நெஞ்சுக் கூட்டின்
நிழற்படம் போல்
இலைகளை இழந்து
கிளைகளோடு மட்டுமே
“மரமென” நிற்கிறது.
வெப்பச் சூட்டில்
பொசுங்கி கிடக்கின்றன
ஒருக் கிளையில்
ஒருக் கூட்டில்
இரண்டு குஞ்சுகள்.
இளைப்பாற எவருமின்றி
தனித்துக் கிடக்கின்றன
அந்த மரத்தின் கீழ்
அசையா இருக்கைகள்.
மரத்தை சூழ்ந்திருந்த புல்வெளி
மஞ்சள் கூழங்களாகி விட்டது.
ஏழெட்டு மாதங்களாய்
மழையையே பார்க்காத
மண்ணின் நாக்கு
வறண்டு சுருள்கிறது.
வெப்பக் கொப்புளங்கள்
நாற்றங்கலாகின்றன
மனித உடலில்.
தங்கமாகி விட்டன
தண்ணீர்த் துளிகள்.
(தமிழ் மொழி மாத நிகழ்வின், சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழாவில் கவிதை போட்டியில் ஊக்க பரிசு பெற்ற எனது கவிதை)
விழா நாள் 05-04-14.
Tweet |