ஜூலை 21, 2011

நாகரீகம்!


பெண்ணே, உடலின் பெரும்பங்கைக் காட்டலாமா?
கண்ணை உறுத்தக் கடைவிரித்து- மண்முதல்
விண்ணுயர்ந்த நம்பெருமை வீணாக்கும் உன்னால்நம்
பண்பின் வலிமைக்கே பாழ்


(எனது தேடலைச்சுவாசி நூலிலிருந்து)

ஜூலை 07, 2011

உறுதி (குறும்படம்)

                                                                     உறுதி
                                          (எழுத்துவடிவம்)

கருங்கல் சர்லியில் இரும்புச் சக்கரம் உருளும், மறமறவென்ற ஒலி நெஞ்சைஅரைக்க... அடர்கருப்பு திரையில் எழுத்துக்கள் தோன்றித்தோன்றி மறைகிறது.


ஆங்காங்கே நட்சத்திர மின்னலாய் புள்ளிப்புள்ளி வெளிச்சங்கள். தூர வெளிச்சங்களை நோக்கி நகர்கிறது காட்சி, நட்சத்திர மின்னல்கள் இப்போது ராட்சித தீப்பிழம்பாய் அனல் கக்கி கரும்புகை உமிழ்கிறது. சற்று தூரத்தில் ஒரு ஐந்து வயது பெண்பிள்ளை பரட்டைத்தலையோடு மூக்கை அழுந்த துடைத்து இருமி அழும் போது நமக்கும் அந்தக் கந்தகநெடி மூக்கை அரிக்கிறது.


இராணுவத்தின் கவச வாகனங்கள் வரிசைப்பிடித்து விரையும் ஓர் சாலையில், கரும்புகை இடையே... ஒரு சாலை பலகை வந்துபோகிறது. அதில் வவுனியா என்ற பழைய எழுத்துக்கள். சாலை ஒரு பக்கத்தில் மரணபயத்துடன் மூட்டைமுடிச்சியை சுமந்தவாறு திரளான மக்கள் ஓட்டமும் நடையுமாய். சிலர் குழந்தைகளை தூக்கிக்கொண்டு. அத்தனை முகங்களிலும் அப்பிக்கிடக்கிறது ஆற்றாமை.

                                                           (காட்சி மாறுகிறது)
இடிந்த கட்டிடங்கள் சில கூரை வேயப்பட்ட வீடுகள் பெருவாரியான மக்கள் வாழ்ந்த இடமாக தெரிகிறது... ஆனால் மக்கள் நடமாட்டமில்லை.

ஆங்காங்கே சின்னச்சின்ன தீச்சுவாலையுடன் புகைந்துகொண்டிருக்கிறது. அது நேற்றைய பெருநெருப்பாய் இருக்கலாம். படல்வேலி அமைக்கப்பட்ட ஓட்டு வீடு அதன் பக்கத்தில் பழைய கோயில்.
மேலுடுப்பு இல்லாத பழுத்த முதியவர் கோயில் திட்டில் தூணோடு சாய்ந்திருக்கிறார் தளர்ந்த நிலையில். தூணில் அவரின் கைத்தடியும் சாத்திவைக்கப்பட்டுள்ளது. முதியவரின் காலடியில் ஒரு நாய் தலையை கீழேவைத்தப்படி படுத்திருக்கிறது.
திடீரென நிலம் அதிரும் சத்தத்துடன் புகைகக்கியப்படி ஏதோ ஒன்று கோயில் நோக்கிவர... விசுக்கென படலில் புகுந்து தெரித்து ஓடுகிறது நாய். புகைகக்கி வந்த அது, வெடித்து கரும்புகைக்கக்கி நெருப்பை உமிழ்கிறது. புகைக்கு இடையே முதியவரின் கைத்தடி ஏதோ பிசுபிசுப்புடன் தெரிகிறது.
                                                      
                                                         (காட்சி மாறுகிறது)
ஆங்காங்கே மரங்கள் உள்ள நிலபரப்பு... சில பனைமரங்கள் பாதியாய் கிழிந்து கிடக்கிறது. எரிந்த வாகனத்தின் கூடு கிடக்கிறது.... எங்கும் திரளான மக்கள் குழுவாய் கூட்டமாய் அலைமோதியப்படி. தொடரான துப்பாக்கி சத்தம்... விட்டுவிட்டு வெடிசத்தம் நிலம் கிழிக்கிறது. கந்தக நெடியோடு பக்கத்தில் இருப்பவரை காண இயலாத புகையின் அடர்த்தி. மூட்டை முடிச்சோடு மக்கள் ஒரு புள்ளியை நோக்கி நகர்த்தப்படுகிறார்கள்.

மக்களுக்கு இடையே இராணுவவீரர்கள் தென்படுகிறார்கள் கையில் துப்பாக்கியும் முகத்தில் புகை கவசத்துடனும். ஒரு சின்ன மரத்தின் கீழ் தன் மகளை தோளில் சாய்த்தப்படி நடுத்தர வயதுகாரர். மகளுக்கு ஏழெட்டு வயதிருக்கலாம் அழுக்கடைந்த பாவாடை சட்டையுடன். இருவருமே தாகம் பசியால் மயங்கிய நிலையில் மர நிழலின் கீழ் இருக்கின்றார்கள்...
ஒருகை, அந்த நடுத்தர வயதினரின் தோள்தோட்டு மறுகையால் தண்ணீர் குடுவையை நீட்டுகிறது. தண்ணீரை ஆவலோடு வாங்கிகொண்டவர் தன் மகளின் வாயருகே கொண்டுச்செல்கிறார். தண்ணீரை குடிக்க எத்தணிக்கையில் அந்த சிறுமியின் கண்ணில் படுகிறது தண்ணீர் வழங்கியவனின் கால்பகுதி அது உடுத்தியிருப்பது ஆம்மி சீருடை ...
வலதுகையால் தண்ணீர் குடுவையை விலக்கிவிட்டு மீண்டும் தந்தையின் தோள்மீது சாய்ந்து விடுகிறாள்... அந்த சிறுமி.


                                     மீண்டும் திரையில் எழுத்துக்கள்.....
Related Posts with Thumbnails