நவம்பர் 29, 2025

மானுடக்கவி மருதகாசி

 முன்னுரை:


வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்து கவித்திறனால் சுமார் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நாலாயிரத்துக்கும் அதிகமானப் பாடல்கள் இயற்றிவர். ”திரைக்கவி திலகம்” என்ற அழியாப் புகழ்பெற்ற அ.மருதகாசி அவர்களின் வாழ்வியல் மற்றும் படைப்பியல் குறித்த ஒரு பொதுப் பார்வை.


பிறப்பு:


இந்தியாவின் தென்கோடியில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்திருந்த  ,அன்றையத் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அரியலூர் வட்டாரமாகும். அங்கே சிமெண்டு ஆலைகளினால் புழுதி மண்டாமலும், பெரும் நிலப்பரப்பை தனியார் தின்னாமலும், பசுமை நிறைந்து வேளாண்குடி நிம்மதியாய்ப் பெருவாழ்வு  வாழ்ந்த காலம். அந்நிலப்பரப்பில் மேலக்குடிக்காடு என்னும் சிற்றூரில்  ஐய்யம்பெருமாள்  மிளகாயி இவர்களுக்கு 1920ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் நாள் பிறந்தார் மருதகாசி. மருதகாசிக்கு முன்பே இருவர் பிறந்து இறந்துவிட்டதால், மூக்குக் குத்தினால் பிள்ளை உயிர் தங்கும் என்ற அன்றைய நம்பிக்கைக்கு ஏற்ப மருதகாசிக்கு மூக்குத்தி அணிவிக்கப்பட்டது.


கற்றல்:


உள்ளூரில் நான்காம் வகுப்புவரை பயின்றவர் பின்னர் எட்டாம் வகுப்புவரை  கும்பகோணம் பாணாதுரை உயர்நிலைப்பள்ளியில் கற்றார். ”பாபநாசம்சிவன்” அவர்களின் அண்ணன் ராசகோபால ஐயரிடம் இலக்கண இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார். தனது “இண்டர்மீடியட்” படிப்பை கும்பகோணம் அரசினர்க் கல்லூரியில் நிறைவு செய்தார். மருதகாசி அவர்களின் தமிழார்வம் கண்டு, தமிழறிஞர் கோ.முத்துப்பிள்ளை பலவகையிலும் ஊக்குவித்து வழிகாட்டினார்.  அப்பருவத்திலேயே அருணாசலக் கவிராயர் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு, கவிராயரின் படைப்புகளை தேறப் படித்து உள்வாங்கிக்கொண்டார். அப்போதிலிருந்தே தானும் கவியெழுதத் தொடங்கி அப்பயிற்சியில் ஆற்றல் பெற்றவராய் விளங்கினார்.


குடும்பச்சூழலும் இல்வாழ்வும்


மருதகாசி “இண்டர்மீடியட்” படிப்புக்குப்பின் மேற்கல்வி கற்க முற்பட்டபோது, பெருநிலக்கிழாராக இருந்த அவர்தம் அன்றைய குடும்பச்சூழல் அதற்கு ஏதுவாக அமையாமல், வேளாண்மை பக்கம் திருப்பிவிட்டது. அத்துடன் மேற்கல்வி எண்ணத்தை மூட்டை கட்டியவர், வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டார். மேலும் தன் தந்தை பார்த்துவந்த கிராம அதிகாரிப் பணியை மருதகாசி தொடர்ந்தார். தமது இருபதாவது வயதில் தனக்கோடி என்பவரைத் திருமணம் செய்துகொண்டு இல்வாழ்வில் இணைந்தார். இவருக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள். அதில் ஆறு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள்.

 

கதை-வசனம்-பாடல்-நடிப்பு


கவிஞர் கல்லூரிக் காலங்களிலேயே நாடகங்களை எழுதி இயக்கிய பட்டறிவைப் பெற்றார். மேலும் நண்பர்களின் நாடகங்களுக்கும் கதை வசனம் பாடல்கள் எழுதினார். “கலைமகள் உறைந்துடும் கலாசாலை” என்பதுதான் கவிஞர் நாடகத்திற்கு எழுதிய  முதல் பாடல் ஆகும்.  பின்னர் ”தேவி நாடக சபை”யில் பாடலாசிரியராகப் பணியாற்றினார். அதன் மூலம் சூறாவளி என்ற நாடகத்திற்குப் பாடலெழுதும் வாய்ப்பையும் கவிஞர் ”கா.மு.செரீப்” அவர்களின் நட்பையும் பெற்றார். “கா.மு.செரீப்” அவர்களுடன் இணைந்தும் தனியாகவும் நாடகங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கின்றார். அந்நாடகங்கள் ஒன்றிரண்டில் நடிகராகவும் மேடையேறி நடித்த பெருமையும் நம் கவிஞருக்கு உண்டு.


குருவானவர்கள்


கல்வி கற்கும் காலங்களில் அருணாசலக் கவிராயரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு  அவரைத் தனது குருவாகக் கொண்டு படைப்பிலக்கியத்தில் நுழைந்தார். நாடகப் பாடல்கள் எழுதும் காலத்தில் கவிஞர் கா.மு.செரீப் நட்பினை குருவாக மனதில் கொண்டார். திரை இசைப்பாடல்களால் பெரும் புகழ் பெற்ற “உடுமலை நாராயணக்கவி” அவர்களைதான் மருதகாசியின் மானசீக குருவாக கொண்டார். உடுமலை நாராயணக்கவியின் பாடல்களோடு ஒப்பிடுகையில், தனது பாடல்கள் அவரின் தரத்திற்கு நிகரானவை அல்ல என்பதைச் சொல்லியே தனது குருவான உடுமலை நாராயணக்கவியை உச்ச குருவாக நிலை நிறுத்தியவர்.


வசந்த அழைப்பு


”ஒரே முத்தம்”, “பராசக்தி” ஆகிய நாடகங்களுக்குப் பாடல் எழுதிவிட்டு நாடகத்தில் நடிகனாகவும்  பயணம் செய்தார். நாடக நிறுவனம் எங்கு செல்கிறதோ அங்கெல்லாம் பயணித்தார். அப்படி காரைக்குடி முகாமில் அரு.ராமனாதன் அவர்களின் “வானவில்” நாடகத்திற்கு திருச்சி லோகநாதன் அவர்களின் மெட்டுக்கு பாடல் எழுதிய கையோடு, குழு தஞ்சையில் முகாமிட்டது. அப்போதுதான் “சேலம் மாடர்ன் தியேட்டர்சின்” கடிதங்கள் கவிஞர் அ.மருதகாசிக்கும் கவிஞர் கா.மு செரீப்க்கும் வந்து சேர்ந்தன. அதுதான் திரைத்துறைக்கான வசந்த அழைப்பு.


திரைத்துறை நுழைவு


சேலம் மாடர்ன் தியேட்டர்சின் கடிதம் சொன்ன தகவல், “நீங்கள் எழுதிய பாடலை திருச்சி லோகநாதன் பாடக் கேட்டோம். பாடல்கள் நிறைவைத் தந்தன, உடனே வந்து சேருங்கள்”. கவிஞர்கள் இருவரையும் மாடர்ன் தயாரிப்பு நிர்வாகம் வரவேற்று இசைமேதை G.இராமனாதய்யரின் மெட்டுக்குப் பாட்டெழுத வாய்ப்பளித்தது. இராமனாதய்யர் மெட்டுக்கு பாட்டெழுதினார் மருதகாசி. பாட்டுவரிகளால் மனநிறைவை பெறச்செய்தார் மருதகாசி. T.R.மகாலிங்கமும் அஞ்சலிதேவியும் நடித்த “மாயாவதி” திரைப்படத்தில் “பெண் எனும் மாயப்பேயாம் பொய்மாதரை” என்று தொடங்கும் வரிகள் பாடலானது. இப்படியாக 1949-ல் திரைத்துறை நுழைவும் இனிதாய் நிகழ்ந்தது. ஒரே நிறுவனத்தில் இருந்து வந்ததினால் பாடல்கள் “மருதகாசி-கா.மு.செரீப்” என இருவர் பெயரையும் ஒன்றாகவே குறிப்பிடப்பட்டு வெளிவந்தன.


திரைப்பயணம்


மாயாவதி பாடலுக்கு அடுத்து பாரதிதாசனின் திரைக்கதையில் 1950-ல் வெளியான ”பொன்முடி” படத்தில் அனைத்து பாடல்களையும் கவிஞர் மருதகாசியே எழுதினார். பாடல்கள் மருதகாசி-கா.மு.செரீப் என்றே வெளிவந்தன.  "பொன்முடி" படத்தின் பாடல்கள் கவிஞருக்கு புகழைத்தேடித் தந்ததால் அடுத்தடுத்து நிறைய படங்கள் ஒப்பந்தமாயின. மு.கருணாநிதியின் “மந்திரி குமாரி"யில் பாட்டெழுதும் வாய்ப்பையும் பெற்றார். “வாராய் நீ வாராய், போகும் இடம் வெகுதூரமில்லை நீ வராய்” என்ற எதிர்மறைப் பாடலும் “உலவும் தென்றல் காற்றினிலே” பாடலும் எங்கும் ஒலித்து புகழைப்பரப்பின. அதன்பின் அன்றைய திரைநடிகரில் உச்ச நட்சத்திரமாய் கோலோச்சிய பாகவதரின் “அமரகவி”படத்திற்கும் பாடல்கள் எழுதி புகழினை நிலை நிறுத்திக்கொண்டார். பட்டி தொட்டியெங்கும் காற்றில் மிதந்தன மருதகாசியின் பாடல்கள். அன்றைய காலகட்டத்தில் எல்லா நிகழ்வுகளிலும் கூம்பு ஒலிபெருக்கியில் காற்றை நிறைத்து  ஒலித்தன “மானுடக்கவி மருதகாசியின் பாடல்கள்”


தொடர் பட வாய்ப்புகள்


கவிஞரின் பாடலுக்கென்றே நிறைய படங்கள் புகழ்பெறத் தொடங்கின.  பாகவதர் கலைவாணர் தொடர்ந்து சிவாசிகணேசன் அவர்களுக்கு ”தூக்குத் தூக்கி” படத்திற்கு பாடல் எழுதினார். அவை மேலும் கவிஞருக்குப் பெருமை சேர்க்க, தொடர்ந்து “தேவர் பிலிம்க்காக” MGR படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தது மருதகாசியின் புகழை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றது. MGR-க்கு கவிஞரின் பாட்டு வரிகள் மிகவும் பிடித்துபோக  அவரின் அடுத்தடுத்த படங்களுக்கும் மருதகாசியே நிறைய பாடல்களை எழுதினார். தனது சென்னை வீட்டின் முன் நிற்கின்ற மகிழுந்துகளில், எந்த மகிழுந்தில் ஏறி எந்த நிறுவனத்திற்கு போவது  என்று குழம்பும் நிலையில் அவரின் கவிவரிகளும் பொருளாதாரமும் கவிஞருக்கு புகழ்வெளிச்சம் தந்து ஆராதனைச் செய்தது அன்றைய திரைத்துறை. சொல்லப்போனால் தமிழ்த் திரையிசைப் பாடலாசிரியர் வரிசையில் உச்ச நட்சத்திரமாய் விளங்கினார். மருதகாசியை தவிர்த்து திரைத்துறை இல்லை எனும்படி பெரும்புகழுடன் வலம் வந்தார்.


 பாடல் வரிகளில் சில.


 தூக்குத்துக்கி படத்திற்கு “கண்வழி புகுந்து கருத்தினில் வளர்ந்து ”, "தாய்க்குபின் தாரம் படத்தின்”மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே”, நீலமலைத் திருடன் படத்தின் “சத்தியமே இலட்சியமாய்க் கொள்ளடா”, ரம்பையின் காதல் படத்தின் “சமரசம் உலாவும் இடமே”, ராசா ராணி படத்தில் கலைவாணருக்கு எழுதிய “சிரிப்பு அதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு” விவசாயி படத்தில் “கடவுளென்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி” என ஆரம்பிக்கும் பாடல்களின் வரிகள் இன்றும் மேடைப்பேச்சுக்கு கைகொடுக்கும் பாடலாக இருக்கிறது. பாவை விளக்கு படத்திற்கு எழுதிய “காவியமா நெஞ்சில் ஓவியமா”, "மக்களைப்பெற்ற மகராசி"க்காக “மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏரு பூட்டி”, "பிள்ளைக் கனியமுதே" விற்காக “ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை”, வண்ணக்கிளிக்காக “மாட்டுக்கார வேலா”, மல்லிகா படத்திற்காக “நீலவண்ண கண்னா வாடா…” போன்ற பாடல்களும் மேலும் “மாசிலா உண்மைக் காதலே”, “உல்லாச உலகம் உனக்கே சொந்தம்”, ”சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனாகற்கண்டே”, ”அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே”, “மனிதன் எல்லாம் தெரிந்துகொண்டான்”, “ஏரிக்கரையின் மேலே…”, “கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்”, “சிரிப்பவர் பலபேர் அழுபவர் பலபேர்” இப்படி தாலாட்டு, காதல், தத்துவம், வேளாண்மை, சோகம், சிரிப்பு, தனிமை, கிண்டல் என்று எல்லா உணர்வுகளுக்கும் சுமார் 250 திரைப்படங்களுக்கு நான்காயிரம் பாடல் எழுதி பெரும் புகழும் அதற்கான பொருளாதர வளர்ச்சியும் பெற்றார் கவிஞர் மருதாகாசி. அன்றைய காலத்தில் உழவுத்தொழில் சார்ந்தப் பாடல்கள் மொத்தம் இருபத்தொரு பாடல்கள்தான் தமிழ்திரையிசையில் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் பதினேழுப்பாடல்களை மருதகாசிதான்  எழுதியிருக்கின்றார்.


தனித்திறனும் நற்பண்பும்


சேலம் மார்டன் தியேட்டர் நிறுவனத்திற்கும் கவிஞருக்கும் மனகசப்பு ஏற்பட இனி மார்டன் தியேட்டர்க்கு எழுதுவதில்லை என்ற முடிவுடன் ஒதுங்கிக்கொண்டார். கவிஞரின் குணமானது மரியாதை கிடைக்காத இடங்களில் முட்டி மோதாமல் மென்மையாக ஒதுங்கி செல்வதேயாகும். அப்படிப்பட்ட நேரத்தில் மார்டன் தியேட்டர் “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்”படத்தை தாயாரித்தது. அதில் மருதகாசியைவிட சிறந்த கவிஞரை பாடல்கள் எழுத வைக்க முடிவுசெய்து “உடுமலை நாராயணகவி”யை அழைத்தது. உடுமலை மெட்டுக்கு எழுத மறுப்பவர். உடுமலை, மருதகாசியை அழைத்துக்கொண்டு மார்டன் தியேட்டர்க்கு சென்று இந்தப் படத்திற்கு பத்துபாடல்களில் ஒன்பது பாடல்களை மருதகாசி எழுதுவார். ஒரு பாடல் மட்டும் நான் எழுதுவேன் என்று மருதகாசி மீதிருந்த நட்பின் அடிப்படையில் சொல்ல, தன் குருவான உடுமலையின் சொல்லைத்தட்டாமல் பாடல் எழுதி தந்தவர் கவிஞர் மருதகாசி. ஒருமுறை ”நல்லவன் வாழ்வான்” திரைப்படத்திற்கு கவிஞர் “வாலி” பாடல் எழுதுகின்றார். அப்போதுதான் வாலிக்கு திரைத்துறையில் ஆரம்பகாலம், பாடலுக்கான காட்சி எடுக்கும்போது சிறு விபத்தாகி பாட்டு நிற்கிறது. மீண்டும் பாடல் ஒலிப்பதிவில் சிக்கலாகிப் போகிறது. வாலி புதியவர் என்பதால் ராசி இல்லையென்று ஒதுக்கப்படுகிறார். அதே பாடலை மருதகாசியை வைத்து எழுதுவது என்று முடிவாகி கவிஞர் அழைக்கப்படுகிறார். கவிஞரோ வாலி என்ன எழுதியிருக்கின்றார் என்பதைக் கேட்டு வாங்கி பாட்டுவரிகளை பார்க்கின்றார். வாலி சிறப்பாக எழுதியிருக்கின்றார் என்றும் இதையே ஒலிப்பதிவு செய்யுங்கள் என்று சொல்லி வாலிக்கு திரைவாசலை திறந்துவிட்ட நற்பண்புக்காரர் நம் “மானுடகவி மருதகாசி “. அப்படி வாலி எழுதிய பாடல்தான் “சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”.


படத்தயாரிப்பும் மன உளைச்சலும்


நிறைய படங்களுக்கு அனைத்துப் பாடல்களும் எழுதிய வகையில் கவிஞருக்கு முதலிடம் உண்டு. கவிராயர் மெட்டுக்குப் பாடல் எழுதுவது தனக்கு ஆகாது என்று ஒதுங்கிய பாடலுக்கும்  மருதகாசிதான் தனது திறனைக் கொண்டு எழுதி வல்லமை பெற்றார். அப்பேர்ப்பட்ட கவிஞர் திரைத்துறையில் தயாரிப்பில் ஈடுப்பட்டதுதான் கவிஞருக்கு சறுக்கலாகிப் போனது.  தன் நண்பர்களான கே.வி மகாதேவன், வி.கேமுத்துராமலிங்கம் மற்றும் வயலின் மகாதேவன் ஆகியோருடன்  சேர்ந்து “அல்லி பெற்ற பிள்ளை” என்ற படத்தைத் தயாரித்தார். அப்படம் சரியாக ஓடாததால் பெரும் இழப்பைச் சந்தித்து எல்லாவற்றையும் இழந்து மனஉளைச்சலுக்கு உள்ளாகி திரைப்படத்திற்கு பாடல் எழுதுவதையும் விட்டுவிட்டு  ஊருக்கு திரும்பி வேளாண்மையில் பொழுதைக் கழித்தார்.


மீண்டும் அரியணை


மருதாகாசி பொருளாதார நலிவுற்று இருப்பதை அறிந்த எம்.ஜி.ஆர்., மருதகாசியை அழைத்து வந்து மீண்டும் வாய்ப்பளிக்கின்றார். மருதகாசி மீண்டும் பாடல் எழுதி திரைத்துரையில் நிலை பெற்றார். அதற்கு அன்றைய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பண்பே காரணம். எந்தச் சூழலிலும் வாய்ப்புக்காக அலைந்ததில்லை மருதகாசி. எல்லாம் தனது திறனால் அவரை வந்தடைந்தவை. எந்த முரணும் யாருடனும் இல்லாமல் திரைப்பயணத்ததை தொடந்தவர் நம் கவிஞர். தன் கடைசிக் காலம் வரை பாட்டு வரிகளால் திரைத்துறையில்  ஆளுமையோடு இருந்து புகழொளியோடு வாழ்ந்தவர் மருதகாசி.


முடிவுரை


சற்றேறக்குறைய நாற்பது ஆண்டுகள் திரைப்படப் பாடலாசிரியராக கோலோச்சிய “திரைக்கவித்திலகம்” 1989-ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் நாள் உயிர்நீத்தார். தான் எழுதிய பாடல்களால் இன்றும் தமிழாகவும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். கவிஞரின் நூற்றாண்டு விழா சென்னையில் திரைத்துறையைச் சேர்ந்தவர்களால் 2020-இல் கொண்டாடப்பட்டது. 2007-ஆம் ஆண்டு கவிஞரின் திரையிசைப்பாடல்கள் அனைத்தும் “அரசுடமை” ஆக்கப்பட்டன. இன்னும் நூறாண்டுகள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழாய் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார், அந்த அரியலூர் மண்ணின் மேலக்குடிக்காடு ‘அய்யம்பெருமாள் மருதகாசி”

                                                              (நிறைவு)


கட்டுரைக்கு உதவிய திரட்டிகள்.


1.Wikipedia ( அ. மருதகாசி- தமிழ் விக்கிபீடியா)

2. திரைக்கவி திலகம் அ.மருதகாசி பாடல்கள்.

  (பரணிப்பதிப்பகம் – சூலை 1986)

3.மருதகாசியின் நூற்றாண்டுவிழா  கவிஞர்கள் உரை.

4. கவிஞர் பற்றிய you tube காணொளிகள்

5.தமிழ் விக்கிபீடியாவின் கவிஞர் பாட்டுவரிகள், வாழ்க்கை குறிப்புகள்.

  

எனது குறிப்புகள்.


அரியலூர் மாவடம் உகந்த நாயகன் குட்டிக்காடு என்ற கிராமமே எனது பிறப்பிடம். தற்போது  சிங்கப்பூரில் கட்டடப்பணியாற்றுகின்றேன். இதுவரை “தேடலைச்சுவாசி” “நீ வைத்த மருதாணி” “அரங்கேறியச் சலங்கைகள்” “சிறகின் பசி” “காதல் தின்றவன்” என்ற ஐந்து கவிதை நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கின்றேன். இலக்கிய அமைப்புகளில் ஒன்றிணைந்து பணியாற்றி இருக்கின்றேன். சிறுகதை எழுதும் முயற்சியில் இருக்கின்றேன். எனது தொடர்பு எண்: 65 83371699 (சிங்கப்பூர்).

எனது மின்னஞ்சல் முகவரி : karunakarasu@gmail.com


                                                                              சி.கருணாகரசு.                                                              உகந்த நாயகன் குடிக்காடு,                                                         அரியலூர் மாவட்டம்

டிசம்பர் 15, 2022

காதல் தின்றவன் -14


களைந்த படுக்கையை
ஒழுங்கு படுத்தினோம்,
கட்டில் உறங்கிட.

செப்டம்பர் 20, 2021

வானுயர்ச் சிங்கை

 கட்டளைக் கலித்துறை.

எழுத்துக்களின் எண்ணிக்கை கொண்டு எழுதப்படும் ஒருவகை மரபு.


ஒரு கண்ணிக்கு நான்கு அடிகள். ஒரு அடிக்கு ஐந்து சீர்கள். முதல் நான்கு சீர்கள் ஈரசையாகவும் ஐந்தாம்சீர் மூவசை கொண்ட விளங்காய் சீராகவும் அமைதல் வேண்டும்.

முதலாம் மூன்றாம் மற்றும் ஐந்தாம் சீர்களில் மோனையும் ஒவ்வொரு அடியின் ஐந்தாம்சீர் "விளங்காய்" வாய்ப்பாட்டில் வரனும். ஒவ்வொரு அடியிலும் முதலாம்சீர் எதுகை கொண்டும் ஈற்றடியின் கடைசி சீர் விளங்காய் வாய்ப்பாட்டுடன் ஏகாரத்தில் அமையனும்.


பாடலின் அடி...நேரசையில் ஆரம்பித்தால் ஒற்று எழுத்துகளை நீக்கி 16 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் ஒற்று நீக்கி 17 எழுத்துக்களும் இருக்க வேண்டும்.


பாடலில் வெண்பா இலக்கணம் கடைப்பிடிக்கவேண்டும். நிரயசையில் தொடங்கும் பாடலில் மட்டும் அடியின் ஈற்றுசீர்க்கும், வரும் அடியின் முதல் சீருக்கும் வெண்பா இலக்கணம் கடைப்பிடிக்க வேண்டியது இல்லை.


மரபுப்படலில் இது ஒருவித போதைதரும் பாவகை. எழுதும்போது சொற்கள் தேடலில் பெரும்போதை ஏற்றும்.(19-09-2021 சிங்கப்பூர் தமிழ்முரசில் எனது கவிதை)


#கட்டளைக்_கலித்துறை

#மரபுக்கவிதை

#சி_கருணாகரசு.


ஆகஸ்ட் 28, 2021

கொலுசு


 

அக்டோபர் 01, 2020

சி.க.இளநிலா


 

செப்டம்பர் 12, 2020

சி.க இளங்கதிர்



பதினோராம் அகவை எட்டும் என் மகனுக்கு 

வாழ்த்துகள்.

ஆகஸ்ட் 26, 2020

கவியரங்கம் (ஏன் பிறந்தேன்)

வணக்கம்....

சிங்கப்பூர் கவிமாலை கவியரங்கில், புதுமைத்தேனீ மா.அன்பழகன் அவர்கள் தலைமையில் "ஏன் பிறந்தேன்" என்ற பொது தலைப்பில் நான் பாடிய கவிதை. (2003) இது நான் கவியரங்கில் நடை பயின்ற காலம்...


டிசம்பர் 31, 2019

காதல் தின்றவன்



சிங்கப்பூர் 200. பாடல்.


இயற்கை


செப்டம்பர் 19, 2018

காதல் தின்றவன் - 43



திமிரெடுத்து திரிகிறது
பேரழகு.
உன்னை போத்திக்கொண்டு.

ஜனவரி 03, 2018

காதல் தின்றவன்

உன் 
காதலென்ற கொடும்பசிக்கு
பெருந் தீனியாகிவிடுகிறது
உன்
முத்தப்பருக்கைகள்.

அக்டோபர் 05, 2017

காதல் தின்றவன் - 36



நம்
காதலை
உயிராய் வளர்க்கும் உன்னை,
கருவுற்றிருப்பதாய்ச்
சொல்கிறார்கள்.

மே 20, 2016

காதல் தின்றவன் - 34



உனக்கான காத்திருத்தலில்
தூரம் எதுவானாலும்
உன் வருகையை
அறிந்துக் கொள்கிறது,
நீ வராத தருணத்தில்
அரிந்துக் கொல்கிறது.

மார்ச் 20, 2016

சிட்டுக்குருவி


அழிவின் விளிம்பிலென
அங்காலிப்பதெல்லாம் அப்புறம்!
அஞ்சாறு நொய்யரிசியை
வீசுங்கள் முதலில்.

நவம்பர் 07, 2015

விழுதுகள்

2015 செப்டம்பர் மாத கவிமாலை நிகழ்வில், விழுதுகள் என்னும் போட்டித் தலைப்பில் பரிசு பெற்ற என் கவிதை.


பொருளாதாரம்...
ஊசலாடாமல் இருக்க,
ஊசலாடிக் கொண்டிருக்கிறான்
உயரத்தில்.

கட்டடத்தின்...

கண்ணாடி உடலை
அழகாக்குகின்றான்... தன்னை
அழுக்காக்கிக் கொண்டு.


உயரத்தில் தொங்குகின்றவனுக்கு
உறுதுணையாகவும்
ஒரே துணையாகவும் இருப்பது,

உச்சியிலிருந்து
இவனோடு இணைக்கப்பட்டிருக்கும்
இரும்பு விழுதுகளே.


**********************************************

ஜூலை 13, 2015

காதல் தின்றவன் - 27

நம் 
காதலுக்கான
தேசிய கொண்டாட்டம்
உன் பிறந்த நாள்.

ஜூன் 24, 2015

வாட்சப் (whatsapp)

வணக்கம்...
 இன்று அனைவருமே வாட்சப் பயனாளியாய் இருக்கின்றோம். ஆனால் அந்த whatsapp க்கு தமிழில் என்ன சொல். யாரும் வாட்சப்பை தமிழ் சொல்கொண்டு பயன்படுத்தியதாய் தெரியவில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள். வாட்சப்பை “திரை உலவி” என்ற சொல்லால் குறிப்பிடலாம் என்பது என் எண்ணம். மாற்று கருத்து இருப்பின் சொல்லலாம். இது என் தனிப்பட்ட எண்ணம்.
 திரை = தொடுதிரை
உலவி = சுற்றுதல்,பரவுதல்



நன்றி,

மே 04, 2015

வறண்ட குளம்


எங்க ஊர் குளம்

தாகமெடுத்த குளமிது
தற்கொலைச் செய்து கொண்டது.

கரை உடைத்த நீரெங்கே

கரை வளர்த்த மரமெங்கே
தாமரை போர்வை எங்கே- அவைத்
தரும் வாச பூக்களெங்கே.

குளமே...

உன்னில் மூழ்கி
உயிர்விட்ட வரலாறு அன்று
உன்னுயிரே மூழ்கிய 
வரலாறாய் இன்று.

தாகச்சுமையோடு இனி

பறவைகள் எப்படி
சிறகடிக்கும்?

மண்ணைக் குடியென்று

பழக்குவதெப்படி 
மாடு ஆடுகளை?

குடமுடைத்து வருபவன் 

இனிதலை முழுகுவது எப்படி?

தடாகமே... 

உன்தற்கொலைக்கான
தடையம் தேடும்
தருணம் இதுவல்ல.
உயிர்த்தெழு... எம்
உயிர் நனைக்கவும் 
உடல் துவைக்கவும்.


#கவிதை : சி.கருணாகரசு
படம்: தி.தமிழருவி.
இடம் : உகந்த நாயகன் குடிக்காடு

ஏப்ரல் 06, 2015

சாமி மாடு

    எப்பவோ முடிவு செஞ்சதுதான்னாலும் கூட இன்னக்கி ஏதோ ஒன்னு கைநழுவி போறாப்புல மனசு மருவி நிக்கிது சின்னசாமி குடும்பம்.

     யாரு போறதுன்னு பேசிக்கிட்டு  இருந்தப்பவே, பெரியவனே போயிட்டு வரட்டுமேன்னு அப்பா சின்னசாமி சொல்ல, ‘என்னாலல்லாம் மாட்ட வுட்டுட்டு திரும்பிவர முடியாது. அது என்ன பாத்து  ‘ம்மா’ன்னு கத்துச்சின்னா சாமிமாடாவுது ஒன்னாவுது திரும்ப புடிச்சிக்கிட்டு வந்துடுவன்’னு ராமசாமி மறுக்கவும்,

‘யப்போ நீயும் அம்மாவுமே போயி மாட்ட வுட்டுட்டு அப்படியே தேரு பாத்துட்டு வந்துடுங்க’ இது நல்லுவன் மேகநாதன்.
 
   போனா ஒத்தப்படையில போவனுமுன்டானு அப்பா சொல்ல... இந்தா சின்னவன் அருளுக்கு பள்ளிக்கூடந்தான் இல்லையே அவனையும் அழச்சிக்கிட்டு போங்கன்னு பெரியவன் சொல்லவும், மூனுபேரும் போவதா முடிவாச்சி.
   
      ஆனா இதுக்கும் நமக்கும் சம்மந்தமே இல்லங்கிற மாதிரி மற்ற மாட்டுவளோட மாடா கவனையில கிடக்கிற வைக்கல தின்னுகிட்டு நிக்கிது கெழப்பசு.
   
    சின்னசாமி படையாச்சிக்கு ஏழு புள்ளுவோ. நாலு ஆணு மூனு பொண்ணு. மூத்த பொண்ணு லெட்சுமிய தெக்க அரியலூரு பக்கம் மணக்குடியில கட்டிகொடுத்திருக்கு. பெரியவனுக்கும் நல்லுவனுக்கும் கல்லியாணம் முடிஞ்சி புள்ளையும் இருக்கு. எல்லாமே ஒன்னா பெரிய குடும்பமா இருக்குதுவோ. சின்னவன் அருளு மட்டுந்தான் பள்ளிக்கூடம் போறான். மத்த எல்லாமே ஆட்டுமாட்ட பாத்துக்கிட்டு கொல்லக்காட்டு வேலதான்.

     இந்த  குடும்பத்தோடவே  காலாகலமா இருக்குற ஒரு கெழப் பசுவதான்  கலியப்பெருமா கோயில்ல வுடப்போறாங்க. அரியலூர்லேர்ந்து மூனுமைல் தூரத்துல இருக்குது கல்லங்குறிச்சி. அங்க இருக்கிற   கலியப்பெருமா கோயிலுலதான்  பங்குனித் திருநா பத்துநா நடக்கும்.

  சுத்துப்பட்டு அப்பது அறுவது ஊர்ல நடக்கிற திருநாள்ல இதுதான் ரொம்ப விமரிசையானது. சனங்கல்லாம் வந்து குமியும். வேண்டுதலா ஆடுமாடு,முந்திரி பலான்னும் தாணியமுன்னு கோயிலுக்கு கொடுத்துட்டு, கூத்து ஆட்டம் பாட்டம் பாத்துட்டு வேண்டிகிட்ட சனங்க மொட்ட போட்டுகிட்டு வூட்டுக்கு வேணுங்கிற சாமான்செட்டு வாங்கிக்கிட்டு வண்டியுலையும் நடந்தும் ஊரு திரும்பும். 

    பின்னேர நிலவு பளிச்சின்னு அடிக்கிது, மொதக்கோழி இன்னும் கூவல. கெழப்பசுவ கட்டுதரியிலேர்ந்து அவுத்துகிட்டு வரும்போதே மத்த மாடுவோ சத்தம் போடுது.  வாசல்கிட்ட நிறுத்தி சூடத்த ஏத்தி கும்புட்டு கெளம்பியாச்சி. வெரிக்க பாத்துகிட்டு நிக்கிதுவோ குடும்பத்து சனம்.

மாட்ட பிடிச்சிக்கிட்டு முன்னாடி போறாரு சின்னசாமி படையாச்சி. மாட்டுக்கு பின்னாடி அருளும் அம்மா பார்வதியும். தெக்குத்தெரு தாண்டி ஊரு எல்லைக்க்கிட்ட வரும்போது முனியப்பா கோயிலு. யப்பா முனியப்பாரேன்னு ஏதோ வேண்டிக்கிட்டு போவுது பார்வதியம்மா.

 இலைக்கடம்பூர தாண்டி கப்பி ரோட்டுல போவுது மாடும் மனுசாலும். செந்துரை மாட்டாஸ்பத்திரிக்குப் நாலஞ்சி தடவ போன  நெனப்புல மாடும் தளாராம நடக்குது.

  செந்துரையையும் தாண்டி தாரோட்டுல போகும் போதுதான் மாட்டு நடையில ஒரு சொணக்கம், இருந்தாலும் சொந்த ஆளுங்கதானெ பிடிச்சிக்கிட்டு போறாங்கனு மாடு நடக்குது. இப்படியே  இராயம்புரத்திலிருந்து தெக்குபக்கமா பிரிஞ்சி சென்னிவனம் மேட்டுப்பளையம் காவேரிப்பாளையம் வழியா போனா கடூரு. அங்கேருந்து மேற்கு பக்கமா திரும்புனா நாலு பல்லாங்குல கோயிலு வந்துரும்.

   இராயம்புரத்திலேருந்து  தெக்குபக்கமா பாத பிரிஞ்சி வண்டிமாடு போற காட்டுபாதயில போகும் போதே, இன்னும் வேறஊரு சனங்களும் வண்டியிலயும் நடந்தும் திட்டுதிட்டா பேசிகிட்டு போவுதுவோ. எல்லாருமே கலியபெருமா கோயிலுக்குதான் போவுதுன்னு பேச்சியிலேர்ந்து தெரியிது.

    நெலாவெளிச்சத்துல நிழல்கோலம் போடுது, பாத ஓரமா இருக்குற காட்டாமணக்கு செடிவோ. மாட்டுக்கு முன்னாடி அப்பா பின்னாடி அம்மாவும் அருளும்.

    அருளு மொதுவா... யம்மோ இன்னும் எவ்ளோ தூரம் நடக்னும்?.
 
     பாதிதூரம் வந்தாச்சிடா இன்னும் பாதி தூரந்தான்.

     ஏன்ம்மா நம்ம மாட்ட கோயிலுக்கு வுடனும்? .

     இந்த மாட்ட கோயிலுக்கு வுடுறதா வேண்டுதல் இருக்கு அதான்.

    என்னா வேண்டுதல்?  நம்ம மாட்ட எதுக்கும்மா கோயிலுக்கு கொடுக்கணும்.

    ஒருதடவ  அடமழக்காலம் ,அதுக்கு ஒடம்பு சரியில்லாம சாகபொழைக்க கெடந்துது, அப்ப மாடு பொழச்சா உனக்கு வுடுறன் கலியபெருமாளேன்னு வேண்டிகிட்டதுக்கு அப்பறந்தான் மாடுபொழச்சுது. அந்த வேண்டுதல நெறவேத்ததான் இப்ப கொண்டிவிடப்போறம்.

   “இந்த, என்னத்த கதபேசிகிட்டு வெரசா நடங்க, அப்பதான் பளபளன்னு விடிய கடூர தாண்ட முடியும் வெயிலுக்கு முன்னாடி கோயிலுக்கு போயிடணும்” ங்கிறார் அப்பா.

    அத காதுல வாங்குனதா தெரியல,  யம்மோ, இந்த மாடு எப்பேர்ருந்து நம்ம வூட்டுல இருக்கு .

      பார்வதியம்மாளுக்கு  நட முன்னோக்கியும் நெனப்பு பின்னோக்கியும் போவுது.

  அது களவெட்டு சமயம், பெரியவன் பொறந்து மூனு மாசம் ஆவும். கெணத்து கொல்லயில கல்லை*க்கு  பத்துசனம் அரிபிரியா களவெட்டிகிட்டு இருக்குதுவோ,வன்னிமரத்துல ஒரு சீலயால யான*கட்டி புள்ளைய போட்டுட்டு, களவெட்டுற சனத்துக்கு மெனக்கோடு* போட்டுகிட்டு இருக்கு பார்வதியம்மா.

   அந்தசமயம் பாத்து பேரன பாக்க கெழக்குசீமயிலேர்ந்து வந்த பார்வதியோட அம்மா பூங்காவனம். ஊட்டுல ஆள காணம அக்கம் பக்கத்துல விசாரிச்சி நேர கொல்லைக்கு வந்துடுச்சி.

    யானயில கெடந்த புள்ளய தூக்கி மடியில வச்சிகிட்டு மொவகிட்ட பேசிகிட்டே பக்கத்தில இருக்குற பால்சீசாவ பாத்துட்டு,

 ஏண்டி புள்ளக்கி தாய் பால்  இல்லையான்னு வெசாரிக்கிது.

 பசும்பால்தான்.

பசும்பாலுக்கு என்னப்பன்றவ?

கெழக்குத் தெருவுல மாயவன் அம்மாதான், புள்ளைக்கு கொடுடின்னு தெனம் அரபடி பால கொண்டாந்து தந்துட்டு போவுது.

   ஒருநா மொவவூட்டுல தங்கிட்டு மறுநா ஊருக்கு பயணமாயிடுச்சி பூங்காவனம்.

   போன நாலுநாளுலேயே , தம்பிக்காரன் சின்னதொர ஒரு தலைச்சன் கன்னு போட்ட மாட்டை கன்னுகுட்டியோட ஓட்டியாரான்.

    யக்கோ, இந்த மாட்ட அம்மா உனக்கு கொடுத்துட்டு வரசொல்லிச்சி. இன்னும இந்த மாட்டுபால பீசி புள்ளைக்கி கொடுப்பியாம்.

    இந்த பசுமாடு வந்ததிலேர்ந்தே கட்டுதரியில மாடு இல்லாம இருந்தது இல்ல. அதுபோல பால்மோருக்கும் பஞ்சமில்ல. தாயும் கன்னுமா வந்தது, இங்க வந்தே பதினோரு தடவ கன்னு போட்டுடுச்சி.

   பொறந்த ஏழு புள்ளுவளுக்கும் தாய்பால் கொடுத்த இன்னோரு தாயா இருந்சுச்சி. இந்த மாட்டுக்கு சொந்த மனுசால் யாருங்கிறதும் சொந்த கொல்ல எதுங்கிறதும் நல்லத்தெரியும். முந்தாணியால கண்ண தொடச்சிகிது பார்வதியம்மா,

  பொழுது பளப்பளன்னு விடியவும் கடூரூ வந்தாச்சி இன்னும் நாலு பல்லாங்குதான். முன்னையவிட இப்ப நெறைய கூட்டம் வரிசகட்டி போவுது ஆடு மாடு  புள்ளகுட்டி வண்டின்னு . கோயில நெருங்கறத்து முன்னால இருக்கிற ஓடதண்ணியில மாட்ட குளுப்பாட்டுராரு.

எலே அந்த பையில  சந்தனம்  பொட்டு இருக்கு எடுடா.

 சந்தனத்த  தண்ணியில நெனச்சி நெத்தி,கொம்புன்னு பூசி, பொட்டு வச்சி கோயிலுக்கு முன்பக்கம் இருக்குற தோப்புக்கு ஓட்டிகிட்டு வந்தாச்சி.

  மாட்டுக்கு என்னாஏதுன்னு புரியல.  மாட்ட பார்வதியம்மா கையில கொடுத்துட்டு ,

இத புடிச்சிகிட்டு இங்கேயே நில்லுங்க, நா போயி மாட்டுக்கு சீட்டு வாங்கிகிட்டு வந்துடுறன்.

  கோயில் நிர்வாகத்துல  ரூவா பதினொன்னு கட்டி வ.சின்னசாமி படையாட்சி, உனா நானா குடிக்காடு ந்னு சீட்டு வாங்கிகிட்டாரு.

   கோயிலு வாசப்படிக்கு நேரா நின்னு சூடம் ஏத்தி கும்புட்டுட்டு, மாட்ட ஒப்படைக்கிற எடத்துல, கவுத்த மாத்தி ஒப்படைச்சிட்டு திரும்புதுங்க மூனுசனமும். அம்மாவுக்கு மனசு அழுத்துறது பேச்சில தெரியுது.

  இப்பவும் அந்த கெழப்பசு மத்த மாட்டோட சாதாரணமாதான் நிக்கிது. தன் சனங்க மேல அவ்வளவு நம்பிக்கை.

  கோயில ஒருசுத்து சுத்தி வர்றதுக்குள்ள உச்சி பொழுதாச்சி.

   நீங்க ரெண்டுபேரும் மணக்குடியில இருக்குற லெட்சுமி ஊட்டுக்கு போயிட்டு மறுநா தேரும் ஏதாந்தமும் பாத்துட்டு சவுகாசமா* வாங்க, நா இப்படியே அரியலூர் போயி செந்துர பஸ்ஸ புடிச்சி பொசாயக்*குள்ள வூட்டுக்கு போயிடுறன்.

    கோயில சுத்தியிருக்குற கட கண்ணிய சுத்திபாத்துட்டு, முடி எடுக்கும் கொட்டாவை கடந்து செட்டேரி ஓடைய பிடிச்சி வயக்காட்டு வழியா கெழக்க பார்த்து மணக்குடிய நோக்கி நடக்க ஆரம்பிச்சுதுக தாயும் புள்ளையும்.

   அன்னக்கி  லெட்சுமி வூட்டுல ராத்தங்கல். அங்கேயும் கெழப்பசுவ கோயிலுக்கு வுட்டத பத்தியே பேசிபேசி மாளல.

 மொத நா தேரு  மறுநா ஏகாந்தமும் பாத்துட்டு, கரண்டி அருவாமனை மத்துன்னு வாங்கிகிட்டு கல்லங்குறிச்சியிலேர்ந்து அரியலூர்க்கு போற குதுரவண்டியில கிளம்பிட்டாங்க.

    அரியலூர் சித்தேரிக்கர ஓரமா இருக்குற புளியாம்மரத்துகிட்டெ எல்லா ஆளுவளையும் எறக்கிவிடுறான் குதுரவண்டிக்காரன்.

வாடா இந்த புளியமரத்தோரமா நிப்போம்.இங்கதான்டா செந்துர பஸ்சு நிக்கும்.

வாங்குன சாமான்செட்டோட புளியமரத்தோரமா  நெழல்ல ரெண்டு பேரும் நிக்கிறாங்க.அருளு பெராக்கு பாத்துதுகிட்டிருக்கான்.

      அந்த நேரம் பாத்து ரெண்டுமூனு லாரியில, நெறைய மாட்ட ஏத்திகிட்டு வந்து டீக்கடைக்கு எதுத்தாப்புல நிக்கிது. லாரியிலேர்ந்து எறங்கி வந்த நாலஞ்சி ஆளுவோ டீ குடிச்சிக்கிட்டு இருக்குதுவோ,

 “யம்மோ அங்க பாருமா லாரியில நம்ம சாமிமாடு”

   டீக்கடையில நிக்கிறவங்க பேசிக்கிறது காதுலவுழுது. இப்பவே கெளம்புனாதான் நாளக்கி காலையில கேரளாவ தொடமுடியும்.

  வண்டியில இருந்த கெழபசு தன்னோட சொந்த மனுசால் வாசத்து உணர்ந்து திரும்பி திரும்பி பாக்குது. அம்மான்னு கத்தகூட தெம்பில்லாம.

     ரெண்டு அம்மாவுக்கும் உயிரும் நெரிபடுது.
                                                
                                              @@@@@@@@@@@@


(நிஜத்துக்கு நிழல் வடிவம் தந்துள்ளேன்)



*கல்ல..................கடலை (மல்லாட்டை)
*யான...................துணியால் கட்டப்படும் தூளி
*மெனக்கோடு... களையெடுப்பவர்களுக்கு போடப்படும் கோடு
*சவுகாசமா........ நிதானமாக.
*பொசாய.......... பொழுது சாய (மாலை)



Related Posts with Thumbnails