ஜூலை 30, 2009

" நான் "


நான் ,
உங்கள் வாழ்வின்
ஆதார அச்சாணி .
*
நான் இல்லையேல்
"சுழியம்" தான்
உங்கள் வாழ்வு .
*
என் ,
கணையம் , கல்லீரல்
இதயம் அத்தனையையும்
கனிம வளங்களென
சுரண்டி தின்கின்றீர்கள்
*
என் இரத்தத்தை
ஆழ்துளைக் குழாய்மூலம்
உறிஞ்சியப்பின் ...
நூரையீரலைப் பிடுங்கி
வாயுக் கலன்களில் அடைத்து
வசதியாய் வாழ்கின்றீர்கள்.
*
எலும்பைப் போர்த்திய தோலாய்
ஏதோ இருக்கிறேன் .
என்னை ,
உங்கள் வாரிசுகளுக்கு
"சொத்தையாய் " வைக்காமல்
"சொத்தாய் " வைத்துச்செல்லுங்கள்.
*
இன்னுமா புரியவில்லை ...
நீங்கள் உதைத்து விளையாடும்
இன்றைய ... "பூமி நான் ".

ஜூலை 28, 2009

பொன்னாடை!!

வெப்பத்தில் கருகும் நாம்
போர்த்துவதும் ,
போர்த்திக்கொள்வதும் ஏனென
புரியவில்லை எனக்கு .
*
அரங்கம் அதிரவே
அறிவிக்கின்றார்கள்
"பொன்னாடை" என்று .
*
அவை ,
பொன்னாடைகள் அல்ல
புகைப்படத்திற்கான
"பொய்"யாடைகள்.
*
ஈரம்கூட உறிஞ்சாத
இது ,
பாவிப்பதெதற்கும்...
பயனற்றது .
*
இருந்தும் ...
போர்த்தப்பட்டு
மடிப்பு கலையாமல்
மடித்து வைக்கப்படுகிறது .
இன்னொரு நிகழ்வில் ...
இன்னொருவருக்கு ,
போர்த்தவும்...
புகைப்படம் எடுக்கவும் .
*
இதை வாங்குவது ...
வீண் என்பேன்
இதற்கென ஏங்குவது ...
ஏன் என்பேன் ?.

ஜூலை 27, 2009

மதிப்பீடு

வறுமைத் தின்ற பாரதிக்கு
வாய்க்கரிசி போடாத சமூகம்
அவனின் ...
கோபத்தை இன்று
கொண்டாடிக் கொண்டிருக்கிறது .
*
அலுமினியத்தில் இருக்கும்
அட்சயப் பாத்திரத்தை விட
தங்கத்தில் இருக்கும்
திருவோட்டைத்தான் மதிக்கிறது
*
மாலைக்கு ஏங்கும்
தினவெடுத்த தோள்கள்
பிணமாகவும் உடன்படுகிறது .
*
கர்ணன் வள்ளல் என்பதால்
கவச குண்டலங்களை
கவர்வது முறையா ?
*
கலைவடிவங்களுக்கு
கண்மை தீட்ட _ அதன்
கருவிழியை கேட்பது தகுமா ?
*
வாலாட்டத் தெரியாதவர்களே !
உங்களுக்கு ...
பாராட்டு என்பது
பகல் கனவே .
*
எச்சரிக்கையாய் இருங்கள்
இங்கே...
எல்லோரவிலும்
எச்சில் துப்புகின்றவர்களே
ஏகமாய் அலைகிறார்கள் .

ஜூலை 25, 2009

மழை

மழையை ,
கண்ணீர் என்றீர் ...
கவிதை கோணத்தில் .
கைக்குட்டை என்கிறேன் ...
வாழ்க்கை கோணத்தில் !!

ஜூலை 21, 2009

சோதிடம்


இது ,
நம்பிக்கையின் ...
அடர்த்தியை கெடுத்துவிடும் !
*
இதை ,
நம்பியோர் ...
முயற்சிகள் படுத்துவிடும் !!

ஜூலை 19, 2009

பாரதி

( வெண்பா )
சீரழிக்கும் கெட்டபல சிந்தனையை தன்கவியால்
வேரறுக்கும் வேகமுள்ள வேந்தனவன் _ சூரரையும்
வீரமுடன் சொற்களால் வெல்லும் தனித்திறனே
பாரதி கொண்டநல் பண்பு .

ஜூலை 18, 2009

தலையாட்டி பொம்மைகள்!


காதல் காலங்களில்
நீ ...
நிறைய ம்ம்ம்ம்ம்ம்ம்
*
காலம் கடந்து
கணவனாக நான் ...
நிறைய ம்ம்ம்ம்ம்ம்ம்
*
தருணங்கள் மாற்றிய
தலையாட்டி பொம்மைகளாய் ,
நாம் .

ஜூலை 17, 2009

நல்வரவு !


வாசல் மிதியடியில் ...
"நல்வரவு".
*
நசுக்கப்பட்டது நல்வரவு !
உறவுகள் வந்துச்சென்றதால் !

ஜூலை 16, 2009

காதல் பேசிகள்


உலகப் பந்தின்
இருவேறு திசைகளிலிருந்து
நீயும் நானும்
காதல் பேசிகளானோம்.
*
கடிகார நிமிடமுள்
சில வட்டமடிக்க ,
அலைப்பேசி மின்கலன்
சக்தி இழக்க,
ஏதேதோ ...
பேசி களித்தோம் ,
ஏதேதோ ...
பேசி களைத்தோம் .
*
இறுதியாய் ,
எதைப் பேச மறந்தோம் ...
எதைப் பேசி மறந்தோம் ...
இருவருக்கும் தெரியவில்லை! .
*
இருந்தும்
தொடர்பைத் துண்டித்து ,
தயாராகிறோம் ...
நாளைய ...
அலைபேசி அழைப்புக்காக .

ஜூலை 14, 2009

எண் கணிதம்


எண் கணிதம் ...
பெயரை மட்டுமே மாற்றும் !
எண்ணக் கணிதமே ...
வாழ்வை முன்னேற்றும் !!
*
எண்கள் வெறும் குறியீடு!
எண்ணம் என்பதே மதிப்பீடு !!

ஜூலை 13, 2009

இரட்டை மரணம்


வயது உடம்பை வளைக்கிறது!
வயிறு மரணத்தை இழுக்கிறது .
*
உறவெல்லாம் ...
எங்கேன்னு புரியலையே,
என் உயிர் எப்போ
போகுமுன்னும் தெரியலையே .
*
பட்டுன்னு செத்துப்போனா
ஒற்றை மரணம் !- நான்
பட்டினியால் சாவதுதான்
இரட்டை மரணம் !!
******
(போர் காலத்தில் வெளியான இந்த படத்திற்கு .... சிங்கப்பூர் நாளிதழ்க்கு நான் எழுதிய கவிதை )

ஜூலை 11, 2009

போருக்குப்பின்...

அந்த இடிந்த வீட்டை
சுற்றிச் சுற்றி வந்தது .
*
முறிந்து கிடந்த கட்டிலை
முகர்ந்து பார்த்தது .
*
பின்
வாசலில் நின்று
உள்ளே பார்த்து குறைத்தது .
*
இப்போது ,
வீட்டோரமாய்
படுத்துக் கிடக்கிறது .
*
தன்னைப் போல்
அவர்களும் ...
திரும்புவார்கள் என்று !
*
அந்த,
நாய்க்குட்டிக்கு சொல்வதெப்படி
நாடறிந்த உண்மையை ?.

ஜூலை 10, 2009

மறுநடவு (திரு நங்கை)


எங்களை மதிக்க வேண்டாம்
உங்கள் கால்களை கொஞ்சம் ...
நகர்த்துங்கள் போதும் .
உங்கள் ...செருப்பின் கீழ்
மிதிப்பட்டு - உயிர்
அறுப்பட்டு கிடக்கின்றோம் .
*** ***
இந்த பிரபஞ்சத்தின்
எத்தனையோ பிரமாண்ட
வளர்ச்சிக் கண்ட ,
"உங்கள் அறிவு "
எங்களை மட்டும்
சாக்கடையின் மிதவையாகவே
சபித்துக் கொண்டிருப்பதுதான்
புரியவில்லை !
*** ***
எங்கள் துயர்துடைக்க
எத்தனிக்காத நீங்கள் ...
எங்களை ...
அருவெறுத்து ஒதுக்க
அருகதை அற்றவர்கள் .
*** ***
எங்களை
உயிர் பிண்டமாக கூட
மதிக்காத
உங்கள் புத்திக்கு
எங்களை ,
கேவலமான அடைமொழிகளால்
கீறுவதுதான் இன்பம் !
*** ***
சராசரி சமுதாயத்தின்
சாடல் கிடக்கட்டும் ...
பேனா பிடிக்கும்
பிதா மகன்களே !
நீங்களேனும்,
திருத்தி எழுதுங்களேன்
எங்களை ...
"திரு நங்கை " என்று .
*** ***
ஏனெனில் ,
மனிதர்களில்
"மறுநடவு " செய்யப்பட ...
எங்களுக்கு ,
அதுதான் ஓர்
அழகியல் அங்கிகாரம் .
************************

ஜூலை 09, 2009

சகுனம்

இது ,
சாதனைப் பாதையின்
வேகத்தடை !.
***
புது ,
சரித்திரம் படைத்திட
சகுனத்தை உடை !!.


ஜூலை 08, 2009

போதி


அட ... மானிடா ,
ஆட்டம் ஏனடா ?
அந்தம் வெறுமையென
போதிக்கும் ... "போதி "

ஜூலை 07, 2009

கருப்புத்தொழில்

நிலப்பரப்பு அனைத்தையும் _ தன்
நிழலுக்குள் அடக்கிடும்
பேராசையில் ...
வறுமை வாழும் நாடுகளில்
"வணிகர்" வேடம்தரித்து ,
உள்நுழைந்து
ஊடுறுவி
உரிமை சில பெற்று

பின்

ஆளுமைகளிலும் ஆக்கிரமித்து

ஆட்சியையும் அபகரித்து

அனைத்தையும் சுரண்டும் ...

அந்த ,

"கருப்புத்தொழிலே " ...

அன்றைய ,

வெள்ளை மனிதருக்கு !

ஜூலை 06, 2009

அழகின் சிரிப்பு






எதிர்பார்போடு வந்திருப்பான்


என்றெண்ணி...


அவசரமாய் விடைபெரும்போதும்.



இவனால் நமக்கேதும்


இல்லையே ஆதாயம்


என்றே விலகும்போது...



அவனால் முடியும் என்று


அன்பொழுக காய் நகர்த்தி


அரவணைப்பாய் நெருங்கும்போது...



இப்படி,


பலரால்


பலமுறை - நான்


பார்த்திட்டதெல்லாம்


உணர்வு வற்றிய


தன்னல சிரிப்புதான்.



எத்தனை வளர்ந்த பின்னும்


என்னை கண்டு பூரித்து


பூத்திட்ட சிரிபோன்று


ஆறு ஆண்டுகளாய்


தேங்கியே கிடக்கிறது.


என்...


நெஞ்சிலும்


நிழற்படத்திலும்



அந்த...


அழகின் சிரிப்பு - என்


அம்மாவின் சிரிப்பு.

ஜூலை 04, 2009

பயணம்


துளிகலெல்லாம் ஒன்றாகி
நீரோட்டமாய் உருபெற்று
உலக வெப்பம் தணித்து
உழவர் ஏக்கம் போக்கி
பாதையெல்லாம் ஈரமாக்கி
பயிரையெல்லாம் இதமாக்கி
தாக‌ம் தீர்த்து,
த‌ர‌ணிச்செழிக்க‌... ... ...
வளைந்து...
நெளிந்து...
ச‌ல‌ச‌ல‌த்து...
பாய்ந்து...
தேங்கி...
நிர‌ப்பி...
விழுந்து...
வ‌ழிந்து...
ந‌க‌ர்ந்து...
த‌ன் பாதை முழுதும்
வ‌ச‌ந்த‌த்தை
விதைத்து செல்லும‌தில்...
உன‌க்கும் பாட‌மிருக்கு
உற்றுக்கவனி மனிதா.
அந்த
மெல்லிய நீரோட்டத்தின்
மெய்சிலிர்க்கும் பயனணத்தை!

ஜூலை 02, 2009

ராசிபலன்

கைரேகை பார்த்தால்...
நீ வெட்டி !
உன் கைரேகை
தேய்ந்தால் தான் வெற்றி!!

ஜூலை 01, 2009

ஈழ தமிழச்சி




எம்மினப் பெண்களுக்கு


மரணம் பற்றிய பயமில்லை



பயமெல்லாம்...




மானத்தோடு


மரிப்போமா? என்பதில்தான்
Related Posts with Thumbnails