நவம்பர் 07, 2015

விழுதுகள்

2015 செப்டம்பர் மாத கவிமாலை நிகழ்வில், விழுதுகள் என்னும் போட்டித் தலைப்பில் பரிசு பெற்ற என் கவிதை.


பொருளாதாரம்...
ஊசலாடாமல் இருக்க,
ஊசலாடிக் கொண்டிருக்கிறான்
உயரத்தில்.

கட்டடத்தின்...

கண்ணாடி உடலை
அழகாக்குகின்றான்... தன்னை
அழுக்காக்கிக் கொண்டு.


உயரத்தில் தொங்குகின்றவனுக்கு
உறுதுணையாகவும்
ஒரே துணையாகவும் இருப்பது,

உச்சியிலிருந்து
இவனோடு இணைக்கப்பட்டிருக்கும்
இரும்பு விழுதுகளே.


**********************************************

ஜூலை 13, 2015

காதல் தின்றவன் - 27

நம் 
காதலுக்கான
தேசிய கொண்டாட்டம்
உன் பிறந்த நாள்.

ஜூன் 24, 2015

வாட்சப் (whatsapp)

வணக்கம்...
 இன்று அனைவருமே வாட்சப் பயனாளியாய் இருக்கின்றோம். ஆனால் அந்த whatsapp க்கு தமிழில் என்ன சொல். யாரும் வாட்சப்பை தமிழ் சொல்கொண்டு பயன்படுத்தியதாய் தெரியவில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள். வாட்சப்பை “திரை உலவி” என்ற சொல்லால் குறிப்பிடலாம் என்பது என் எண்ணம். மாற்று கருத்து இருப்பின் சொல்லலாம். இது என் தனிப்பட்ட எண்ணம்.
 திரை = தொடுதிரை
உலவி = சுற்றுதல்,பரவுதல்நன்றி,

மே 04, 2015

வறண்ட குளம்


எங்க ஊர் குளம்

தாகமெடுத்த குளமிது
தற்கொலைச் செய்து கொண்டது.

கரை உடைத்த நீரெங்கே

கரை வளர்த்த மரமெங்கே
தாமரை போர்வை எங்கே- அவைத்
தரும் வாச பூக்களெங்கே.

குளமே...

உன்னில் மூழ்கி
உயிர்விட்ட வரலாறு அன்று
உன்னுயிரே மூழ்கிய 
வரலாறாய் இன்று.

தாகச்சுமையோடு இனி

பறவைகள் எப்படி
சிறகடிக்கும்?

மண்ணைக் குடியென்று

பழக்குவதெப்படி 
மாடு ஆடுகளை?

குடமுடைத்து வருபவன் 

இனிதலை முழுகுவது எப்படி?

தடாகமே... 

உன்தற்கொலைக்கான
தடையம் தேடும்
தருணம் இதுவல்ல.
உயிர்த்தெழு... எம்
உயிர் நனைக்கவும் 
உடல் துவைக்கவும்.


#கவிதை : சி.கருணாகரசு
படம்: தி.தமிழருவி.
இடம் : உகந்த நாயகன் குடிக்காடு

ஏப்ரல் 06, 2015

சாமி மாடு

    எப்பவோ முடிவு செஞ்சதுதான்னாலும் கூட இன்னக்கி ஏதோ ஒன்னு கைநழுவி போறாப்புல மனசு மருவி நிக்கிது சின்னசாமி குடும்பம்.

     யாரு போறதுன்னு பேசிக்கிட்டு  இருந்தப்பவே, பெரியவனே போயிட்டு வரட்டுமேன்னு அப்பா சின்னசாமி சொல்ல, ‘என்னாலல்லாம் மாட்ட வுட்டுட்டு திரும்பிவர முடியாது. அது என்ன பாத்து  ‘ம்மா’ன்னு கத்துச்சின்னா சாமிமாடாவுது ஒன்னாவுது திரும்ப புடிச்சிக்கிட்டு வந்துடுவன்’னு ராமசாமி மறுக்கவும்,

‘யப்போ நீயும் அம்மாவுமே போயி மாட்ட வுட்டுட்டு அப்படியே தேரு பாத்துட்டு வந்துடுங்க’ இது நல்லுவன் மேகநாதன்.
 
   போனா ஒத்தப்படையில போவனுமுன்டானு அப்பா சொல்ல... இந்தா சின்னவன் அருளுக்கு பள்ளிக்கூடந்தான் இல்லையே அவனையும் அழச்சிக்கிட்டு போங்கன்னு பெரியவன் சொல்லவும், மூனுபேரும் போவதா முடிவாச்சி.
   
      ஆனா இதுக்கும் நமக்கும் சம்மந்தமே இல்லங்கிற மாதிரி மற்ற மாட்டுவளோட மாடா கவனையில கிடக்கிற வைக்கல தின்னுகிட்டு நிக்கிது கெழப்பசு.
   
    சின்னசாமி படையாச்சிக்கு ஏழு புள்ளுவோ. நாலு ஆணு மூனு பொண்ணு. மூத்த பொண்ணு லெட்சுமிய தெக்க அரியலூரு பக்கம் மணக்குடியில கட்டிகொடுத்திருக்கு. பெரியவனுக்கும் நல்லுவனுக்கும் கல்லியாணம் முடிஞ்சி புள்ளையும் இருக்கு. எல்லாமே ஒன்னா பெரிய குடும்பமா இருக்குதுவோ. சின்னவன் அருளு மட்டுந்தான் பள்ளிக்கூடம் போறான். மத்த எல்லாமே ஆட்டுமாட்ட பாத்துக்கிட்டு கொல்லக்காட்டு வேலதான்.

     இந்த  குடும்பத்தோடவே  காலாகலமா இருக்குற ஒரு கெழப் பசுவதான்  கலியப்பெருமா கோயில்ல வுடப்போறாங்க. அரியலூர்லேர்ந்து மூனுமைல் தூரத்துல இருக்குது கல்லங்குறிச்சி. அங்க இருக்கிற   கலியப்பெருமா கோயிலுலதான்  பங்குனித் திருநா பத்துநா நடக்கும்.

  சுத்துப்பட்டு அப்பது அறுவது ஊர்ல நடக்கிற திருநாள்ல இதுதான் ரொம்ப விமரிசையானது. சனங்கல்லாம் வந்து குமியும். வேண்டுதலா ஆடுமாடு,முந்திரி பலான்னும் தாணியமுன்னு கோயிலுக்கு கொடுத்துட்டு, கூத்து ஆட்டம் பாட்டம் பாத்துட்டு வேண்டிகிட்ட சனங்க மொட்ட போட்டுகிட்டு வூட்டுக்கு வேணுங்கிற சாமான்செட்டு வாங்கிக்கிட்டு வண்டியுலையும் நடந்தும் ஊரு திரும்பும். 

    பின்னேர நிலவு பளிச்சின்னு அடிக்கிது, மொதக்கோழி இன்னும் கூவல. கெழப்பசுவ கட்டுதரியிலேர்ந்து அவுத்துகிட்டு வரும்போதே மத்த மாடுவோ சத்தம் போடுது.  வாசல்கிட்ட நிறுத்தி சூடத்த ஏத்தி கும்புட்டு கெளம்பியாச்சி. வெரிக்க பாத்துகிட்டு நிக்கிதுவோ குடும்பத்து சனம்.

மாட்ட பிடிச்சிக்கிட்டு முன்னாடி போறாரு சின்னசாமி படையாச்சி. மாட்டுக்கு பின்னாடி அருளும் அம்மா பார்வதியும். தெக்குத்தெரு தாண்டி ஊரு எல்லைக்க்கிட்ட வரும்போது முனியப்பா கோயிலு. யப்பா முனியப்பாரேன்னு ஏதோ வேண்டிக்கிட்டு போவுது பார்வதியம்மா.

 இலைக்கடம்பூர தாண்டி கப்பி ரோட்டுல போவுது மாடும் மனுசாலும். செந்துரை மாட்டாஸ்பத்திரிக்குப் நாலஞ்சி தடவ போன  நெனப்புல மாடும் தளாராம நடக்குது.

  செந்துரையையும் தாண்டி தாரோட்டுல போகும் போதுதான் மாட்டு நடையில ஒரு சொணக்கம், இருந்தாலும் சொந்த ஆளுங்கதானெ பிடிச்சிக்கிட்டு போறாங்கனு மாடு நடக்குது. இப்படியே  இராயம்புரத்திலிருந்து தெக்குபக்கமா பிரிஞ்சி சென்னிவனம் மேட்டுப்பளையம் காவேரிப்பாளையம் வழியா போனா கடூரு. அங்கேருந்து மேற்கு பக்கமா திரும்புனா நாலு பல்லாங்குல கோயிலு வந்துரும்.

   இராயம்புரத்திலேருந்து  தெக்குபக்கமா பாத பிரிஞ்சி வண்டிமாடு போற காட்டுபாதயில போகும் போதே, இன்னும் வேறஊரு சனங்களும் வண்டியிலயும் நடந்தும் திட்டுதிட்டா பேசிகிட்டு போவுதுவோ. எல்லாருமே கலியபெருமா கோயிலுக்குதான் போவுதுன்னு பேச்சியிலேர்ந்து தெரியிது.

    நெலாவெளிச்சத்துல நிழல்கோலம் போடுது, பாத ஓரமா இருக்குற காட்டாமணக்கு செடிவோ. மாட்டுக்கு முன்னாடி அப்பா பின்னாடி அம்மாவும் அருளும்.

    அருளு மொதுவா... யம்மோ இன்னும் எவ்ளோ தூரம் நடக்னும்?.
 
     பாதிதூரம் வந்தாச்சிடா இன்னும் பாதி தூரந்தான்.

     ஏன்ம்மா நம்ம மாட்ட கோயிலுக்கு வுடனும்? .

     இந்த மாட்ட கோயிலுக்கு வுடுறதா வேண்டுதல் இருக்கு அதான்.

    என்னா வேண்டுதல்?  நம்ம மாட்ட எதுக்கும்மா கோயிலுக்கு கொடுக்கணும்.

    ஒருதடவ  அடமழக்காலம் ,அதுக்கு ஒடம்பு சரியில்லாம சாகபொழைக்க கெடந்துது, அப்ப மாடு பொழச்சா உனக்கு வுடுறன் கலியபெருமாளேன்னு வேண்டிகிட்டதுக்கு அப்பறந்தான் மாடுபொழச்சுது. அந்த வேண்டுதல நெறவேத்ததான் இப்ப கொண்டிவிடப்போறம்.

   “இந்த, என்னத்த கதபேசிகிட்டு வெரசா நடங்க, அப்பதான் பளபளன்னு விடிய கடூர தாண்ட முடியும் வெயிலுக்கு முன்னாடி கோயிலுக்கு போயிடணும்” ங்கிறார் அப்பா.

    அத காதுல வாங்குனதா தெரியல,  யம்மோ, இந்த மாடு எப்பேர்ருந்து நம்ம வூட்டுல இருக்கு .

      பார்வதியம்மாளுக்கு  நட முன்னோக்கியும் நெனப்பு பின்னோக்கியும் போவுது.

  அது களவெட்டு சமயம், பெரியவன் பொறந்து மூனு மாசம் ஆவும். கெணத்து கொல்லயில கல்லை*க்கு  பத்துசனம் அரிபிரியா களவெட்டிகிட்டு இருக்குதுவோ,வன்னிமரத்துல ஒரு சீலயால யான*கட்டி புள்ளைய போட்டுட்டு, களவெட்டுற சனத்துக்கு மெனக்கோடு* போட்டுகிட்டு இருக்கு பார்வதியம்மா.

   அந்தசமயம் பாத்து பேரன பாக்க கெழக்குசீமயிலேர்ந்து வந்த பார்வதியோட அம்மா பூங்காவனம். ஊட்டுல ஆள காணம அக்கம் பக்கத்துல விசாரிச்சி நேர கொல்லைக்கு வந்துடுச்சி.

    யானயில கெடந்த புள்ளய தூக்கி மடியில வச்சிகிட்டு மொவகிட்ட பேசிகிட்டே பக்கத்தில இருக்குற பால்சீசாவ பாத்துட்டு,

 ஏண்டி புள்ளக்கி தாய் பால்  இல்லையான்னு வெசாரிக்கிது.

 பசும்பால்தான்.

பசும்பாலுக்கு என்னப்பன்றவ?

கெழக்குத் தெருவுல மாயவன் அம்மாதான், புள்ளைக்கு கொடுடின்னு தெனம் அரபடி பால கொண்டாந்து தந்துட்டு போவுது.

   ஒருநா மொவவூட்டுல தங்கிட்டு மறுநா ஊருக்கு பயணமாயிடுச்சி பூங்காவனம்.

   போன நாலுநாளுலேயே , தம்பிக்காரன் சின்னதொர ஒரு தலைச்சன் கன்னு போட்ட மாட்டை கன்னுகுட்டியோட ஓட்டியாரான்.

    யக்கோ, இந்த மாட்ட அம்மா உனக்கு கொடுத்துட்டு வரசொல்லிச்சி. இன்னும இந்த மாட்டுபால பீசி புள்ளைக்கி கொடுப்பியாம்.

    இந்த பசுமாடு வந்ததிலேர்ந்தே கட்டுதரியில மாடு இல்லாம இருந்தது இல்ல. அதுபோல பால்மோருக்கும் பஞ்சமில்ல. தாயும் கன்னுமா வந்தது, இங்க வந்தே பதினோரு தடவ கன்னு போட்டுடுச்சி.

   பொறந்த ஏழு புள்ளுவளுக்கும் தாய்பால் கொடுத்த இன்னோரு தாயா இருந்சுச்சி. இந்த மாட்டுக்கு சொந்த மனுசால் யாருங்கிறதும் சொந்த கொல்ல எதுங்கிறதும் நல்லத்தெரியும். முந்தாணியால கண்ண தொடச்சிகிது பார்வதியம்மா,

  பொழுது பளப்பளன்னு விடியவும் கடூரூ வந்தாச்சி இன்னும் நாலு பல்லாங்குதான். முன்னையவிட இப்ப நெறைய கூட்டம் வரிசகட்டி போவுது ஆடு மாடு  புள்ளகுட்டி வண்டின்னு . கோயில நெருங்கறத்து முன்னால இருக்கிற ஓடதண்ணியில மாட்ட குளுப்பாட்டுராரு.

எலே அந்த பையில  சந்தனம்  பொட்டு இருக்கு எடுடா.

 சந்தனத்த  தண்ணியில நெனச்சி நெத்தி,கொம்புன்னு பூசி, பொட்டு வச்சி கோயிலுக்கு முன்பக்கம் இருக்குற தோப்புக்கு ஓட்டிகிட்டு வந்தாச்சி.

  மாட்டுக்கு என்னாஏதுன்னு புரியல.  மாட்ட பார்வதியம்மா கையில கொடுத்துட்டு ,

இத புடிச்சிகிட்டு இங்கேயே நில்லுங்க, நா போயி மாட்டுக்கு சீட்டு வாங்கிகிட்டு வந்துடுறன்.

  கோயில் நிர்வாகத்துல  ரூவா பதினொன்னு கட்டி வ.சின்னசாமி படையாட்சி, உனா நானா குடிக்காடு ந்னு சீட்டு வாங்கிகிட்டாரு.

   கோயிலு வாசப்படிக்கு நேரா நின்னு சூடம் ஏத்தி கும்புட்டுட்டு, மாட்ட ஒப்படைக்கிற எடத்துல, கவுத்த மாத்தி ஒப்படைச்சிட்டு திரும்புதுங்க மூனுசனமும். அம்மாவுக்கு மனசு அழுத்துறது பேச்சில தெரியுது.

  இப்பவும் அந்த கெழப்பசு மத்த மாட்டோட சாதாரணமாதான் நிக்கிது. தன் சனங்க மேல அவ்வளவு நம்பிக்கை.

  கோயில ஒருசுத்து சுத்தி வர்றதுக்குள்ள உச்சி பொழுதாச்சி.

   நீங்க ரெண்டுபேரும் மணக்குடியில இருக்குற லெட்சுமி ஊட்டுக்கு போயிட்டு மறுநா தேரும் ஏதாந்தமும் பாத்துட்டு சவுகாசமா* வாங்க, நா இப்படியே அரியலூர் போயி செந்துர பஸ்ஸ புடிச்சி பொசாயக்*குள்ள வூட்டுக்கு போயிடுறன்.

    கோயில சுத்தியிருக்குற கட கண்ணிய சுத்திபாத்துட்டு, முடி எடுக்கும் கொட்டாவை கடந்து செட்டேரி ஓடைய பிடிச்சி வயக்காட்டு வழியா கெழக்க பார்த்து மணக்குடிய நோக்கி நடக்க ஆரம்பிச்சுதுக தாயும் புள்ளையும்.

   அன்னக்கி  லெட்சுமி வூட்டுல ராத்தங்கல். அங்கேயும் கெழப்பசுவ கோயிலுக்கு வுட்டத பத்தியே பேசிபேசி மாளல.

 மொத நா தேரு  மறுநா ஏகாந்தமும் பாத்துட்டு, கரண்டி அருவாமனை மத்துன்னு வாங்கிகிட்டு கல்லங்குறிச்சியிலேர்ந்து அரியலூர்க்கு போற குதுரவண்டியில கிளம்பிட்டாங்க.

    அரியலூர் சித்தேரிக்கர ஓரமா இருக்குற புளியாம்மரத்துகிட்டெ எல்லா ஆளுவளையும் எறக்கிவிடுறான் குதுரவண்டிக்காரன்.

வாடா இந்த புளியமரத்தோரமா நிப்போம்.இங்கதான்டா செந்துர பஸ்சு நிக்கும்.

வாங்குன சாமான்செட்டோட புளியமரத்தோரமா  நெழல்ல ரெண்டு பேரும் நிக்கிறாங்க.அருளு பெராக்கு பாத்துதுகிட்டிருக்கான்.

      அந்த நேரம் பாத்து ரெண்டுமூனு லாரியில, நெறைய மாட்ட ஏத்திகிட்டு வந்து டீக்கடைக்கு எதுத்தாப்புல நிக்கிது. லாரியிலேர்ந்து எறங்கி வந்த நாலஞ்சி ஆளுவோ டீ குடிச்சிக்கிட்டு இருக்குதுவோ,

 “யம்மோ அங்க பாருமா லாரியில நம்ம சாமிமாடு”

   டீக்கடையில நிக்கிறவங்க பேசிக்கிறது காதுலவுழுது. இப்பவே கெளம்புனாதான் நாளக்கி காலையில கேரளாவ தொடமுடியும்.

  வண்டியில இருந்த கெழபசு தன்னோட சொந்த மனுசால் வாசத்து உணர்ந்து திரும்பி திரும்பி பாக்குது. அம்மான்னு கத்தகூட தெம்பில்லாம.

     ரெண்டு அம்மாவுக்கும் உயிரும் நெரிபடுது.
                                                
                                              @@@@@@@@@@@@


(நிஜத்துக்கு நிழல் வடிவம் தந்துள்ளேன்)*கல்ல..................கடலை (மல்லாட்டை)
*யான...................துணியால் கட்டப்படும் தூளி
*மெனக்கோடு... களையெடுப்பவர்களுக்கு போடப்படும் கோடு
*சவுகாசமா........ நிதானமாக.
*பொசாய.......... பொழுது சாய (மாலை)மார்ச் 29, 2015

திரு,லீ குவான் இயூ

சொல்லி அடங்காத எந்த சொல்லிலும் அடங்காத சிங்கப்பூரின் சிற்பி மறைவுக்கான என் அஞ்சலி.

 லீ புகழ் வாழ்க

நாற்புறம் மாக்கடல் சூழ்ந்திட இந்நிலம்
நற்பயிர் என்றுமே விளையாதே!
நல்லவர் உன்மன வல்லமை யாலிதை
நன்நில மாக்கிய தலைவாநீ!
நேற்றிது காடென மீனவர் கூடென
நிற்கதி யற்றவோர் சிறுமேடு!
நேர்வழி காட்டியலீயவர் பாதையில்
நிற்குதே இன்றிது புகழோடு!

நான்கின மக்களும் சிங்கையர் என்றுதான்
நல்லினம் பேணிய மதியோனே!
நாடிது மேன்பட நல்வழி காட்டிய
நன்னெறி யூட்டிய நெறியாளா!
தேன்மொழி யாம்தமிழ் ஓர்மொழி சிங்கையில்
செய்தவர் வாழ்கிறார் மனகூட்டில்!
தென்கிழக் காசிய  மண்ணிலே சீர்மிகு
சிங்கையை தந்தஉன் புகழ்வாழ்க!!.

                        - சி.கருணாகரசு.


பிப்ரவரி 14, 2015

காதல் தின்றவன் - 37என் 
பரந்த மனப்பரப்பை
பற்றாக்குறையாக்கி விடுகிறது,
உன்
அடர்ந்த காதல்.
Related Posts with Thumbnails