்
தழும்பில்லா தளிர்களே...!


காயங்களையும்.... 
கற்றுகொள்ளுங்கள்!
அது...
காலபோக்கில் வினைபுரியும்!
காலம்முழுதும் துணைபுரியும்!!


சென்ற ஆண்டு பதிவர் திரு சங்கவி எழுதிய ஒரு கட்டுரையின் பாதிப்பில் உருவானக் கவிதை.
நன்றி சங்கவி.

ஜனவரி 13, 2011

பொங்கல் கவியரங்கம், வானொலியில் நான்,

வணக்கம்.... அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.


சிங்கப்பூர் வானொலியில் பொங்கல் தின கவியரங்கம்..... அதில்...நான் பாடிய கவிதை
நான்கு நிமிடம்தான் கேளுங்க.....
ஜனவரி 06, 2011

முகம்

ஐம்புலன்களின் 
ஆட்சி பீடம்.
அசையும் தேசத்தின் 
தலைநகர்.
ஐந்தடிக் கவிதையின்
ஓரடித்தலைப்பு.
அக உணர்வை
பிரதிபலிக்கும்
புறக்கண்ணாடி.
உயர்திணை மரத்தின்
அதிசய உச்சிவேர்.
உடல் என்னும்
உறையில் எழுதிய
உயிர் முகவரி.
...
இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.


  (எனது தேடலைச் சுவாசி நூலிலிருந்து)

Related Posts with Thumbnails