மே 31, 2010

கதவு

யதார்த்தச் சுழலின்
புரிதலற்ற கோட்பாடுகளும் ,

நிகழும் இந்த நிமிடத்தின்
நிறைகாணா பார்வைகளும் ,

உறவுக்கெதிராய்...
கதவடைத்து விடுகிறது .

வேகமாக ...
சாத்தப்படும் கதவின் இடுக்கில்
பிஞ்சு விரல்கள் ....!
அதுதான் ,
பிசைகிறது மனதை .

(மறைந்த என் அண்ணன் திரு சி.திருவேங்கடம் அவர்களின் மகன் தி.தமிழ் உண்மை சிந்து ... அரசு பொது தேர்வில் 448 மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற்றுள்ளான் )

மகன் தமிழுக்கு...
உன்னிடம் வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துக் கொள்ள இயலாத உறவுநிலையில் என் (எங்கள் ) பரிதவிப்பின் வெளிபாடு இது.

உன்னிடம் சொல்ல முடியவில்லை !
உலகறிய சொல்கிறேன் வாழ்த்துக்கள் மகனே !!
(இதை யார் தடுக்க முடியும் )

உலக நண்பர்களே நீங்களும் வாழ்த்துங்கள் எங்கள் செல்வத்தை !!

மே 26, 2010

உறவுகள்

உறவு...
ஓர் அழகிய ... கவிதை .

கவிதையின் அழகில்
நிறையப் பொய்கள் !


(எனது தேடலைச் சுவாசி நூலிலிருந்து )

மே 17, 2010

துயரம் வயது -1

துரோகம்...
உயிர்களை அறுவடைச்செய்து
ஓராண்டாகிறது .

உறவுயிர்களின் இரத்தம் ...
மண்ணில் உறைந்துவிட்டது
மனதில்தான் பிசுபிசுக்கிறது !.

மே 12, 2010

முதல் குழந்தை !


யாருக்கும் தெரியாமலே
ஒளித்து வைத்திருந்தேன்
பதின்ம வயதிலேயே
துளிர்விட்ட ... "அந்த "
என் காதலை .
@
அடங்காத என் ஆசையால்
அந்த பருவத்திலேயே
நிறைய கருக்கலைப்புகளும்
நிறைய கருச்சிதைவுகளும்
நிகழ்ந்தப்படியே இருந்தன .
@

அதற்கான
அச்சத்தையோ
அவமானத்தையோ
உணரவில்லை நான் !
@

ஆயிரம் முயற்ச்சிக்கு பின்
அதே பதின்ம வயதில்
பெற்றெடுத்து விட்டேன் ...
"கவிதை"யாகிய
என்
முதல் குழந்தையை .
@


( கவிமாலை போட்டிக்கு எழுதிய கவிதை ... ஜனவரி 2010 )

மே 07, 2010

அன்னையர் தினம் ?!

அனுதினமும்
போற்றவேண்டிய
அன்னைக்கு ...
ஒரு தினம் ஒதுக்கிய
உத்தமர்களே !

நீங்கள் ....
அனுசரிக்க வேண்டாம்
அன்னையர் தினத்தை !
மூடினால் போதும்
முதியோர் இல்லங்களை .


(எனது தேடலைச்சுவாசி நூலிலிருந்து )
Related Posts with Thumbnails