பிப்ரவரி 21, 2011

மதுவெண்பா

                                                       வெண்பாக்கள் 


  


நரம்புகளைச் சூடேற்றி நட்பைக் கெடுக்கும்
வரம்புமீறி வம்பை வளர்க்கும் - நரகச்
சினமேற்றி வாழ்வதனைச் சீரழிக்கும் போதை
உனக்கேன் மதுவை ஒதுக்கு.


பொருளைக் கரைக்கும் புகழைச் சிதைக்கும் 
குருதியில் நச்சினைக் கூட்டும் - உறுப்பில் 
பதுங்கி உயிரைப் பறித்தே அழிக்கும்
மதுவைத் தவிர்த்தலே மாண்பு!. 

பிப்ரவரி 18, 2011

கவியரங்கம் (காணொளி)


வணக்கம்,

சிங்கப்பூரில் மாதவி இலக்கிய மன்ற கலை நிகழ்வில்... கவிமாலை அமைப்பின் கவியரங்கம்.
பொது தலைப்பு.... “தமிழ்த்தாய் கண்ணீர் வடிக்க காரணம்
நான் பேசிய தலைப்பு “ஊடகமே

பிப்ரவரி 10, 2011

கண்ணீர் கரைந்த தருணம் 1

வணக்கம்.... 

(இது என் முதல் கட்டுரை வடிவம்)





இந்த நிகழ்வு நிகழ்ந்து கால் நூற்றாண்டை நெருங்குகிறது....
ஆனால்... ஏதாவது ஒரு தருணத்தில் மனதில் தோன்றி புத்தியில் உரைத்து... நெஞ்சை கீறுகிறது....


எனக்கு அப்போது பத்துக்கும் குறைவான வயது....  என் கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள செந்துரை என்னும் நடுத்தர நகரத்தில்.... ஸ்ரீராம் நர்சரி பள்ளியில், இரண்டாம் வகுப்போ அல்லது மூன்றாம் வகுப்போ (தமிழ்வழி கல்வி) படித்துக்கொண்டிருந்தேன்....


பள்ளி தொடங்கிய ஓரிரு மாதத்தில் புதிதாக ஒரு மிஸ் (ஆசிரியர்) வந்தாங்க.
அவங்களும் மற்ற ஆசிரியர் போலவே மிரட்டலாக இருப்பார்கள் என் நினைத்து பயந்தேன்.  அவுங்க எங்களிம் பழகியவிதம் சொல்லிகொடுத்த பாங்கு.... அப்படி ஒரு ஆசிரியரை அதன்பின் சந்திக்கவே இல்லன்னு சொல்லலாம்.
அவங்க தான் சுசீலா மிஸ். வயது 20 திலிருந்து 22 இருக்கலாம். மிதமான அழகு ஆனா அவங்கதான் எங்களுக்கு தேவதை... அவங்களுக்கு எல்லோரையும் பிடிக்கும் என்னை கூடுதலா பிடிக்கும். எங்களுக்கும் அவங்கள ரொம்ப பிடிக்கும்... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நாந்தான் அவங்க செல்லம் அவங்க வீட்டுக்குகூட என்னை அழைத்து போயிருக்காங்க.
பள்ளிக்குக் பக்கத்திலேயே தங்கியிருந்தாங்க.   அவங்களுக்குத் தேவையான   பள்ளிச் சம்மந்தப்பட்ட சில பொருட்களைக் கூட என்னைதான் வாங்கி வரசொல்லுவாங்க. ஒருமுறை கிருஷ்ணன் படம் போட்ட பொங்கல் வாழ்த்து வாங்கி தந்திருக்கேன். (விலை 20 காசுகள்) பள்ளி கலை நிகழ்வுகளிலும்,விளையாட்டிலும்,பாடங்களிலிலும் தனக்கான பங்கை மிக நேர்த்தியாக செய்தார் சுசீலா மிஸ்.


மற்றும் சுசீலா மிஸ் வராத நாட்கள் மிக ரணமாக நகரும்... அவர்களைக் கண்டால் புதிய உற்சாகம். பாடம் படிக்காவிட்டால் அடிக்க மாட்டாங்க... கோபித்து கொள்வார்கள். பேச மாட்டாங்க அதற்காகவே எப்படியாவது படித்து விடுவோம். அபோதெல்லாம் பள்ளிகளில் சிறுசேமிப்பை ஊக்குவிக்கும் நடைமுறை உண்டு.
நாங்களும் அதில் பங்கெடுத்துக் கொண்டோம். எங்களுக்கான சேமிப்பு கணக்கை எங்க சுசீலா மிஸ் தான் பாத்துகிட்டாங்க. எங்களுக்கு கிடைக்கும் 10காசுகள்,20 காசுகளை சுசீலா மிஸ்கிட்டதான் கொடுத்து வைப்போம் அவங்களும் ஒரு நோட்டுல எழுதி வைப்பாங்க...


சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்களன்று பள்ளிக்கு சென்றோம்.
மற்ற மிஸ்களிடம் ஒரு இறுக்கம் காணப்பட்டது. எங்க சுசீலா மிஸ் இன்னும் வரல பள்ளித் தொடங்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்துக்காக வரிசையில் நிற்கவைக்கப்பட்டோம். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன் உஷா மிஸ் சுரத்தே இல்லாமல் பேசினாங்க . நம்மோடு ... .... ..... வாழ்ந்த சுசீலா மிஸ் நேற்று இறந்துட்டாங்க.... ..... ...  நான் அழுதேன் வழிந்தோடிய கண்ணீரை மேல்சட்டையின் நுனிகளால் துடைத்துக்கொண்டே பள்ளியை விட்டு வெளியேறினேன்...(அனைவரும் வெளியேறினோம். அன்று விடுமுறை) சற்று தூரத்தில் இருந்த சுசீலா மிஸ் வீட்டு பக்கம் போனேன், அவங்க வீட்டு முன்னாடி அவங்களை குளிப்பாட்டிய ஈரமும்... நிறைய மலர்களும். அந்த ஈரமும் மலரும் போலவே என் கண்ணீரும் உலர வீடுதிரும்பினேன்.

கால் நூற்றாண்டாகியும் என்மனதில் இறுக்கமாய் இருக்கும் அந்த தேவதையிடம் நான் கேட்க நினைத்த... நினைக்கும் கேள்விகள்.

1. ஏன் மிஸ் எங்கள விட்டுட்டு போயிட்டிங்க?
2.அதுக்குதான் வெள்ளிக்கிழமை எங்க சிறு சேமிப்பை திருப்பி தந்திங்களா மிஸ்?

 (சுசீலா மிஸ் இறந்தது ஞாயிற்றுக்கிழமை... இயற்கைக்கு மாறான மரணம்)
  
  இது எங்கள் தேவதை சுசீலா மிஸ்க்கான... நினைவேந்தல்.





Related Posts with Thumbnails