பிப்ரவரி 28, 2010

முன்னேற்றம்?!

மாற்றங்கள் எல்லாம்
முன்னேற்றங்கள் ... அல்ல .

முன்னங்கால்கள் ...
கைகளாகி ,
முதுகு நிமிர்ந்த
மனித வடிவத்தை
முன்னேற்றம் என்பதில்
முழு உடன்பாடில்லை !.

அவன் ,
அக்கினியைக் கக்கும்
ஆயுதம் தூக்கி
பூமிப் பந்தை
காயப்படுத்த ...
முனையும் செயலை எப்படி
முன்னேற்றம் என்பேன் ?

எல்லைகள் தோறும்
வெள்ளைக் கொடி...
இதழ்களெல்லாம்
புன்சிரிப்பு .

மாறும் உலகில்
இவையிரண்டும்
மாறாதிருத்தலே...
முன்னேற்றம் !


(07- 08- 2004 இல் கவிச்சோலையில் பரிசு வென்ற கவிதை )

பிப்ரவரி 19, 2010

செல்லமே...!


செல்லமே...!
எனக்கும் உனக்கும்
உடன்பாடு ஏதுமின்றியே ...
உற்ற துணையானோம் .
*
*
உனக்கு என் மீதும்
எனக்கு உன் மீதும்
ஏற்பட்ட பிடிப்பிற்கு
அன்பே ஆதாரம்.
*
*
என் முகம் காண
நீ மகிழ்வாய்
என் அரவணைப்பில்
நீ நெகிழ்வாய் ,
உன்னை ...
வாரியணைத்து
வாஞ்சையோடு கொஞ்சுவது
வழக்கம் எனக்கு .
*
*
எனக்காக காத்திருப்பதும்
என்னையே சுற்றிவருவதும்
உன் வாடிக்கை ,
உன் அருகாமையையும்
உன் தொடுதலையும்
விரும்புவது ... என் வாடிக்கை .
*
*
காலச் சூழல்
கடல் கடந்து வந்துவிட்டேன் ...
உன் பிரிவுத் துயரோடு .
என் பிரிவும்
உன்னை வாட்டலாம் .
... இருந்தும் கேட்கிறேன்
மனதளவில் இல்லாவிட்டாலும்
உடலளவிலாவது ...
நலமா ?
நன்றியுணர்வுள்ள ... என்
நாலுகால் செல்லமே ...!
(நான்கு ஆண்டுகள் முன்... என்மீது அன்போடு இருந்த நாய்க்குட்டியை பிரிந்து வெளிநாடு வந்த போது எழுதிய கவிதை .
இன்று அந்த குட்டி இல்லை ... ஆகையால் இந்த கவிதை என் நாய்க்குட்டிக்கு .... காணிக்கை . உண்மை படம் கிடைக்கவில்லை )

பிப்ரவரி 10, 2010

தாரத்தின்... தாய்மை !


தாயகம் திரும்பும் ...
உன்னை
கணவனாக வழியனுப்புகிறேன் .
*
நீ ...
விமானம் ஏறும் அந்த
கடைசி நிமிடத்தில்
கையசைக்கும் போது
*
முந்தானையை பிடித்தோடும்
குழந்தையாய் ...
எனக்குள் பீறிடுகிறது
தாய்மையின் ஏக்கம் !
Related Posts with Thumbnails