ஆகஸ்ட் 20, 2009

வேடதாரிகள்!

புன்னகையை உதட்டோரம் ஒட்டி வைத்து
*** புனிதரென காட்டிடவே நடித்து வைப்பார்
வன்மத்தை இதயத்தில் மறைத்து வைத்து
***வாஞ்சையோடு பேசுவதை தொழிலாய்க் கொள்வர்
சன்மானம் கிடைக்கின்ற இடங்கள் எல்லாம்
***தன்மானம் இழந்திடவும் காத்து நிற்பர்
இன்முகத்தை வேடமாக அணிந்துச் செல்லும்
*** இவர்போன்ற மனிதரிடம் கவனம் தேவை !

*
அக்கறையும் சர்க்கரையும் பேச்சில் உண்டு
*** அகம்பாவம் ஆணவமும் மூச்சில் உண்டு
வக்கிரத்தை வைத்திருப்பர் மூளைக் குள்ளே
*** வாக்கியத்தில் தெறிப்பதெல்லாம் பாச சொல்லே !
மக்களோடு மக்களாக வாழ நல்ல
***மானிடத்தை போர்வையாக ஆக்கிக் கொள்வர்
எக்கணமும் அரிதாரம் பூசிக் கொள்ளும்
***ஏமார்ந்தால் தலைமீது ஏறிக் கொல்லும்!

*
நல்விதமாய் பழகுவதாய் கைகள் கோர்க்கும்
***நரிபோல வஞ்சகமாய் நேரம் பார்க்கும்
வல்லவராய் தனைக்காட்ட வரிந்து பேசும்
***வசதிக்கு முன்மட்டும் வளைந்து போகும்
துல்லியமாய் கணக்கிட்டு தூண்டில் போடும்
***துடிக்கின்ற மீனுக்கும் இரங்கல் பாடும்
எல்லோர்க்கும் நல்லவராய் வேடம் போடும்
*** எச்சரிக்கை இருந்துவிட்டால் தப்பி ஓடும்
*
புத்தனென்றும் காந்தியென்றும் காட்டி கொண்டு
*** புத்தியிலே புரட்டுகளை தேக்கி வைக்கும்
சத்தியத்தின் அடிநாதம் தான்தான் என்று
***சத்தமாக பொய்யுரைத்தே காலம் தள்ளும்
கத்தியின்றி இரத்தமின்றி காயம் செய்யும்
***காரியத்தை உபத்தொழிலாய் நாளும் செய்யும்
உத்தமராய் முகமூடி அணிந்து வாழும்
***உயிர்க்கொல்லி இதுவென்று ஒதுங்கிச் செல்வீர் !

*
*
( எண்சீர் ஆசிரிய விருத்தம் )

14 கருத்துகள்:

துபாய் ராஜா சொன்னது…

வேடதாரிகளின் பல வேடங்களையும் வார்த்தைகளால் கலைத்துவிட்டீர்கள்.

படமும் நல்ல தேர்வு.

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க துபாய் ராசா.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

அழகான கரு..

சி.கருணாகரசு சொன்னது…

மிக்கந‌ன்றிங்க ஞானசேகரன்.

தமிழ் சொன்னது…

அருமை

கண்ணன் சொன்னது…

வேடதாரிகளின் வெவ்வேறு வேடங்களை
அடையாளபடுத்திய உங்களின் கவிதைக்கும்
உங்களுக்கும் நன்றி

Kala சொன்னது…

ஒவ்வொரு வரியில்லும் அருமையாக கலைந்திருக்கின்றீர்கள்
வேடங்களை. நீங்கள் கலைக்க நினைத்தாலும் .... அவர்கள்
களைய வேண்டுமே! வரிகள் நன்றாக இருக்கின்றன.

சி.கருணாகரசு சொன்னது…

மிக்க நன்றிங்க திகழ் மிளிர்

சி.கருணாகரசு சொன்னது…

மிக்க நன்றிங்க வேல் கண்ணன்

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க கலா.

சிவரஞ்சனிகருணாகரசு சொன்னது…

கவிதையின் கரு மிகவும் அருமை

சி.கருணாகரசு சொன்னது…

ரொம்ப நன்றிங்க சிவரஞ்சனி

ஹேமா சொன்னது…

படமும் கவிதையும் .....?
சொல்ல வேணாம்.

சி.கருணாகரசு சொன்னது…

ஹேமா,
நீங்க சொல்ல வில்லையென்றாலும் நான் சொல்வேன் . "நன்றிங்க".

Related Posts with Thumbnails