என் நேசத்துக்குரிய "உனக்கு"உன் மீது எனக்கிருந்த ...
பழைய காதலின்
நினைவுச் சுவட்டோடு...
எழுதுகிறேன்.
உன்னை கையாள்வது
ஒரு கலை!.
தகவல்கள் எப்படியாயினும்
ஓர் பிணைப்போடுதான்
ஆரம்பிக்கப்படுவாய்.
உலகம் முழுதும்
வியாப்பித்திருந்த உன்னை
ஓர் மூலையில் ஒதுக்கியதில்
நானும் ஒருவன்!.
என் விடுதிக்காலத்தில்
என் தேவைகளுக்கான
தூதுவன் நீதான்!.
நட்பு
காதல்
உறவு என
அத்தனைக்கும்
பாலமும்... பலமும்
நீயே தான்!.
உன்னை பாவிக்கும் போது
சிந்திக்கும்...
அவகாசம் இருந்ததால்
நீ,
நிதானத்தின் அடையாளமானாய்!.
முன்பொரு காலத்தில்
உன்னை
புறாவின் காலில்
கட்டி அனுப்பினார்கள்
பின்...
முத்திரை குத்தி அனுப்பினார்கள்.
இன்றோ
மனித முகவரிகள்
எழுத்துகளிலிருந்து
எண்களாகிவிட்டதால்
உன் அழகு
பராமரிக்கப்படவில்லை.
அதனால்தான்...
நீ
காணாமல் போகும் முன்
“கடிதமே”!
உனக்கோர் கடிதம்
எழுதுகின்றேன்.
(முன்பு இணைய இதழில் வெளியான என் கவிதை )
| Tweet |