ஜூன் 25, 2010

சிட்டுக்குருவி

எங்கும் நீ ,
தானியத்திலிருந்து ... விரட்டினேன் !


எங்கே நீ ?
தானியத்தோடு ... விரட்டுகிறேன் !!


(அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்திற்கு காணிக்கை )


ஜூன் 18, 2010

பாறை உடைக்கும் பனிப் பூக்கள்

தங்கமே எனச் சொல்லி
தாலாட்ட எவருமில்லை
செல்லமே எனச் சொல்லி
சீராட்ட ஆளுமில்லை .

ஆசையாய் பொம்மைக்கேட்டு
அடம் பிடித்து அழவில்லை
பசி வந்து எனைவாட்ட
பால் கேட்டு அழுகின்றேன்

பச்சிளம் குழந்தை என்றா
பசி விலகி ஓடிவிடும் ?
வறுமைக்கு மரணமென்றால் _என்
வருத்தங்கள் ஓடிவிடும் .

விண்முட்டும் விஞ்ஞானம்
வீதியெல்லாம் நடத்துறாங்க
விதியோட போராடும் _என்மை
வேடிக்கை பாக்குறாங்க .

கல்வியை தரச்சொல்லி
கால்பிடித்து நிக்கலிங்க
கால் வயிற்றை ஈரமாக்கி _எம்
கண்ணீரை நிறுத்திடுங்க .

எனக்காக கல் உடைக்கும்
என்னோட பிறந்தவளே !
உனக்கு நான் உதவிட
உடல் வலிமை போதலியே .

கருவறைக்குள்ளேயே ... நான்
கரைந்து போயிருந்தால் ,
கஷ்டமும் உனக்கில்லை
கண்ணீரும் எனக்கில்லை .

பனிப் பூ கைப்பட்டு
பாறையது உடைகிறதே _ இதை
பார்க்கின்ற மனிதகுலம்
பாறைப்போல் கிடக்கிறதே !

( ஆறு ஆண்டுகளுக்கு முன்... சிங்கப்பூர் கவிச்சோலையில் இந்த படத்திற்கு கவிதை போட்டி நடைப்பெற்றது .... அப்போது நான் எழுதிய கவிதை இது .... பரிசு பெற வில்லை )

ஜூன் 11, 2010

பொதி ஏற்றிகள்!


கணினி வகுப்பு
நீச்சல் பயிற்சி
பாட்டு வகுப்பு
நடன பயிற்சி
துணைப்பாட வகுப்பு
வீட்டு பாடம்...என
சுழற்சி முறையில்
கசக்கி பிழிந்து,
பாரமேற்றி
பாடசாலைக்கு அனுப்பும்...

பொதியேற்றிகளே!

குழந்தைகளை...
படிக்க வையுங்கள்
"படுத்தி" வைக்காதீர்கள்.
Related Posts with Thumbnails