விடியலுக்கு என்று
ஓர் பொழுது இல்லை,
விடியலே இல்லாது
ஓர் பொழுதும் இல்லை.
தகிக்கும் வெயிலில்
வேகும் மனதிற்கு
தென்றலாய் அமையும்,
நிம்மதிக்கு பெயர் விடியலே.
அடர்ந்த வாழ்வில்
காற்றோட்டமாய் அமையும்
பொழுதுகள் அத்தனையிலும்
விடியல்கள்,
திளைக்கும் கிளைக்கும்.
அந்திக்குப் பின்
இருள் கவ்வும் பொழுதுகூட
நட்சத்திரங்களுக்கான
விடியல்தான்.
விடியலுக்கு என்று
ஓர் பொழுது இல்லை,
விடியலே இல்லாது
ஓர் பொழுதும் இல்லை.
இறந்த உறவுக்கு அஞ்சலி
இறைவா நீ
இருந்தால் எதிரிக்கு நஞ்சளி.
மேலை நாட்டு
நாகரிகத்திற்கு
உட்படுத்திக்கொண்டோம்.
திணிக்கப்பட்ட பண்பாடுகள்
பழக்கமாகிவிட்டது இப்போது.
பத்தாண்டுகால இடைவெளியில்
வாழ்க்கை கோப்பை
வசதிகளால் நிரம்பி வழிகிறது.
இலண்டன் மாநகரின்
வணிக வீதியில்
திடீரென மிரண்டு
நடுங்கியப்படி
தரையில் படுத்துக்கொண்ட
என் மகளை,
வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு
புரியவைப்பது எப்படி
உலங்கூர்தியின் சத்தத்தை.
விரட்டியடிக்கப்பட்ட
காயங்கள் இன்று
தழுக்புகள் ஆகிவிட்டது.
எந்த இடைவெளிகளும்
வடிகால் ஆவதில்லை
இருப்பிடம் துறந்த
எங்கள் துயரத்திற்கு.