ஜூன் 28, 2009

இப்படிக்கு...ஈழத்தமிழன்


செயற்கை கோள்கள்
அனுப்பும் நாடுகளே !
அனுப்ப இயலுமா ...
எங்களுக்கு கொஞ்சம்
செயற்கை கால்கள் ?


பின் குறிப்பு ,
இந்தியாவிடமிருந்து மட்டும்
எதுவும் வேண்டாம் !


இப்படிக்கு...
ஈழத்தமிழன்.

ஜூன் 26, 2009

பயங்கரவாதம்!

பயங்கரவாதம் ...
தேவைதான்!


அழகாய்
அடர்த்தியாய்
பூத்துக் குலுங்கி
புன்னகைக்கும் ...
சமூதாய வனத்தின்,
கிளைகளை ஒடித்து
கூடுகளை அழித்து
சிறகை பிய்த்து _ அதன்
இறகால் ...
காது குடைந்து
இன்பம் துய்க்கும் _ அந்த
காட்டுமிராண்டிகளின்
கைக்கால் விளங்காது போக
கட்டாயம் தேவைதான்
பயங்கர "வாதம்"

ஜூன் 25, 2009

ஈழத்தில்...


யார் மரணம்
பூசியதோ ... ... ...
சிவப்புச் சாயம் .


நான் வளர்த்த
முல்லைக் கொடியில்
சிவப்பு பூக்கள்

ஜூன் 24, 2009

மொழியும் விழியும்

மொழிக்கும்

விழிக்கும்

வித்தியாசம் அதிகமில்லை !

இரண்டும்...

பேசும் இயல்புடையவை .

இரண்டுமே

"மை " எழுத

அழகு கூடும் .

மொழி ,

உலகிற்கு ...

உன்னைக் காட்டும் .

விழி ,

உலகை

உனக்கு காட்டும் .

விழி

மொழி

உடையவர் ...

வாழ்வு நிறையாகும்

விழியோ

மொழியோ

உடையவர் ...

வாழ்வு குறையாகும் .

ஜூன் 23, 2009

ஞாபகச்சுவடு


வளரும் நகத்தை
வெட்ட மனமில்லை ...


நீ வைத்த... மருதாணி.

ஜூன் 22, 2009

குங்குமப்பூ


ஏழெட்டு திங்களுக்கு
பிந்தைய நிகழ்வுதான் என்றாலும்
எழுதி வைத்திருந்தேன்
இருபாலினத்திலும்
உனக்கான பெயர்களை.
உன் வரவு
உறுதியானதிலிருத்து,
உலகம் பெரிதாய் இல்லை
என் மகிழ்ச்சியை விட.
உன் மென்மையை உணர
உன் அசைவுகளை ரசிக்க
உன் மொழியில் திளைக்க
காத்திருந்தேன் கனவுகளோடு.
பத்தாம் மாதம்
என் வானமாகமல்,
பத்து வார
வானவில் ஆனதேன்?
வந்துக்கொண்டே இருக்கும் _உன்
வரவுக்கான ...
வாழ்த்துக்களை என்னச்செய்ய?
இப்போதும்,
உலகம் பெரிதாய் இல்லை...
என் வலியை விட.
கொட்டிக் கிடக்கிறது...
குங்குமப்பூ.
சிரமப்பட்டுத்தான்
சிரிக்கிறேன் மற்றவர் முன்.

ஜூன் 19, 2009

பகுத்தறிவுஐந்தறிவு மிருகங்கள்
தாய்ப்பால்தான் புகட்டுது !

ஆறறிவு ... அழகைப்பேன
புட்டிப்பால் நீட்டுது !!

ஜூன் 18, 2009

செருப்பு

வைரம் பதித்த
மகுடத்தைவிட _என்
வாரறுந்த செருப்பே மேல் .
மகுடம் ...சுமையாகிறது ,
செருப்பு ...சுமந்து நிற்கிறது !

முகம்?

பக்திமானைச் சந்திக்க
நெற்றியில் பட்டை !
பகுத்தறிவாளனைச் சந்திக்க
கறுப்புச் சட்டை !!
அன்றாடம் ...
அரிதாரம் தவிர்த்து _ நீ
உலா வருவதெப்போ...
உன்முகத்தோடு?

ஜூன் 16, 2009

நந்தவன நாட்கள்???


இராணுவ வாகனத்தின்
மிரட்டல் சத்தம் ,
கொலைவெறிக் கொண்ட
குண்டுவீச்சு ,
ஆட்கடத்தல்,
மர்ம மரணம் ,
பொருள் அபகரிப்பு ,
கொலை மிரட்டல் ,
மானப்பங்கம் ,
வல்லுறவு ,
இனத்தாக்குதல் ,
உறுப்பு இழப்பு ,
பதுங்கு குழி நாடல் ,
இடப்பெயர்வு ...என
ஓரினம் தன்
வினாடிகளையும் கழிக்க
ஒரு தலைமுறைக்கு ...
கிட்டாமலே போனது
நந்தவன நாட்கள் .

ஜூன் 12, 2009

பூக்காதமரங்கள்


நீரை உறிஞ்சும்
வேரைப் போலே
பெற்றவரின்...
அன்பு , அரவணைப்பு
அவர் உழைப்பு என
அத்தனையும் உறிஞ்ச்சுவிட்டு
பின் ...
சொகுசு வாழ்விற்கு இவர்கள்
சுமையென ஒதுக்கும்
சுயநல விரும்பிகளே ,
பூமிக்கு பாரமான
"பூக்காத மரங்கள் " ஆவார்
பூக்காத மரமெனில்
நிழலாவது மிஞ்சும்! _இந்த
பொல்லா மனிதர்களால்
முதியோர் இல்லமே விஞ்சும் !!

ஜூன் 10, 2009

விதை

புதைத்தாலும்...பூக்கும்
பூவின்...கெட்டித்தேன்
விதை!
இதை...உனக்குள்ளும்
விதை!!

ஜூன் 07, 2009

சுயநலம்மண்புழு வளர்க்கிறோம்

மண்வளம் செழிக்க !

பட்டுப்புழுக்கள் அழிக்கிறோம்

பட்டாடையில் மினுக்க !!

Related Posts with Thumbnails