மார்ச் 27, 2014

கவிதைப் பட்டிமன்றம்

வணக்கம்...

2010 ல் சிங்கப்பூர் தமிழ்மொழி மாதம் நிறைவுநாள் விழாவில், கவிமாலை நிகழ்த்திய "தற்காலத் தமிழ்வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநிற்பது... மரபுகவிதைகளே! புதுக்கவிதைகளே!" என்னும் தலைப்பில்.... நடந்த "கவிதை பட்டிமன்றத்தில்" நான் மரபுக்கு ஆதரவாய் கவிதை பேசிய காணொளி.

மார்ச் 23, 2014

கிணற்றுத் தவளை

அன்றொரு நாள் 
விற்பனைப் பொருளுடன்
வீட்டிற்கு வந்திருந்தனர்
வியாபாரிகள் .


விருந்து உபசரிப்புக்கு பின்
விற்பனை பொருளின்
தரம் பேசப்பட்டு
தரத்திற்கு ஏற்றார்போல்
விலை பேசப்பட்டது.

கடைசிக்கட்ட பேச்சுவார்த்தையில்
தரகனின் பேரம்
இருதரப்பினராலும்
ஏற்கப்பட்டது.

பேசப்பட்ட அளவில்
வாங்கியவர்
கொடுத்தனுப்பினார்
பணம்
பாத்திரம்
வாகனம்
நகை
இருபத்தொரு வயது மகள்.

'கிணற்றுத் தவளை' யாகிப்போனது
இருபத்தொரு ஆண்டுகள்
சிறகடித்த உயிர் ஒன்று.

மார்ச் 10, 2014

காதல் தின்றவன் - 49


உன்மீதான
காதலை புதைத்தேன்.
அது
கவிதையாய் முளைக்கிறது.

மார்ச் 02, 2014

கண்மணி குணசேகரனின் “அஞ்சலை”

கண்மணி குணசேகரனின்
“அஞ்சலை” (நாவல்)
தமிழினி வெளியீடு.

அண்ணன் கண்மணி குணசேகரனின் “அஞ்சலை” 320 பக்கங்களை கொண்ட நாவல். இதை ஒரு வாரத்தில் படித்தேன். ஒரே மூச்சில் படித்து முடிக்கும் பழக்கம் எனக்கில்லை, நாவலின் உணர்ச்சியயை உள்வாங்கிக்கொண்டு அதில் என்னையும் திணித்துக்கொண்டே படித்து பயணிப்பது என் வழக்கம்.

இதை வெறுமனே சிறந்த புத்தகம் என்றோ அருமையானக் கதையென்றோ போகிற போக்கில் சொல்லிபோக முடியாது. இது விருத்தாசலம்,திட்டக்குடி,பெண்ணாடம் பகுதியை ஒட்டிய எளிய மக்களின் வாழ்வியல். அவர்கள் பேச்சு மொழியாகவே நாவல் நகர்கிறது.

ஒரு முப்பது மைல்களுக்குள்ளே சுழலும் கதையில், காலம் அஞ்சலை என்னும் பாத்திரத்தை எப்படியெல்லாம் உருட்டுகிறது? தென்றலாய் தழுவும் காலமே அஞ்சலையை சூராவளிக்குள் இழுத்துச் செல்கிறது. அஞ்சலையின் வாழ்வில் குறுக்கிட்டு விளையாடிய சின்னக்காவூட்டுக் காரன்,புருசனாட்டம் வந்தவன்,புருசனா வந்தவன்,புருசன் வேசம் போட்டவன் தாங்குவான்னு நெனச்ச தம்பி மற்றும் பெரியக்காகரியின் சுய நல தந்திரம், அரவனைக்கும் சின்னக்காகாரி தாய் பாக்கியம் மற்றும் வள்ளி, எப்போதும் அழுத்திகொண்டிருக்கும் வெண்ணிலா நெனப்பு, ஊர் சனங்களின் சாடை பேச்சு. இதையெல்லாம் மீறிய அஞ்சலையின் நகர்வு அப்பப்பா என்னடா வாழ்க்கைன்னு படிக்கும் போதே மிரட்டுற எழுத்து. படித்த பின்னும் இன்னைக்கும் நிலாப்புள்ள வாழ்க்கை கரையேறி இருக்குமா? அஞ்சயா, செல்வி வாழ்க்கையாவது வசப்பட்டிருக்குமா?புருசன் மண்ணாங்கட்டியும் பழையப்படி அனுசரனையா இருப்பனா? அந்த பாவப்பட்ட மண்ணில அஞ்சலை இறுதி சுகப்பட்டதா? என மனதை கருக்கறுவாளால் கொண்டு அறுத்துகொண்டிருக்கிறது.

திறன்மிகு படைப்பாளர் கண்மணி குணசேகரன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
Related Posts with Thumbnails