டிசம்பர் 31, 2012

காதல் தின்றவன் -09

நீ 
பூ மரத்தின் கீழ்
அமர்ந்திருக்கிறாய்,
பூக்கள்
ஒரு தேவதையை
குளிப்பாட்டி மகிழ்கின்றன.

டிசம்பர் 26, 2012

காதல் தின்றவன் -08

நீ
பேருந்தில் அமர்ந்தபின்
வழியனுப்ப வந்த என்னை
வீட்டிற்கு போ என்கிறாய்,
அம்மாவை
பிரிந்தழும் குழந்தையாய்
தேம்பித் திரும்புகிறது மனம்

டிசம்பர் 20, 2012

காதல் தின்றவன் -07

நீ
நகங்களுக்கு 
சாயம் பூசுகிறாய்.
நான்
ஒற்றை நிறத்தில்
வானவில் ரசிக்கிறேன்.

டிசம்பர் 14, 2012

காதல் தின்றவன் -06

                          
என்னதான் ...
தின்றுகொண்டே இருந்தாலும்
தீர்ந்தபாடில்லை ...
நம் காதல்.

டிசம்பர் 05, 2012

காதல் தின்றவன் - 05

நீ 
அழகாய் இருப்பதாய்
சொல்கிறார்கள்.
கர்வம் கொள்ளாதே
அழகுதான்
உன்னைப்போல் இருக்கிறது.


நவம்பர் 30, 2012

காதல் தின்றவன் - 04

மஞ்சள் பூசிக் குளி
என்கிறாள் அம்மா,
உன்னைப் பூசிக் குளிப்பேன்
என்கிறது மஞ்சள்.


நவம்பர் 23, 2012

காதல் தின்றவன் - 03

என்னதான்
குடைப்பிடித்திருந்தாலும்
உன்னை
தீண்டி மகிழ்கின்றன- சில
திருட்டு மழைத்துளிகள்.

நவம்பர் 12, 2012

காதல் தின்றவன் -02

ஒற்றுப் பிழையால்கூட
அழகாகிவிடுகிறது
ஓர்க் கவிதை!
உன் 
தெத்துபல் போல.

நவம்பர் 04, 2012

காதல் தின்றவன் -01

என்
காதலென்ற கொடும்பசிக்கு
பெருந் தீனியாகிவிடுகிறது
உன்
முத்தப் பருக்கைகள்.

அக்டோபர் 31, 2012

உன் முகம்


நீ
இமைகளுக்கு
மை தீட்டி கொள்கிறாய்,
கண்ணாடி 
தன்னை 
ஒப்பனை செய்துகொள்கிறது.

செப்டம்பர் 28, 2012

அன்றுமுதல்...

செவிலித்தாய்
தோழிமார்
புறா
கடிதம்
அலைபேசி 
இணையம் என
காலங்களால் மாறுது
காதலுக்கான தூது.

கண்களே என்றும் 
காதலுக்கான மூலத்தாது!

ஆகஸ்ட் 13, 2012

வானம்


உழுதவன் கண்ணீரை
அழுதே துடைக்கிறது
வானம்!
(எனது தேடலைச்சுவாசி நூலிலிருந்து)


ஜூலை 30, 2012

கைரேகைகைரேகை பார்த்தால்
நீ வெட்டி!
உன் கைரேகை
தேய்ந்தால் தான் வெற்றி!!

ஜூலை 16, 2012

மரப்பாச்சி


தேம்பிழழும் குழந்தையை
ஆறுதல்படுத்தும்
மகிழ்ச்சிக் கேடயம்,
மரப்பாச்சி பொம்மைகள்.

அது... வீடுகளில்
திண்ணைகள் இருந்த காலம்.
காடுச்செல்லும் அம்மாக்கள்,
குழந்தையை மரப்பாச்சியிடமும்
மரப்பாச்சியைக் குழந்தையிடமும்
விட்டுச்செல்வதில்தான் நம்பிக்கை.

தாழ்வாரம்
பூவரச மரநிழல்
மாட்டுக் கொட்டகை
திண்ணை... இவைகள்தான்
மரப்பாச்சியோடு எங்கள்
மழலைகள் விளையாடும்
மகிழ்வரங்கம்.

மரப்பாச்சியை
பொய்யாய்க் குளிப்பாட்டி
தலைவாரிப் பூச்சூடி
உணவூட்டி உறங்கவைக்கும்
குழந்தைகளுக்கு,
அறவே வருவதில்லை
அம்மா நினைவும்
அந்த வேளை பசியும்.

இன்று தெருக்களில்
சீனபொம்மைகளை
கூவி விற்பதை கேட்கையில்,
கைகால் உடைந்த
மரப்பாச்சி பொம்மையாய்
மனம் வலிக்கிறது.

ஏனெனில்,
இவைகளே அன்றைய...
குழந்தைகளின் குழந்தை!.
.

ஜூலை 10, 2012

காதல்
பாதையில் உன்னைப்
பார்க்கையில் மட்டும்
பழுதாகி விடுகிறது,
என்
வயசும்
வாகனமும்.

ஜூன் 27, 2012

வேர்(கள்)


மண்ணில்
மறைந்திருக்கும்
மரத்தின் முகவரி.
( எனது “தேடலைச்சுவாசி” நூலிலிருந்து)

ஜூன் 15, 2012

கேள்வி


பசும்பால் நல்லதாம்
குழந்தைக்கு.


தாய்ப்பால் கெடுதலா
கன்றுக்கு?


(எனது “தேடலைச்சுவாசி” நூலிலிருந்து)

மே 28, 2012

விடியல்


விடியலுக்கு என்று 
ஓர் பொழுது இல்லை,
விடியலே இல்லாது
ஓர் பொழுதும் இல்லை.

தகிக்கும் வெயிலில்
வேகும் மனதிற்கு
தென்றலாய் அமையும்,
நிம்மதிக்கு பெயர் விடியலே.

அடர்ந்த வாழ்வில்
காற்றோட்டமாய் அமையும்
பொழுதுகள் அத்தனையிலும்
விடியல்கள்,
திளைக்கும் கிளைக்கும்.

அந்திக்குப் பின்
இருள் கவ்வும் பொழுதுகூட
நட்சத்திரங்களுக்கான
விடியல்தான்.

விடியலுக்கு என்று
ஓர் பொழுது இல்லை,
விடியலே இல்லாது
ஓர் பொழுதும் இல்லை.


மே 17, 2012

குற்றப்பகிர்வு

இறந்த உறவுக்கு அஞ்சலி
இறைவா நீ
இருந்தால் எதிரிக்கு நஞ்சளி.


மே 07, 2012

உலங்கூர்திமேலை நாட்டு
நாகரிகத்திற்கு
உட்படுத்திக்கொண்டோம்.

திணிக்கப்பட்ட பண்பாடுகள்
பழக்கமாகிவிட்டது இப்போது.

பத்தாண்டுகால இடைவெளியில்
வாழ்க்கை கோப்பை
வசதிகளால் நிரம்பி வழிகிறது.

இலண்டன் மாநகரின்
வணிக வீதியில்
திடீரென மிரண்டு
நடுங்கியப்படி
தரையில் படுத்துக்கொண்ட
என் மகளை,
வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு
புரியவைப்பது எப்படி
உலங்கூர்தியின் சத்தத்தை.

விரட்டியடிக்கப்பட்ட
காயங்கள் இன்று
தழுக்புகள் ஆகிவிட்டது.

எந்த இடைவெளிகளும்
வடிகால் ஆவதில்லை
இருப்பிடம் துறந்த
எங்கள் துயரத்திற்கு.

ஏப்ரல் 30, 2012

என் தோழமை


என்
களைப்புக்கு நிழல்
கண்ணீருக்கு ஆறுதல்
காயத்திற்கு மருந்தென
என் நலன்
சோராதிருக்க,
தன் நலன்
பங்கிட்டுத் தரும்
நல்ல மனங்களை
நானறிந்திருந்தாலும்

நன்றியுணர்வும்
நடிப்பில்லா நேர்மையும்
என்னைப்போல் அமைந்த
எல்லோரும் எனக்கு
தோழனே... தோழியே.


(படத்தில் தம்பி செல்வா, வேல்பாரி,தம்பி நவநீதம் ரமேஷ், கோவிந்தராசு, நான்.. )

ஏப்ரல் 07, 2012

அட்டைப்படம்

வணக்கம்

என் அடுத்த கவிதை தொகுப்பிற்கான அட்டைப்படங்கள்.
முதல் நூல் “தேடலைச் சுவாசி”
இது இரண்டாம் படைப்பு.
நன்றி.

மார்ச் 19, 2012

தவம்

நீ...
பூவை,
தலையில் வைத்துக்கொண்டாய்.

பூ....
தன்
தவத்தை முடித்துகொண்டது!

மார்ச் 15, 2012

கல்லூரிச்சாலை


பூக்கள் குத்தி
முட்களில் காயம்!
கல்லூரிச்சாலை!!


(படம் இணைய பக்கத்திலிருந்து எடுத்தாளாப்படுகிறது....  நன்றி கூகுல்)

பிப்ரவரி 16, 2012

எதிரி

                               வெண்பா

கதிராடும் நன்நிலத்தைக் காற்றாடும் காட்டைச்
சதியாடி மானிடவன் சாய்த்தான் - மதிக்கெட்டு
தாம்மட்டும் வாழத் தரணியின் சீர்கெடுக்கும்
நாம்தான் எதிரி நமக்கு.

பிப்ரவரி 05, 2012

வெளிச்சம்!


உடல் முழுதும் வலியேறி
உயிர்க் கொஞ்சம் வெளியேறி
உணர்வுப் பிழன்றத் தாயின்
இருண்டத் தருணத்தில்...
வெளிச்சமாகிறது!
சட்டெனக் கேட்கும்
பிள்ளைக் குரல்!.


சிங்கப்பூர்த் தமிழ் எழுத்த்தாளர்க் கழகமும் பெக்கியோ இந்திய சமூக நற்பணி மன்றமும் மாதந்தோறும்  நடத்தும் “கவிச்சோலை” நிகழ்வில்“வேதனையில் விளைந்த வெளிச்சம்” கவிதை போட்டியில் பரிசு பெற்ற என் கவிதை (04-02-2012)

ஜனவரி 14, 2012

பொங்கல் கவிதை (காணொளி)

வணக்கம்....

அனைவருக்கும் என் இனிய உழவர்தின வாழ்த்துக்கள்.
வானொலியில் வாசித்ததை புதிய காணொளியாக மாற்றியுள்ளேன்.
இதோ இருபுலன் மகிழ
என் கவிதை காணொளி!வாழ்த்துக்குக்கள் கூறி
வாழ்த்துக்கள் வேண்டி விடைபெறுகிறேன்.

நன்றி.ஜனவரி 03, 2012

புதியக் கொலவெறி

எல்லோருக்கும் வணக்கம்.

தமிழ் மூலம் வாழ்வை செழிப்பாக்கிக்கொண்டவர்கள்..... தமிழ்திரை ஊடகத்தின் மூலம் தன் கோரப்பற்களைக் காட்டியக் கொலவெறிக்கு எதிரான எங்கள் ஆதங்க காணொளி.Related Posts with Thumbnails