
உன் கைகள் ஆயுதமேந்தி 
உயிர் அறுவடை செய்வதை 
உன் தாய்க் கண்டிருந்தால் ,
கருவினிலே நீ... 
கலைந்திருக்கக் கூடாதா யென 
கவலைக் கொண்டிருப்பாள்.
*
கொலைக் குருதி குடிக்கும் 
கொடூரன் உன்னால் பெற்றத்
தாய்மையை விட...
மலடி வாழ்வே மேன்மையென 
மனசு வெம்பியிருப்பாள். 
*
உன்னைப் பொறுத்தவரை...
இரத்தத்தின் நிறம் சிவப்பு. 
அது , 
உயிரிலிருந்து
உன்னால்....... 
விசிறியடிக்கப்பட்டதென்ற 
உண்மைத் தேவையில்லை உனக்கு!
* 
உன் கொள்கை குப்பைக்காக 
எத்தனையோ கனவுப் பூக்களின் 
காம்பைக் கிள்ளி விட்டாயே?
*
உலகம், 
உன்னைத் தீவிரவாதி என்கிறது. 
எனக்கு நீயொரு... 
ஆண்மையில்லாத ஆயுதமேந்தி 
இன்னும் சொல்லலாம்....
*
என், 
கவிதை கொள்கையின் 
கண்ணியம் தடுக்கிறது.
* 
ஓ... உயிருண்ணியே! 
உன்னால் வெட்கப்பட்டிருக்கும் 
உன் ஆயுதம். 
*
அப்பாவிகளை அழிக்க 
ஆயுதமேந்தும்... 
உன் "கை"யில் 
அகப்பட்டதற்காக. 
(மும்பை தாக்குதலின் போது எழுதிய கவிதை)
| Tweet | 
4 கருத்துகள்:
கருணாகரசு,கொஞ்சம் முரண்படுகிறேன்.இரத்தம் அர்த்தமற்றது.அதற்காக ஆயுதம்தான் தீர்வு அல்ல.ஆனாலும் சிலர் ஆயுதத்தை விரும்பாவிட்டாலும் எடுக்க வைக்கிறார்களே.
கவிதையின் கருப்பொருள் அருமை.
இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான சிந்திக்கவேண்டிய கவிதை.
ஹேமா உங்களின் முரண்பாட்டில் எனக்கு முழு உடன் பாடுதான்.
உரிமைக்கென எடுக்கும் ஆயுதத்தை மதிக்கிறேன்.
உயிரெடுக்க எடுக்கும் ஆயுதத்தை வெறுக்கிறேன்.
தற்காக்க,தரணிகாக்க
பெற்றெடுத்தால் நன்று
தகர்தெறிய,தரைமட்டமாக்க
பெற்றெடுத்தால்....?
உணர்ச்சி மிக்க கவிதை
நன்று.
கவிதைப் போல கருத்துரை நல்லா இருக்கு. உங்களின் கருத்துரையை ஏற்கிறேன் ... மிக்க நன்றிங்க கலா.
கருத்துரையிடுக