டிசம்பர் 26, 2010

தாகமெடுத்த தண்ணீர்! (சுனாமி நினைவு)


குடியிருந்த வீடும் போச்சு
கூண்டோடு ஊரும் போச்சு
பழகிய முகங்கலெல்லாம்
பலதிசையில் சடலமாச்சி
இதையெல்லாம் பார்க்கத்தானா
என்னை மட்டும் விட்டுபோச்சு?


தங்கமே தங்கமென்று
தாலாட்டி வளர்த்த ரெண்டு
பிள்ளைகள் உயிரைக்கொண்டு
போனதே பேயலை இன்று!


தாய் தகப்பன் தண்ணியோட
தம்பியவன் மன்ணுக்குள்ள
நான் மட்டும் கரையொதுங்கி
நாதியற்று போனேனே.


அந்திக்கு வீடுவந்தா
அன்போட செல்லமக
கழுத்தை கட்டிக்கொண்டு
கன்னத்தில் முத்தமிடும்.
முத்தமிடும் சிரிப்பலையை
முறித்துவிட்ட பேரலையே!
இனி...
அந்திவரும் நாள்தோறும்
அந்த முத்தம் யார்தருவா?



நீரும் நிலமும்
நிகழ்த்திய வன்முறை...
கல்லறையானதே - ஒரு
கடலோர தலைமுறை.



தாங்காது கடலம்மா!-நீ
தந்த துயர் போதுமம்மா.
இன்னோரு முறைவந்தா
ஏமாந்து போயிடுவ
மனிதரெல்லாம் மாண்டபின்
மறுபடி நீ என்ன செய்வ?

தாகம் தீர்ந்ததா தண்ணீரே!?
உன்னால்...
தரணி சிந்துதே கண்ணீரே!.


(ஆழிப்பேரலை அஞ்சலிக்காக வாசிக்கப்பட்ட கவிதையில் சிலதுளிகள்)



டிசம்பர் 13, 2010

தாஜ்மகால்


நவம்பர் 23, 2010

ஆங் சாங் சூகி அம்மையார்

உறுதியை வேராக்கி
உயர்ந்து நின்று ...
உரிமைக்காய் போராடும்
உயிரியல் பர்மா தேக்கு!


(நண்பர்களே.... அவ்வபோது வலைவரமுடிய வில்லை ..... நானும் இருக்கிறேன் என்பதற்காக இப்பதிவு .... )

அக்டோபர் 28, 2010

மனமார்ந்த நன்றியும் சி.க.இளங்கதிரும்.

என் மகன் இளங்கதிர்க்கு   வாழ்த்தையும் .... பெயர் பரிந்துரையும் அளித்த  மதிப்பிற்குரிய வலைபதிவர்கள் அனைவருக்கும் என் குடும்பத்தின் மனமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி !!!


தானியங்கி முறையில் பதிவேற்றிய என் பதிவுக்கு கருத்துரைத்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் .


நான் இருக்குமிடத்தில் இணைய தொடர்பின் வீரியம் சரியில்லாததாலும் ... இணைய தொடர்புக்கு வரஇயலாத  சூழலாலும் ... உங்களோடு கைகுலுக்க  இயலாமைக்கு வருந்துகிறேன் .


நான் எனது விடுமுறையை தீபாவளி வரை நீட்டித்துள்ளேன் . கிடைக்கும் இந்த நேரத்தை என் மகனோடு செலவிடுகிறேன் .


இதோ ... உங்க பார்வைக்கு
என் மகன் இளங்கதிர் . (சி.க.இளங்கதிர், s.k.elangathir)

எனக்கு பெயர் பரிந்துரை செய்தவர்களுக்கும் ... என்னை வாழ்த்தியவர்களுக்கும் ...என் வணக்கம் . அன்புடன் சி.க.இளங்கதிர் .
உங்க வாழ்த்தினால்  நான்  மகிழ்வோடு இருக்கிறேன்.
                                          

உங்கள் அனைவருக்கும்  டாடா .....
என்னைப்பற்றிய என் அப்பாவின் கவிதையை  படிங்களேன் .
          
                 அசைகள் இல்லாத
                 கவிதைகளே ... இல்லை .
                 உன்,
                அசைவுகளை மிஞ்சிய
                 கவிதைகளும் இல்லை.

செப்டம்பர் 28, 2010

வானொலியில் நான். (ஆட்டோகிராப்) (சினேகன்)

வணக்கம் ,
சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 ல்.... “ஆட்டோகிராப்”  படப்பாடலைப் பற்றிய எனது கண்ணோட்டம்.
இது “கவிஞர் நேரம்” நிகழ்ச்சிக்காக ஒலியேறிய படைப்பு.                                                ( பாடலுடன் )



படம் :ஆட்டோகிராப்
பாடல் :கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்புத்தோழி
பாடலாசிரியர்: திரு சினேகன்
படைப்பு :சி.கருணாகரசு.


செப்டம்பர் 15, 2010

எங்கள் உலகம்! (எந்த பெயர் சூட்டலாம்? )

வணக்கம்....

செப்டம்பர் 15 .... எங்கள் வாரிசின் வருகைக்கென... மருத்துவர் குறித்த தேதி.
செப்டம்பர் 12... நாங்கள் பெற்றோரான நாள்.




எங்கள்...
அன்பணுக்களின் கலகம்!
அதில் வந்த...
இவனே...
இனியெங்கள் உலகம்!!


உலகுக்கு இவன்
புது வரவு!_எங்கள்
உயிருக்கு இவனே
முதல் உறவு!!



ஈர...
தொப்பூழ் கொடியுடன்
உன்னை ஏந்திய தருணம்
ஏனோ கண்ணீர் கசிந்தது!


எனக்குள் இருந்த
எல்லாத் துயரும்
அந்த நொடியில் நசிந்தது!!




பாலினம்... ஆண்

எடை .... 3.600 கிலோ
பிறப்பு வகை.... இயல்பு வகை... (அதாவது ஆயுதமின்றி)




                                   





என்ன பெயர் சூட்டலாம்?




இருபாலினத்திலும்... பெயர்களை தெரிவு செய்து வைத்திருந்தோம்.
குழந்தை பிறந்த இரண்டாம் நாளிலிருந்து பெயருக்கான ஓட்டெடுப்பு நடைபெறுகிறது
இந்த எழுத்தில் இப்படிதான் இருக்க வேண்டும் எந்த வரையறையும் வகுத்துக்கொள்ள விருப்பவில்லை
பெயர் நல்ல தமிழ் பெயராக சுருக்கமாக இருக்கனும். எளிமையா இருக்கனும்....
ஆகையால் கீழே உள்ள 4 பெயர்களில் உங்களுக்கு பிடித்த ஒரு பெயரை தேர்வுசெய்யுங்கள்... எந்த பெயர் அதிக ஓட்டு பெருகிறதோ... அந்த பெயரைதான் சூட்டுவோம்.



1.இளங்கதிர்


2.நாவலன்


3.முகிலன்


4.செழியன்.

எங்கள் பகுதியில் குழந்தையை பார்க்க வரும் உறவினரும் நண்பர்களும் குழந்தையின் கையில் பணம் வைத்துதான் தூக்குவார்கள்....(இது சடங்காம்?) அதில் எனக்கு உடன்பாடில்லாததால்..... இப்படி எழுதி மருத்துவமனையிலும்.... தற்போது வீட்டிலும் வைத்திருக்கிறேன்....



இது எனக்கு பல சங்கடங்களையும்.... எதிர் விவாதங்களையும்... வருத்தத்தையும் ஏற்படுத்தினாலும் பணம் வாங்க மறுத்து விட்டோம்




அன்புடன்... நாங்கள்.


க. சிவரஞ்சினி.


சி. கருணாகரசு.  (தற்காலிக தொடர்புக்கு..... 7502827721)

செப்டம்பர் 02, 2010

நாளைய உலகம்! (தாயகம் வருகிறேன் (செல்கிறேன்).........)

நாம் வியந்துப் போற்றும் 
அதி நவீனங்கள் அத்தனையும் 
பழமையென 
பயனற்றுப் போகும் !

நம்,
கற்பனைக்கு சிக்காத
பிரமாண்டங்கள் எத்தனையோ 
மலிந்து கிடக்கலாம் _இந்த 
மனிதர்களுக்கு  மத்தியில்.

இருந்தென்ன... 

மனித உணவு 
மாத்திரையாய்  விற்கும்!
காற்றுக்கு   விலைகொடுக்க
கடைகளில் வரிசை நிற்கும்!!.


வலைத்தளத்தின், 
படைப்பாளிகளே... படிப்பாளிகளே 
உயிர் போகும் தருணத்திலும்  என்னை உயிர்ப்புடன் வைத்திருந்தது வலைத்தளம்.
ஆகையால் உங்களிடம் சொல்லிக்கொண்டு  தாயகம் செல்கிறேன்  (வருகிறேன்)
 மீண்டும் வலைப்பக்கம் வருவதற்கு 5 அல்லது 6 வாரங்கள் ஆகலாம். இன்னும் 2 வாரங்களுக்கு பின் தானியங்கி முறையில் என் இடுகை வெளியாகும் ... அதை சேர்க்க வேண்டிய இடத்தில் யாராவது சேர்த்துவிடுங்கள்.
இதுவரை உங்க ஆதரவு இனியும் தொடர வேண்டுகிறேன்.


அனைவருக்கும் நன்றி ... சென்று வருகிறேன் .

ஆகஸ்ட் 25, 2010

வானம் வசப்படும்?


தொட்டுணர முடியாத
தொலைதூர மாயை
உச்சரிக்கப்படுகிறது
உண்மைக்கு மாறாக...
வானம் வசப்படுமென்று.

“வானம் வசப்படும்”
நடக்காத ஒன்று இது
நம்பிக்கைக்கு உதாரணம்!
உண்மைக்கு புறம்பாய் இது
உருவாக யார்க்காரணம்?


வானம் வசப்படும் என்பது
மோனைக்கென சொல்லப்பட்ட...
முரண்.
முன்னேற்றத்திற்கு தேவைத்
தனித்திறன்.


வசப்பட வாழ்வினில்
ஆயிரம் இருக்கு!
வசப்படா வானத்தை
வம்பிழுப்பது எதற்கு?

.

ஆகஸ்ட் 18, 2010

நேர்மைக்காக (உமா சங்கர்)

நேர்மைக்கு தண்டனை...
வரலாறு சிரிக்கும்!

நேர்மைக்கு வந்தனை...
வரலாற்றில் நிலைக்கும்!!

இது...
ஆறறிவின் அளவுகோள்!

இன்று...
ஆள்வோருக்கான வேண்டுகோள்!!

ஆகஸ்ட் 15, 2010

வானொலியில் நான்.... (காதல்)

வணக்கம் ,
சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 ல்.... ”காதல்” படப்பாடலைப் பற்றிய எனது கண்ணோட்டம்.
இது “கவிஞர் நேரம்” நிகழ்ச்சிக்காக ஒலியேறிய படைப்பு.                                                ( பாடலுடன் )


படம் :காதல்
பாடல் :உனக்கென இருப்பின் ... உயிரையும் கொடுப்பேன்
பாடலாசிரியர்: திரு நா. முத்துக்குமார்
படைப்பு :சி.கருணாகரசு.


ஜூலை 28, 2010

கர்ப்பிணி

உருவான நாள்முதல்
உருமாற்றம்
உனக்கும்...
உனக்குள்ளும் !

கணபொழுதையும்
கவனத்தால் நிரப்புகிறாய் !
கருவறை தேவைகளை
கவனித்து நிரப்புகிறாய் !!

ஆட்கொள்ளும்
அவ்வபோது ...
உடல் களைப்பு !
அது உனக்கு
அணுவெல்லாம்
உயிர் களிப்பு !!

உபாதைகள் உனக்குள்ளே
உயிரறுக்கும் !_ நீ
வயிர்த்தடவும் உவகையால்
அதுமறக்கும் !!

பெண்ணே _ இது
உனக்குள்ளே
உயிர் உலகம் ...
சுழலும் தருணம்!
உனைச்சுற்றி
ஓருலகம்...
மகிழும் தருணம் !!






என் இல்லத்தரசிக்கு......

ஜூலை 22, 2010

மனம்


உடலின் எதனுள் மறைந்து வசிக்கிறாய்
உன்னை அறியத் துடித்தேன் !
இடமா, வலமா இருப்பது எங்கே ?
என்றுநான் தேடிக் களைத்தேன்

இதயமா, மூளையா நீயெது என்றே
எனக்குள் குழம்பித் தவித்தேன் !
அதிசய முத்தாய் அகமெனும் சிப்பியில்
ஆனதைக் கண்டு பிடித்தேன்

மனிதனை ஆளும் மகத்துவ சக்தி
மனமே இதுவரை நீயே !
எனினும் சிலரில் மிருக வெறியை
ஏற்றி வைப்பதால் தீயே!!

எல்லா உயிரிலும் அன்பதைத் தூவி
எங்கும் அமைதி பரப்பு !
கல்லாய் இருக்கும் மனிதனைக் கொஞ்சம்
கடவுள் நிலைக்குத் திருப்பு !!


( இக்கவிதை 2003 மார்ச்சில் கவிமாலையில் பரிசு பெற்றது .... எனது "தேடலைச் சுவாசி " நூலிலும் இடம்பெற்றது ,
கவிதை சமநிலைச் சிந்து என்னும் மரபில் இயற்றப்பட்டது .... குறையிருப்பின் சுட்டவும் )

ஜூலை 18, 2010

கவிஞர் நேரம் , விருமாண்டி, (வானொலியில் நான் )

வணக்கம் ,
சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 ல்.... விருமாண்டி படப்பாடலைப் பற்றிய எனது கண்ணோட்டம்.
இதுகவிஞர் நேரம்நிகழ்ச்சிக்காக ஒலியேறிய படைப்பு. ( பாடலுடன் )

படம் :விருமாண்டி
பாடல் :உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல
பாடலாசிரியர்: திரு கமலகாசன்
படைப்பு :சி.கருணாகரசு.

ஜூலை 09, 2010

கவியரசருக்கு கவிதாஞ்சலி , (காணொளியில் நான்)

நடிகர் திரு சிவக்குமார், எழுத்தாளர்க் கழகத் தலைவர் திரு நா.ஆண்டியப்பன் ...நான்.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்க் கழகம் 2008 ஆம் ஆண்டு நடத்திய "கவியரசு கண்ணதாசன் விழா"வில் ...." கவியரசருக்கு கவிதாஞ்சலி " நிகழ்வில் நான் பாடிய கவிதாஞ்சலியை காண "இங்கே"
சொடுக்கவும் .... (http://www.youtube.com/watch?v=YBR-4Ewf828)


ஜூன் 25, 2010

சிட்டுக்குருவி

எங்கும் நீ ,
தானியத்திலிருந்து ... விரட்டினேன் !


எங்கே நீ ?
தானியத்தோடு ... விரட்டுகிறேன் !!


(அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்திற்கு காணிக்கை )


ஜூன் 18, 2010

பாறை உடைக்கும் பனிப் பூக்கள்

தங்கமே எனச் சொல்லி
தாலாட்ட எவருமில்லை
செல்லமே எனச் சொல்லி
சீராட்ட ஆளுமில்லை .

ஆசையாய் பொம்மைக்கேட்டு
அடம் பிடித்து அழவில்லை
பசி வந்து எனைவாட்ட
பால் கேட்டு அழுகின்றேன்

பச்சிளம் குழந்தை என்றா
பசி விலகி ஓடிவிடும் ?
வறுமைக்கு மரணமென்றால் _என்
வருத்தங்கள் ஓடிவிடும் .

விண்முட்டும் விஞ்ஞானம்
வீதியெல்லாம் நடத்துறாங்க
விதியோட போராடும் _என்மை
வேடிக்கை பாக்குறாங்க .

கல்வியை தரச்சொல்லி
கால்பிடித்து நிக்கலிங்க
கால் வயிற்றை ஈரமாக்கி _எம்
கண்ணீரை நிறுத்திடுங்க .

எனக்காக கல் உடைக்கும்
என்னோட பிறந்தவளே !
உனக்கு நான் உதவிட
உடல் வலிமை போதலியே .

கருவறைக்குள்ளேயே ... நான்
கரைந்து போயிருந்தால் ,
கஷ்டமும் உனக்கில்லை
கண்ணீரும் எனக்கில்லை .

பனிப் பூ கைப்பட்டு
பாறையது உடைகிறதே _ இதை
பார்க்கின்ற மனிதகுலம்
பாறைப்போல் கிடக்கிறதே !

( ஆறு ஆண்டுகளுக்கு முன்... சிங்கப்பூர் கவிச்சோலையில் இந்த படத்திற்கு கவிதை போட்டி நடைப்பெற்றது .... அப்போது நான் எழுதிய கவிதை இது .... பரிசு பெற வில்லை )

ஜூன் 11, 2010

பொதி ஏற்றிகள்!


கணினி வகுப்பு
நீச்சல் பயிற்சி
பாட்டு வகுப்பு
நடன பயிற்சி
துணைப்பாட வகுப்பு
வீட்டு பாடம்...என
சுழற்சி முறையில்
கசக்கி பிழிந்து,
பாரமேற்றி
பாடசாலைக்கு அனுப்பும்...

பொதியேற்றிகளே!

குழந்தைகளை...
படிக்க வையுங்கள்
"படுத்தி" வைக்காதீர்கள்.

மே 31, 2010

கதவு

யதார்த்தச் சுழலின்
புரிதலற்ற கோட்பாடுகளும் ,

நிகழும் இந்த நிமிடத்தின்
நிறைகாணா பார்வைகளும் ,

உறவுக்கெதிராய்...
கதவடைத்து விடுகிறது .

வேகமாக ...
சாத்தப்படும் கதவின் இடுக்கில்
பிஞ்சு விரல்கள் ....!
அதுதான் ,
பிசைகிறது மனதை .

(மறைந்த என் அண்ணன் திரு சி.திருவேங்கடம் அவர்களின் மகன் தி.தமிழ் உண்மை சிந்து ... அரசு பொது தேர்வில் 448 மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற்றுள்ளான் )

மகன் தமிழுக்கு...
உன்னிடம் வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துக் கொள்ள இயலாத உறவுநிலையில் என் (எங்கள் ) பரிதவிப்பின் வெளிபாடு இது.

உன்னிடம் சொல்ல முடியவில்லை !
உலகறிய சொல்கிறேன் வாழ்த்துக்கள் மகனே !!
(இதை யார் தடுக்க முடியும் )

உலக நண்பர்களே நீங்களும் வாழ்த்துங்கள் எங்கள் செல்வத்தை !!

மே 26, 2010

உறவுகள்

உறவு...
ஓர் அழகிய ... கவிதை .

கவிதையின் அழகில்
நிறையப் பொய்கள் !


(எனது தேடலைச் சுவாசி நூலிலிருந்து )

மே 17, 2010

துயரம் வயது -1

துரோகம்...
உயிர்களை அறுவடைச்செய்து
ஓராண்டாகிறது .

உறவுயிர்களின் இரத்தம் ...
மண்ணில் உறைந்துவிட்டது
மனதில்தான் பிசுபிசுக்கிறது !.

மே 12, 2010

முதல் குழந்தை !


யாருக்கும் தெரியாமலே
ஒளித்து வைத்திருந்தேன்
பதின்ம வயதிலேயே
துளிர்விட்ட ... "அந்த "
என் காதலை .
@
அடங்காத என் ஆசையால்
அந்த பருவத்திலேயே
நிறைய கருக்கலைப்புகளும்
நிறைய கருச்சிதைவுகளும்
நிகழ்ந்தப்படியே இருந்தன .
@

அதற்கான
அச்சத்தையோ
அவமானத்தையோ
உணரவில்லை நான் !
@

ஆயிரம் முயற்ச்சிக்கு பின்
அதே பதின்ம வயதில்
பெற்றெடுத்து விட்டேன் ...
"கவிதை"யாகிய
என்
முதல் குழந்தையை .
@


( கவிமாலை போட்டிக்கு எழுதிய கவிதை ... ஜனவரி 2010 )

மே 07, 2010

அன்னையர் தினம் ?!

அனுதினமும்
போற்றவேண்டிய
அன்னைக்கு ...
ஒரு தினம் ஒதுக்கிய
உத்தமர்களே !

நீங்கள் ....
அனுசரிக்க வேண்டாம்
அன்னையர் தினத்தை !
மூடினால் போதும்
முதியோர் இல்லங்களை .


(எனது தேடலைச்சுவாசி நூலிலிருந்து )

ஏப்ரல் 30, 2010

மே தினம்

கொண்டாடப்பட்டது ...
வியர்வைக்கான
அங்கீகாரமாய் .

கொண்டாடப்படுகிறது ...
விடுமுறைக்கான
அலங்காரமாய் !

மே தினம் !

ஏப்ரல் 23, 2010

(சிங்கை) பதிவர்களுக்கு அழைப்பு


இனிய சிங்கை பதிவர்களே .....
தமிழ் மொழி மாத நிறைவு நிகழ்ச்சியாகிய பொங்கு தமிழ் விழாவில் ......நானும் எனது நண்பர்களும் படைக்கும் கவிதை பட்டிமன்றத்துக்கு அன்புடன் அழைக்கின்றேன்.
நாள் : 25.04.2010.......ஞாயிறு
நேரம் : மாலை 6:30 க்கு சரியாக
இடம் : உமறு புலவர் தமிழ் மொழி நிலையம் (இரண்டாம் தளம் )
508, விக்டோரியா தெரு (லாவண்டர் எம்.ஆர்.டி அருகில் )
அனைவரும் வருக

ஏப்ரல் 19, 2010

தாயே திரும்பி போ!

தாயே திரும்பிப் போ !

இது ,
பாதகர்கள் உலவும்
பாவ மண் ...._ இதில் உன்
பாதம் வேண்டாம் !.

தாயே திரும்பிப் போ !!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தாயார் திருமதி பார்வதியம்மாள் வேலுப்பிள்ளை அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வானூர்தி மூலம், நேற்று(16.04.2010) இரவு மலேசியாவிலிருந்து, தமிழகம் வந்திருந்தார். அவரை தரையிறங்க விடாமல், அதே விமானத்தில் இந்திய அரசு திருப்பி அனுப்பியமை மிகவும் கண்டனத்திற்குரிய மனிதத் தன்மையற்ற செயலாகும்

மார்ச் 06, 2010

நட்பு

நானும் அவனும்
நகமும் சதையும்
நான் நகம்
அவன் சதை .
வெட்டிவிட்டான் ...
நான் வளர்வதால் !


குறிப்பு ....
(படத்திற்கும் கவிதைக்கும் எந்த உள்நோக்கமும் இல்லை )
(கவிதை வாரமலரிலும் .... பின் எனது "தேடலைச் சுவாசி" நூலிலும்...இடம் பெற்றக் கவிதை )

மார்ச் 03, 2010

நாகரிகம்



துணிக்கடை பொம்மை

சேலையில் !

தொடைத்தெரிய உடுத்தியவள்

சாலையில் !

வெட்கப்பட்டது பொம்மை _இது

நாகரிக உலகின் உண்மை .

(இது ஒரு மீள் பதிவுங்க )

பிப்ரவரி 28, 2010

முன்னேற்றம்?!

மாற்றங்கள் எல்லாம்
முன்னேற்றங்கள் ... அல்ல .

முன்னங்கால்கள் ...
கைகளாகி ,
முதுகு நிமிர்ந்த
மனித வடிவத்தை
முன்னேற்றம் என்பதில்
முழு உடன்பாடில்லை !.

அவன் ,
அக்கினியைக் கக்கும்
ஆயுதம் தூக்கி
பூமிப் பந்தை
காயப்படுத்த ...
முனையும் செயலை எப்படி
முன்னேற்றம் என்பேன் ?

எல்லைகள் தோறும்
வெள்ளைக் கொடி...
இதழ்களெல்லாம்
புன்சிரிப்பு .

மாறும் உலகில்
இவையிரண்டும்
மாறாதிருத்தலே...
முன்னேற்றம் !


(07- 08- 2004 இல் கவிச்சோலையில் பரிசு வென்ற கவிதை )

பிப்ரவரி 19, 2010

செல்லமே...!


செல்லமே...!
எனக்கும் உனக்கும்
உடன்பாடு ஏதுமின்றியே ...
உற்ற துணையானோம் .
*
*
உனக்கு என் மீதும்
எனக்கு உன் மீதும்
ஏற்பட்ட பிடிப்பிற்கு
அன்பே ஆதாரம்.
*
*
என் முகம் காண
நீ மகிழ்வாய்
என் அரவணைப்பில்
நீ நெகிழ்வாய் ,
உன்னை ...
வாரியணைத்து
வாஞ்சையோடு கொஞ்சுவது
வழக்கம் எனக்கு .
*
*
எனக்காக காத்திருப்பதும்
என்னையே சுற்றிவருவதும்
உன் வாடிக்கை ,
உன் அருகாமையையும்
உன் தொடுதலையும்
விரும்புவது ... என் வாடிக்கை .
*
*
காலச் சூழல்
கடல் கடந்து வந்துவிட்டேன் ...
உன் பிரிவுத் துயரோடு .
என் பிரிவும்
உன்னை வாட்டலாம் .
... இருந்தும் கேட்கிறேன்
மனதளவில் இல்லாவிட்டாலும்
உடலளவிலாவது ...
நலமா ?
நன்றியுணர்வுள்ள ... என்
நாலுகால் செல்லமே ...!
(நான்கு ஆண்டுகள் முன்... என்மீது அன்போடு இருந்த நாய்க்குட்டியை பிரிந்து வெளிநாடு வந்த போது எழுதிய கவிதை .
இன்று அந்த குட்டி இல்லை ... ஆகையால் இந்த கவிதை என் நாய்க்குட்டிக்கு .... காணிக்கை . உண்மை படம் கிடைக்கவில்லை )

Related Posts with Thumbnails