நவம்பர் 22, 2013

உவமைக் கவிஞர் சுரதா



அனிச்சத்தை மென்மைக்கு  உவமை என்பர்
           ஆழ்கடலே உள்ளத்தின் எல்லை என்பர்
பனிப்பூவை பாவையரின் பாதம் என்பர்
          பாறையதை கல்மனதின் உவமை என்பர்
கனித்தமிழே அமுதுக்கு உவமை ஆகும்
         கார்மேகம் கூந்தலுக்கு உவமை தானே!
தனித்தனியே அத்தனைக்கும் உவமை உண்டு
        தமிழினிலே உவமைக்கு உவமை நீயே!

பாரதியின் தாசனுக்கு தாசன் நீதான்
         பாவினத்தில் மரபுக்கு நேசன் நீதான்
யாராக இருந்தாலும் அச்சம் இன்றி
          யதார்த்தம் பேசுகின்ற உண்மை வீரன்
நேரான சீர்வழியே உன்றன் பாதை
          நெஞ்சினிலே பெருளீட்டும் ஆசை இல்லை
தீராதத்  துயரத்தில் வாழ்ந்த போதும்
         தீந்தமிழை ஒருபோதும் நீங்கா வாழ்ந்தாய்.

உன்கவியில் உவமையாக சொற்கள் கெஞ்சும்
          உள்ளபடி  உன்பாட்டே அமுதை விஞ்சும்
என்போன்ற பாமரர்க்கும் உன்பா தேன்தான்
          எந்திக்கும் உன்விருத்தம் துள்ளும் மான்தான்
தன்மானம் பெரிதென்று நிமிர்ந்து நின்றாய்
         தமிழுக்கு குறையென்றால் எதிர்த்து நின்றாய்
அன்பிற்கும் பண்பிற்கும் வடிவம் நீயே
          அதற்குள்ளே உனையழைத்த எமனும் தீயே.

உரமான கருத்ததனை உலகம் போற்ற
       உயர்வான செம்மொழியின் புகழை கூட்ட
தரமான சொற்களினை தமிழில் தேடி
       தந்திட்ட பெருங்கவிஞன் பெயரைக் கேட்டால்
சுரதாவின் பெயரைத்தான் சொல்லத் தோன்றும்
       சூரியனாய் வாழ்ந்தவரை நினைக்க தூண்டும்
மரபதையும் வரம்பதையும் மீறா நல்ல
       மாக்கவிஞன் இவறைவிட்டால் வேறு யாரோ?



( உவமைக்கவிஞர் சுரதா அவர்களின் பிறந்த நாள் 23-11-1921.  கவிஞர் சுரதாவை பற்றிய கவிதை மலருக்காக  5 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய கவிதை. நல்ல தரமான ஒரு கவிஞனை நினைவில் நிறுத்தி அவருக்கு புகழ் சேர்ப்போம். இந்தக்கவிதை மலேசியா நாளேடான தமிழ் நேசனில் 06-03-2011 ல் அச்சேரியக்கவிதை)




நவம்பர் 12, 2013

காதல் தின்றவன் - 45

பெருங்காடு அழிந்தபின்
வெறிச்சோடிய நிலப்பரப்பாய்
மனதை வெறுமையாக்கிவிடுகிறது,
உன்
சிறு பிரிவு.

அக்டோபர் 24, 2013

காதல் தின்றவன் - 44

பச்சையத்தை
சேமித்து உயிர்வாழும்
வறண்ட நிலதாவரமாய்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
நீ,
வராத நாட்களில்
சேமித்த உன் நினைவுகளோடு.

அக்டோபர் 11, 2013

காதல் தின்றவன் - 42


காதலில்
பசலைநோய் சாத்தியமாம்.
வா... நாம்,
பசலைக்கு
காதலைப் பரப்புவோம்.

செப்டம்பர் 20, 2013

காதல் தின்றவன் -40



கோபித்து சென்றுவிட்டாய்.

நெருப்புக் கட்டிகளை
நெஞ்சில் சுமக்கிறேன்,

நீ வந்தனை.

செப்டம்பர் 10, 2013

காதல் தின்றவன் - 21

உனதான பாதி
எனக்கும்,
எனதான பாதி
உனக்குமானதில்
நமதாகிப் போனது காதல்.


ஆகஸ்ட் 31, 2013

தங்க மீன்கள்

தங்க மீன்கள்

வெளியீட்டு அன்றே முதல் காட்சி பார்பதற்காக காத்திருந்தேன். அப்படியே நேற்று முதல் காட்சி பார்த்தேன்.

காட்சிகள் மிக துள்ளியமாக படகோர்வை செய்திருந்தார்கள். ஒவ்வோரு காட்சியும் சிறப்பாக செதுக்கப்பட்டிருந்தது. பாடல் பாடல்வரிகள் மனதை ஈர்ப்பதாய் இருந்தது. எல்லோருக்கும் அமையாத அப்பாவுக்கும் மகளுக்குமான தனி உலகம் கண்ட எனக்கு, ஒரு மகளுக்காக இப்படியான அப்பாவா வாழனும் என்கிற ஆசையை விதைத்தது.

இன்றைய கல்விச்சூழலை காட்டிய விதம் பாராட்டுதலுக்கு உரியது. ஆடம்பர பள்ளிகளின் தார்மீகச்சுழல், பண்ணை நடத்துவது கதையோடு பின்னப்பட்ட விதம் மிக நேர்த்தி.

எப்படா பள்ளிவிடும், விட்டால் போதும் என மகிழ்ச்சியோடு பிள்ளைகள் வெளியே ஓடிவந்தால் அது பள்ளிகளின் கோளாறு என புரிய வைத்தது.

எந்த தருணத்திலும் பிள்ளைகளை கொண்டாடுங்கள் என கற்றுதரும் படம்.

கதைக்கான அனைவரும் மிக பொருத்தம்... இதில் தனித்து சொல்வதற்கல்ல... கொஞ்சமும் சாயம்பூசாத இயல்பு.

பெரிய திரையில் காணும்போது கூடுதல் பிரமிப்பை உணரலாம். அருவாள், தொப்புள், இரத்தம், சத்தம்..... இல்லாத மன நிறைவை தந்த படமுங்க... .

அனைவருக்கும் பாராட்டுகள்.

திரு ராம் அவர்களின் கல்வெட்டு இது. “தங்க மீன்கள்” மனமெங்கும் நீந்துகின்றன.

அன்புடன் நான்,
சி.கருணாகரசு.

ஆகஸ்ட் 21, 2013

காதல் தின்றவன் - 41


சொல்பேச்சி கேட்காமல்
மழையில் நனைகிறாய்,
இன்று
எதைநான் போர்த்திக்கொள்ள?

ஆகஸ்ட் 14, 2013

காதல் தின்றவன் -33


ஒரு பெருமழைக்குப் பின்
பச்சை பிடித்துக்கொள்ளும்
மானாவரி நிலமாய்,
உன் வருகைக்குப் பின்
என் உயிர்.

ஆகஸ்ட் 08, 2013

காதல் தின்றவன் -38



உன்னை
அணர்த்தும் வலியோடு
அழைத்துச் சென்று
அறைக்கதவை சாத்தினார்கள்.
பிள்ளைச் சத்ததிற்கு பின்னும்
கடும்வலி சுமந்தபடி
காத்து கிடக்கிறேன்
கதவோரம் - உன்
காதல் தின்றவன்.

ஜூலை 30, 2013

காதல் தின்றவன் - 39



வித்தியாசம் ஏதுமில்லை
பொம்மைக்கேட்டு
அடம்பிடிக்கும் குழந்தைக்கும்,
உன்னைக்கேட்டு 
அடம்பிடிக்கும் என் மனதிற்கும்.

ஜூலை 24, 2013

புல்லாங்குழல்

நகர்ந்துகொண்டே இருப்பது
காலம் மட்டுமல்ல- அவர்
கால்களும் தான்.

அந்த வட்டாரத்தில்
எந்த திருவிழாவிலும்
அவரை பார்க்கலாம்.

ஒரு மரக்கழியிலேயே
தொங்குகின்றன- அவரின்
மொத்த மூலதனமும்.
அவை...
ஊசலாடியப்படியே இருக்கும்
அவர் வருனாமத்தை போல.
ஆனால்...
அறுந்து விழுவதே இல்லை
அவர் தன்மானத்தை போல.

ஒட்டிய கன்னம்
உட்குழி கண்கள்
வறண்ட உதடு
வற்றிய வயிறு
தேய்ந்த பாதம்
காய்ந்த கைகள்- என
வாழ்க்கை இவருக்குள்
வாசிப்பதென்னவோ...
சோகசுரம்தான்.
ஆனால்,
இவர் விற்பதென்னவோ
புல்லாங்குழல்கள்.



.

ஜூலை 12, 2013

காதல் தின்றவன் - 35



நீ
தோழிகளோடு
கதைத்தபடி செல்கிறாய்,
நான்
கவிதைகள் பொறுக்கியபடி
உன்னை தொடர்கிறேன்.

ஜூலை 05, 2013

கருப்பு யூலை - 1983



அன்று,
வாழ்விடத்தில்…
கலவரம் செய்தது!
இன்று,
கலவர இடத்தில்…
வாழச் செய்யுது!!
இழப்பும்
வலியும்
மாற வில்லை!
இது,பேரின வாதத்தின்
மாறாத் தொல்லை!!

ஜூலை 01, 2013

காதல் தின்றவன் - 32


நான் உறிஞ்சும் தேநீருக்காய்
நீ
படுக்கையை விட்டு
விடுபட முயல்கிறாய்.
எனக்கோ
சுவைத்தேநீர் மீது
கசப்புணர்வு.

ஜூன் 27, 2013

காதல் தின்றவன் -31


சிலர்
தங்க வளையல்
அணிந்திருப்பார்கள்,
உன் வளையல்
தங்கத்தை அணிந்திருக்கிறது.

ஜூன் 24, 2013

கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள்

கவியரசரின் பிறந்தநாள் இன்று

சிங்கப்பூர் வானொலி ஒலி 96-8-ல் ஒலியேறிய என் படைப்பு.

ஜூன் 19, 2013

காதல் தின்றவன் -29


கவிதைநூலை வாசித்த
கர்வம்,
உன்னைக் கண்டுத்திரும்பும்
என் கண்களுக்கு.

ஜூன் 10, 2013

காதல் தின்றவன் -28


கற்கண்டு மலையைத்தின்னும்
ஒற்றை எறும்பாய்
திக்குமுக்காடுகிறது
உன்னைத் தின்னும்
என் காதல்.

மே 28, 2013

காதல் தின்றவன் -26


உன் 
வெட்கம் தின்றே
பசியாரிக் கொள்கிறது,
என் காதல்.

மே 22, 2013

காதல் தின்றவன் - 25



புயல் தாக்கிய
கடலோர மாவட்டமாய்
ஒழுங்கற்று கிடக்கிறது
உன்னைக் காணா மனசு.

மே 17, 2013

காதல் தின்றவன் -24


பூ விற்கும் பெண்மணி
கூடை நிறைய
சுமந்து திரிகிறாள்
உன் வாசத்தை.

மே 11, 2013

காதல் தின்றவன் -23


உன்னையும் என்னையும்
ஒருசேர தின்பதே
காதலின் களிப்பு.

மே 04, 2013

காதல் தின்றவன் -22

நீயும் நானும்
சந்தித்தாலே...
இந்தக் காதல்
சலங்கைக்கட்டிக் கொள்கிறது.

ஏப்ரல் 24, 2013

காதல் தின்றவன் -20

தூரத்தில் நீ
நோய்ப்பட்டு கிடந்தேன்,
பக்கத்தில் நீ
மருந்தாகிப்போனாய்.

ஏப்ரல் 10, 2013

காதல் தின்றவன் - 17

பிடித்த உடை எதுவெங்கிறாய்
நான்
நீ எங்கிறேன்.
உடுத்திக் கொள்ள வா?! 

மார்ச் 31, 2013

காதல் தின்றவன் - 19


உன் பெயரையும்
என் பெயரையும்
ஒருசேர எழுதித்தந்தேன்,
காதலுக்கு முகவரியாய்.

பிப்ரவரி 26, 2013

காதல் தின்றவன் -12

வாசலில்
தண்ணீர் தெளித்து
புள்ளி வைக்கிறாய் நீ.
மனம்
உன்னைச்சுற்றி
கோலமிடுகிறது.


பிப்ரவரி 15, 2013

காதல் தின்றவன் - 18

பல் தேய்க்கும்போது
பேசி தொலைக்காதே,
தெறிக்கின்றன...
வெள்ளைக் கவிதைகள்.

ஜனவரி 29, 2013

கவிதைநூல் அறிமுக நிகழ்வு



எனது கவிதை நூல் அறிமுக நிகழ்வுக்கு அழைக்கிறேன்.

வழித்தடம்: BOON KENG  MRT Exit B.
பேருந்து எண்கள்:13,23,31,64,65,66,125,133,857,985,NR6.


ஜனவரி 18, 2013

காதல் தின்றவன் -11


மழைக்கால அந்தியில்
தேநீருடன் வருகிறாய்,
மனம்...
உன்னைக் குடிக்கிறது.


ஜனவரி 07, 2013

காதல் தின்றவன் - 10

உன் 
செருப்புகள் மட்டும்
தேய்வதே இல்லை,
மகரந்தம் சுமப்பதால்.


Related Posts with Thumbnails