டிசம்பர் 20, 2011

வாரிசுகள்!

இவர்...
வருமானத்தை,
குப்பையில் தேடுகிறார்.

வருமானம் பெரும்...
இவர் வாரிசுகள்,
குப்பையா(க்)கி விட்டதால்!.

டிசம்பர் 04, 2011

தீ

வேதியியல் ஆய்வகத்தில்,
தீப் பற்றிய
உன் தாவணியை....
சட்டென அணைத்து விட்டாய்.

எனக்குள்,
நீ பற்றி எரிவதை
என்ன செய்ய?!

நவம்பர் 10, 2011

வாழ்ந்த நாட்கள்!

வணக்கம்...,

சிலகாலமாக வலைத்தளம் வர இயலவில்லை... நட்பின் துணையோடு சில பதிவுகளை வலையேற்றினேன்.  அதோடு கடந்த இரண்டு மாதங்களாக தாயகத்தில் குடும்பத்துடன் மகிழ்வோடு வாழ்ந்தேன்.... இனி தொடந்து வலையில் வருவேன்.

கடந்த இரண்டு மாதம் நான் வாழ்ந்த கணக்காகும்... அதற்கு சாட்சியாய் சிலபடங்கள்.


 


இனிய நன்றிகள்.அக்டோபர் 24, 2011

பண்டிகையும் பண்பாடும் ...(காணொளி)வணக்கம்...

பண்டிகையும் பண்பாடும் என்ற தலைப்பில் சிங்கப்பூர் வானொலியில் நான் கலந்து கொண்டு ஆற்றிய கவியரங்கத்தின் காணொளி...

உறவுகள் அனைவருக்கும் எனதினிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் ...


செப்டம்பர் 24, 2011

பாரதி நினைவரங்கம் (காணொளி)

வணக்கம்....

பாரதி 126 நினைவரங்கில் பாரதி என்னும் பொதுத்தலைபில் "பாரதியின் பராசக்தி" என்று நான் வாசித்த கவிதை.
இடம்... உமறுப் புலவர் தமிழ்மொழி கல்வி நிலையம் , சிங்கப்பூர். (2008)


செப்டம்பர் 12, 2011

பிறந்த நாள்

வணக்கம்,

இன்று (12-09-2011) என் மகன் சி.க.இளங்கதிர் க்கு முதலாண்டு பிறந்த நாள்.


              முதல் “மாத” பிறந்தநாளின் போது.
       ஆறாம் “மாத” பிறந்தநாளின் போது (அரை வயது)

பிறந்த நாள் கொண்டாடுவதில் உடன்பாடில்லாத நான் ... தேடலின் காரணமாக வெளிநாட்டில் இருப்பதால், உருவாக்கிக் கொண்ட மகிழ்ச்சி தருணங்கள் இவை.
முதலாண்டு பிறந்த நாளுக்கு தயாராகிறான் சி.க இளங்கதிர்

            

ஆகஸ்ட் 30, 2011

யார் குற்றவாளி (காணொளி)

வணக்கம்....

செங்கொடி மரணத்தை தாழ்வுபடுத்தாதீர்கள்.
அவர் போல் யாரும் தழலில் சிக்காதீர்கள்.இந்த காணொளியில்  நம் நாட்டு புலனாய்வு திறனை காணலாம்.
தமிழர்களின் “ஒன்றினையாமை”யால் என்ன நிகழ்ந்துள்ளது என்பதையும் உணருங்கள். நன்றிநன்றி... குமுதம்.காம்


ஆகஸ்ட் 19, 2011

நெருப்பில் நிலவு

                                     


                                         (வெண்பா)

நெஞ்சுரம் நேர்மையோடு நேர்க்கோட்டில் நின்றெழுதி
வஞ்சமதை வேரறுக்கும் வர்க்கமது- அஞ்சா
கருத்தியல்பைக் கொண்டக் கவிஞன் முகமே
நெருப்பில் தெரியும் நிலவு.


ஆகஸ்ட் 01, 2011

நன்கொடை

அமிழ்தத்தில் சரியளவு
நச்சுக் கலந்து
அருந்தியவன் நிலையில்
அருந்தமிழ் இன்று.


வெகுசன ஊடகமாம்
தமிழ்த்திரை உலகில்
பல்லி விழுந்த
பாலைப் போல
பாடல்கள் பல.

வீரியத் தமிழில்
கலப்படம் செய்து
வியாபாரம் செய்யும்
கவி மேதாவிகளே!

உங்களின்
கலப்படத்தால்

காயப்படப் போவது
மொழி மட்டுமல்ல - நம்

இனமும்தான்.
ஏனெனில் “மொழி”
இனத்தின் அடையாளம்.

மொழியில் கலப்படம்
மொழிவளர்ச்சிக்கு வேகத்தடை!

கலப்படம் தவிர்த்தலே
மொழிக்குச் செய்யும் நன்கொடை!!

ஜூலை 21, 2011

நாகரீகம்!


பெண்ணே, உடலின் பெரும்பங்கைக் காட்டலாமா?
கண்ணை உறுத்தக் கடைவிரித்து- மண்முதல்
விண்ணுயர்ந்த நம்பெருமை வீணாக்கும் உன்னால்நம்
பண்பின் வலிமைக்கே பாழ்


(எனது தேடலைச்சுவாசி நூலிலிருந்து)

ஜூலை 07, 2011

உறுதி (குறும்படம்)

                                                                     உறுதி
                                          (எழுத்துவடிவம்)

கருங்கல் சர்லியில் இரும்புச் சக்கரம் உருளும், மறமறவென்ற ஒலி நெஞ்சைஅரைக்க... அடர்கருப்பு திரையில் எழுத்துக்கள் தோன்றித்தோன்றி மறைகிறது.


ஆங்காங்கே நட்சத்திர மின்னலாய் புள்ளிப்புள்ளி வெளிச்சங்கள். தூர வெளிச்சங்களை நோக்கி நகர்கிறது காட்சி, நட்சத்திர மின்னல்கள் இப்போது ராட்சித தீப்பிழம்பாய் அனல் கக்கி கரும்புகை உமிழ்கிறது. சற்று தூரத்தில் ஒரு ஐந்து வயது பெண்பிள்ளை பரட்டைத்தலையோடு மூக்கை அழுந்த துடைத்து இருமி அழும் போது நமக்கும் அந்தக் கந்தகநெடி மூக்கை அரிக்கிறது.


இராணுவத்தின் கவச வாகனங்கள் வரிசைப்பிடித்து விரையும் ஓர் சாலையில், கரும்புகை இடையே... ஒரு சாலை பலகை வந்துபோகிறது. அதில் வவுனியா என்ற பழைய எழுத்துக்கள். சாலை ஒரு பக்கத்தில் மரணபயத்துடன் மூட்டைமுடிச்சியை சுமந்தவாறு திரளான மக்கள் ஓட்டமும் நடையுமாய். சிலர் குழந்தைகளை தூக்கிக்கொண்டு. அத்தனை முகங்களிலும் அப்பிக்கிடக்கிறது ஆற்றாமை.

                                                           (காட்சி மாறுகிறது)
இடிந்த கட்டிடங்கள் சில கூரை வேயப்பட்ட வீடுகள் பெருவாரியான மக்கள் வாழ்ந்த இடமாக தெரிகிறது... ஆனால் மக்கள் நடமாட்டமில்லை.

ஆங்காங்கே சின்னச்சின்ன தீச்சுவாலையுடன் புகைந்துகொண்டிருக்கிறது. அது நேற்றைய பெருநெருப்பாய் இருக்கலாம். படல்வேலி அமைக்கப்பட்ட ஓட்டு வீடு அதன் பக்கத்தில் பழைய கோயில்.
மேலுடுப்பு இல்லாத பழுத்த முதியவர் கோயில் திட்டில் தூணோடு சாய்ந்திருக்கிறார் தளர்ந்த நிலையில். தூணில் அவரின் கைத்தடியும் சாத்திவைக்கப்பட்டுள்ளது. முதியவரின் காலடியில் ஒரு நாய் தலையை கீழேவைத்தப்படி படுத்திருக்கிறது.
திடீரென நிலம் அதிரும் சத்தத்துடன் புகைகக்கியப்படி ஏதோ ஒன்று கோயில் நோக்கிவர... விசுக்கென படலில் புகுந்து தெரித்து ஓடுகிறது நாய். புகைகக்கி வந்த அது, வெடித்து கரும்புகைக்கக்கி நெருப்பை உமிழ்கிறது. புகைக்கு இடையே முதியவரின் கைத்தடி ஏதோ பிசுபிசுப்புடன் தெரிகிறது.
                                                      
                                                         (காட்சி மாறுகிறது)
ஆங்காங்கே மரங்கள் உள்ள நிலபரப்பு... சில பனைமரங்கள் பாதியாய் கிழிந்து கிடக்கிறது. எரிந்த வாகனத்தின் கூடு கிடக்கிறது.... எங்கும் திரளான மக்கள் குழுவாய் கூட்டமாய் அலைமோதியப்படி. தொடரான துப்பாக்கி சத்தம்... விட்டுவிட்டு வெடிசத்தம் நிலம் கிழிக்கிறது. கந்தக நெடியோடு பக்கத்தில் இருப்பவரை காண இயலாத புகையின் அடர்த்தி. மூட்டை முடிச்சோடு மக்கள் ஒரு புள்ளியை நோக்கி நகர்த்தப்படுகிறார்கள்.

மக்களுக்கு இடையே இராணுவவீரர்கள் தென்படுகிறார்கள் கையில் துப்பாக்கியும் முகத்தில் புகை கவசத்துடனும். ஒரு சின்ன மரத்தின் கீழ் தன் மகளை தோளில் சாய்த்தப்படி நடுத்தர வயதுகாரர். மகளுக்கு ஏழெட்டு வயதிருக்கலாம் அழுக்கடைந்த பாவாடை சட்டையுடன். இருவருமே தாகம் பசியால் மயங்கிய நிலையில் மர நிழலின் கீழ் இருக்கின்றார்கள்...
ஒருகை, அந்த நடுத்தர வயதினரின் தோள்தோட்டு மறுகையால் தண்ணீர் குடுவையை நீட்டுகிறது. தண்ணீரை ஆவலோடு வாங்கிகொண்டவர் தன் மகளின் வாயருகே கொண்டுச்செல்கிறார். தண்ணீரை குடிக்க எத்தணிக்கையில் அந்த சிறுமியின் கண்ணில் படுகிறது தண்ணீர் வழங்கியவனின் கால்பகுதி அது உடுத்தியிருப்பது ஆம்மி சீருடை ...
வலதுகையால் தண்ணீர் குடுவையை விலக்கிவிட்டு மீண்டும் தந்தையின் தோள்மீது சாய்ந்து விடுகிறாள்... அந்த சிறுமி.


                                     மீண்டும் திரையில் எழுத்துக்கள்.....

ஜூன் 23, 2011

கவியரசு கண்ணதாசன்

                              கவியரசு (24-06-1927)----- (17-10-1981)

செம்மொழியை எழிலோடுச்
சீர்மிகு வடிவோடு
காவியங்களாய்த் தந்தக்
கலையரங்கம்.


தன்மூச்சு உள்ளவரை
தரமானப் படைப்புகளை
தரணிக்குத் தந்திட்டக்
கவியரங்கம்.

ஜூன் 17, 2011

அவன்-இவன்


அவன் இவன் எப்போதும் போல பாலாவின் தனி முத்திரை.

மெல்லிய அன்பின் அடர்த்தியை “வலி”மையான அழகியலாக்கி இருக்கின்றார் பாலா.

அவன் - இவன் .... வெல்ல பிறந்தவன்.

மே 30, 2011

எங்க வீட்டு பிள்ளைகள்

மறைந்த என் அண்ணன் திரு சி.திருவேங்கடம் அவர்களின் இளைய மகன் தி.தமிழருவி,
இவ்வாண்டு 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 464 மதிப்பெண்கள் பெற்று சிறந்த முறையில் தேர்வுப் பெற்றுள்ளான்.  அவனிடம் வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ள இயலாத உறவு(!) சூழலின் வெளிப்பாடு இது .... அவனை மனதார வாழ்த்துங்கள்.
இவன் சென்ற ஆண்டு 448 மதிப்பெண்கள் பெற்ற தி.தமிழ் உண்மை சிந்து வின் தம்பி ஆவான்.

மகன் தமிழருவிக்கு இனிய வாழ்த்துக்கள்
 
                                        தி .தமிழருவி

மற்றும் என் இன்னோரு அண்ணன் திரு சி.மேகநாதன் அவர்களின் இளைய மகள் மே.மணியரசி இவ்வாண்டு 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 446 மதிப்பெண்கள் பெற்று சிறந்த நிலையில் வெற்றி பெற்றுள்ளார்.     மகள் மணியரசிக்கும் என் வாழ்த்துக்கள்.......

                                            மே.மணியரசி.

எங்க வீட்டு பிள்ளைகளை வாழ்த்துக்கள்!ஒரு மகிழ்சியான தருணத்தில்... தமிழருவி எனக்கு ஊட்டிவிடுகிறான்

அதேதருணத்தில்  தமிழ் உண்மை சிந்து எனக்கு ஊட்டி விடுகிறான்.

மிக்க நன்றி.

மே 18, 2011

போர்க்குற்ற நாள்இன்று....
ஈன இனமது- நம்
ஈழ இனத்தை கொன்ற நாள்!
உயிரிருக்க உடல் தின்ற நாள்!!


(எதிரியின் போர்க்குற்றத்தால் கொத்து கொத்தாய் மடிந்த என் உறவுகளுக்கு என் வீர வணக்கம்)

ஏப்ரல் 12, 2011

மக்கள் கவிஞர், வானொலி கவியரங்கம்

                                      கவியரங்கம்

படம்......................... மகாதேவி
பாடல்... ...................குறுக்கு வழியில்
பாடலாசிரியர்.... .மக்கள் கவிஞர்
                                     பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
படைப்பு.... .............சி. கருணாகரசு.
மக்கள் கவிஞருக்கு நாளை 13-04-2011.
81 ஆம் பிறந்த நாள்.... அதனை முன்னிட்டு இந்த படைப்பு.

ஏப்ரல் 03, 2011

மார்ச் 23, 2011

நரைமுடி


அடர்காடாய் இருந்தாலும்
அடர்காட்டில் இருந்தாலும்
அதிசயமாய் வளரும் “பட்ட மரங்கள்”மார்ச் 07, 2011

பெண்பாக்கள், மகளிர் தினம்

                                       


சீதை 
ஆணாதிக்கத்தால்
அக்னியில் குளித்தெழுந்த
அனிச்சம்.


திரெளபதை
ஐவர் பகிர்ந்துக் கொண்ட 
ஒற்றை இதயம்!


குந்திதேவி
கர்ணனை அனாதையாக்கி
“கன்னி”யம்! காத்தவள்.


காந்தாரி
இவளவன்
கண்கள் இரண்டால்
இவளும்
கண்கள் இருண்டாள்.


சூர்ப்பநகை
மூக்கறுப்பட்ட
முதல் காதல்!


அகலிகை
“கல்”லானாலும்
கணவன் என் கிடந்தவள்.


கண்ணகி
மதுரை ஓவியத்தை அழித்த
கற்புத் தூரிகை!


மாதவி
கணிகை குலத்தில் பிறந்த
கண்ணகி!


மணிமேகலை
கணிகை குலமும்
வணிக குலமும்
கலந்து செய்த
கடவுள் குலம்.


அமராவதி
காதல் வாசித்த
இரங்கற்பா.


கிளியோப்பாட்ரா
அரியனை யுத்தத்திற்கான
அழகு ஆயுதம்.


டயானா
ஆங்காங்கே கிழிக்கப்பட்ட
அழகியல் புத்தகம்.


அன்னை தெரசா
நிராகரிக்கப் பட்டவர்களின்
நிராகரிக்கப்படாத
கருணை மனு!


இந்திராகாந்தி
வேலியால் விழுந்த
வீரிய விருட்சம்


ஆங்சாங் சுகி அம்மையார்
உரிமைக்காக போராடும்
உயிரியல் பர்மா தேக்கு!


கிரண்பேடி
இருண்ட சிறையினுள்
புகுந்த வெளிச்சம்!


சான்சி ராணி
வல்லினம் மிரண்ட
மெல்லினம்.


ஒளவையார்
போர் முரசை தவிர்த்த
தமிழ் முரசு.


கல்பனா சாவ்லா
விண்வெளி லயித்த
கொலுசொலி!


பார்வதி (என் அம்மா)
என் 
வரங்களுக்காகவே
வாய்த்த கடவுள்!


(இவைகளில் ஏதேனும் தவறாக பொருள் தந்தால் குறிப்பிடவும் திருத்திக்கொள்ளலாம்)மார்ச் 01, 2011

புதிய பார்வை
எழுத்துக்கள் பெரிதாக்க படத்தின் மேல் அழுத்தவும்.

நன்றி

பிப்ரவரி 21, 2011

மதுவெண்பா

                                                       வெண்பாக்கள் 


  


நரம்புகளைச் சூடேற்றி நட்பைக் கெடுக்கும்
வரம்புமீறி வம்பை வளர்க்கும் - நரகச்
சினமேற்றி வாழ்வதனைச் சீரழிக்கும் போதை
உனக்கேன் மதுவை ஒதுக்கு.


பொருளைக் கரைக்கும் புகழைச் சிதைக்கும் 
குருதியில் நச்சினைக் கூட்டும் - உறுப்பில் 
பதுங்கி உயிரைப் பறித்தே அழிக்கும்
மதுவைத் தவிர்த்தலே மாண்பு!. 

பிப்ரவரி 18, 2011

கவியரங்கம் (காணொளி)


வணக்கம்,

சிங்கப்பூரில் மாதவி இலக்கிய மன்ற கலை நிகழ்வில்... கவிமாலை அமைப்பின் கவியரங்கம்.
பொது தலைப்பு.... “தமிழ்த்தாய் கண்ணீர் வடிக்க காரணம்
நான் பேசிய தலைப்பு “ஊடகமே

பிப்ரவரி 10, 2011

கண்ணீர் கரைந்த தருணம் 1

வணக்கம்.... 

(இது என் முதல் கட்டுரை வடிவம்)

இந்த நிகழ்வு நிகழ்ந்து கால் நூற்றாண்டை நெருங்குகிறது....
ஆனால்... ஏதாவது ஒரு தருணத்தில் மனதில் தோன்றி புத்தியில் உரைத்து... நெஞ்சை கீறுகிறது....


எனக்கு அப்போது பத்துக்கும் குறைவான வயது....  என் கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள செந்துரை என்னும் நடுத்தர நகரத்தில்.... ஸ்ரீராம் நர்சரி பள்ளியில், இரண்டாம் வகுப்போ அல்லது மூன்றாம் வகுப்போ (தமிழ்வழி கல்வி) படித்துக்கொண்டிருந்தேன்....


பள்ளி தொடங்கிய ஓரிரு மாதத்தில் புதிதாக ஒரு மிஸ் (ஆசிரியர்) வந்தாங்க.
அவங்களும் மற்ற ஆசிரியர் போலவே மிரட்டலாக இருப்பார்கள் என் நினைத்து பயந்தேன்.  அவுங்க எங்களிம் பழகியவிதம் சொல்லிகொடுத்த பாங்கு.... அப்படி ஒரு ஆசிரியரை அதன்பின் சந்திக்கவே இல்லன்னு சொல்லலாம்.
அவங்க தான் சுசீலா மிஸ். வயது 20 திலிருந்து 22 இருக்கலாம். மிதமான அழகு ஆனா அவங்கதான் எங்களுக்கு தேவதை... அவங்களுக்கு எல்லோரையும் பிடிக்கும் என்னை கூடுதலா பிடிக்கும். எங்களுக்கும் அவங்கள ரொம்ப பிடிக்கும்... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நாந்தான் அவங்க செல்லம் அவங்க வீட்டுக்குகூட என்னை அழைத்து போயிருக்காங்க.
பள்ளிக்குக் பக்கத்திலேயே தங்கியிருந்தாங்க.   அவங்களுக்குத் தேவையான   பள்ளிச் சம்மந்தப்பட்ட சில பொருட்களைக் கூட என்னைதான் வாங்கி வரசொல்லுவாங்க. ஒருமுறை கிருஷ்ணன் படம் போட்ட பொங்கல் வாழ்த்து வாங்கி தந்திருக்கேன். (விலை 20 காசுகள்) பள்ளி கலை நிகழ்வுகளிலும்,விளையாட்டிலும்,பாடங்களிலிலும் தனக்கான பங்கை மிக நேர்த்தியாக செய்தார் சுசீலா மிஸ்.


மற்றும் சுசீலா மிஸ் வராத நாட்கள் மிக ரணமாக நகரும்... அவர்களைக் கண்டால் புதிய உற்சாகம். பாடம் படிக்காவிட்டால் அடிக்க மாட்டாங்க... கோபித்து கொள்வார்கள். பேச மாட்டாங்க அதற்காகவே எப்படியாவது படித்து விடுவோம். அபோதெல்லாம் பள்ளிகளில் சிறுசேமிப்பை ஊக்குவிக்கும் நடைமுறை உண்டு.
நாங்களும் அதில் பங்கெடுத்துக் கொண்டோம். எங்களுக்கான சேமிப்பு கணக்கை எங்க சுசீலா மிஸ் தான் பாத்துகிட்டாங்க. எங்களுக்கு கிடைக்கும் 10காசுகள்,20 காசுகளை சுசீலா மிஸ்கிட்டதான் கொடுத்து வைப்போம் அவங்களும் ஒரு நோட்டுல எழுதி வைப்பாங்க...


சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்களன்று பள்ளிக்கு சென்றோம்.
மற்ற மிஸ்களிடம் ஒரு இறுக்கம் காணப்பட்டது. எங்க சுசீலா மிஸ் இன்னும் வரல பள்ளித் தொடங்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்துக்காக வரிசையில் நிற்கவைக்கப்பட்டோம். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன் உஷா மிஸ் சுரத்தே இல்லாமல் பேசினாங்க . நம்மோடு ... .... ..... வாழ்ந்த சுசீலா மிஸ் நேற்று இறந்துட்டாங்க.... ..... ...  நான் அழுதேன் வழிந்தோடிய கண்ணீரை மேல்சட்டையின் நுனிகளால் துடைத்துக்கொண்டே பள்ளியை விட்டு வெளியேறினேன்...(அனைவரும் வெளியேறினோம். அன்று விடுமுறை) சற்று தூரத்தில் இருந்த சுசீலா மிஸ் வீட்டு பக்கம் போனேன், அவங்க வீட்டு முன்னாடி அவங்களை குளிப்பாட்டிய ஈரமும்... நிறைய மலர்களும். அந்த ஈரமும் மலரும் போலவே என் கண்ணீரும் உலர வீடுதிரும்பினேன்.

கால் நூற்றாண்டாகியும் என்மனதில் இறுக்கமாய் இருக்கும் அந்த தேவதையிடம் நான் கேட்க நினைத்த... நினைக்கும் கேள்விகள்.

1. ஏன் மிஸ் எங்கள விட்டுட்டு போயிட்டிங்க?
2.அதுக்குதான் வெள்ளிக்கிழமை எங்க சிறு சேமிப்பை திருப்பி தந்திங்களா மிஸ்?

 (சுசீலா மிஸ் இறந்தது ஞாயிற்றுக்கிழமை... இயற்கைக்கு மாறான மரணம்)
  
  இது எங்கள் தேவதை சுசீலா மிஸ்க்கான... நினைவேந்தல்.

ஜனவரி 31, 2011

மீனவர் வாழ்வு? (சீருடை மிருகம்)

ஓ........
சீருடைத் தரித்த
சீர்கெட்ட விலங்கே!


நீ...
தரையில் குடித்த
தமிழ் ரத்தம் போதாதென்றா
கடல் பக்கம்
நீட்டுகிறாய் உன்
நீண்ட நாக்கை?


எங்கள்...
ஓட்டு பொறுக்கிகளின்
மெத்தனத்தால்,
உயிர்பொறுக்கியாய் திரியும்
ஓநாய் கூடங்கள் நீங்கள்!


இன்று...
தன்மானம் பகை நெருப்பில்
எரிகிறது!
தமிழீழத்தின் அவசியம்
புரிகிறது!!


உலகே பகையை கண்டு கொள்!
உலகே பகையை கண்டுக் கொல்!!


எழுத்து... நான்,
இயக்கம்... மாணவன்,வெறும்பய(ஜெயந்த்) 

ஜனவரி 28, 2011

காலபோக்கில்....


கண்ணுக்கு தெரியும்
திருவிழா பொம்மைகள்
கைக்கு எட்டாத
ஏமாற்றம்!


உயிர் கொதிக்கும் 
பசிநேரத்திற்கு பின்னே
உலை கொதிக்கும்
காலதாமதம்!


அடிப்பட்ட சுவடோடு
எழுந்து நின்றாலும்
தொடர்ந்து கைகுலுக்கும்
தோல்வியின் முகவரி!


இப்படியாகச் சில
எம்வாழ்வில் சுழன்றடிக்க...
சூராவெளியிலும் வலைவீசும்
சூட்சமம் கற்றுகொண்டோம்.!
துயரங்கள் எதுவந்தாலும்
துணிவோடு எதிர்த்து நின்றோம்!


இன்றோ....


கண்ணுக்கு எட்டாததுகூட
கைகளில் தவழுது!


கால் அரை பசியின்றி
காலமும் கழியுது!


வெண்பஞ்சு பாதையிலே
வென்றிட துடிப்பதனால்...


மணல்திட்டை கூட
மலையென நினைக்குது!
மனசுக்குள் காயமென்றால்
மரணத்தையே வளைக்குது!


தென்றலுக்கே ஒடிந்துவிடும்
தழும்பில்லா தளிர்களே...!


காயங்களையும்.... 
கற்றுகொள்ளுங்கள்!
அது...
காலபோக்கில் வினைபுரியும்!
காலம்முழுதும் துணைபுரியும்!!


சென்ற ஆண்டு பதிவர் திரு சங்கவி எழுதிய ஒரு கட்டுரையின் பாதிப்பில் உருவானக் கவிதை.
நன்றி சங்கவி.

ஜனவரி 13, 2011

பொங்கல் கவியரங்கம், வானொலியில் நான்,

வணக்கம்.... அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.


சிங்கப்பூர் வானொலியில் பொங்கல் தின கவியரங்கம்..... அதில்...நான் பாடிய கவிதை
நான்கு நிமிடம்தான் கேளுங்க.....
ஜனவரி 06, 2011

முகம்

ஐம்புலன்களின் 
ஆட்சி பீடம்.
அசையும் தேசத்தின் 
தலைநகர்.
ஐந்தடிக் கவிதையின்
ஓரடித்தலைப்பு.
அக உணர்வை
பிரதிபலிக்கும்
புறக்கண்ணாடி.
உயர்திணை மரத்தின்
அதிசய உச்சிவேர்.
உடல் என்னும்
உறையில் எழுதிய
உயிர் முகவரி.
...
இருந்தும் ஓர் குறை
இன்றுவரை
இதற்கே தெரியாது
இதன் அசல்.


  (எனது தேடலைச் சுவாசி நூலிலிருந்து)

Related Posts with Thumbnails