அனிச்சத்தை மென்மைக்கு உவமை என்பர்
ஆழ்கடலே உள்ளத்தின் எல்லை என்பர்
பனிப்பூவை பாவையரின் பாதம் என்பர்
பாறையதை கல்மனதின் உவமை என்பர்
கனித்தமிழே அமுதுக்கு உவமை ஆகும்
கார்மேகம் கூந்தலுக்கு உவமை தானே!
தனித்தனியே அத்தனைக்கும் உவமை உண்டு
தமிழினிலே உவமைக்கு உவமை நீயே!
பாரதியின் தாசனுக்கு தாசன் நீதான்
பாவினத்தில் மரபுக்கு நேசன் நீதான்
யாராக இருந்தாலும் அச்சம் இன்றி
யதார்த்தம் பேசுகின்ற உண்மை வீரன்
நேரான சீர்வழியே உன்றன் பாதை
நெஞ்சினிலே பெருளீட்டும் ஆசை இல்லை
தீராதத் துயரத்தில் வாழ்ந்த போதும்
தீந்தமிழை ஒருபோதும் நீங்கா வாழ்ந்தாய்.
உன்கவியில் உவமையாக சொற்கள் கெஞ்சும்
உள்ளபடி உன்பாட்டே அமுதை விஞ்சும்
என்போன்ற பாமரர்க்கும் உன்பா தேன்தான்
எந்திக்கும் உன்விருத்தம் துள்ளும் மான்தான்
தன்மானம் பெரிதென்று நிமிர்ந்து நின்றாய்
தமிழுக்கு குறையென்றால் எதிர்த்து நின்றாய்
அன்பிற்கும் பண்பிற்கும் வடிவம் நீயே
அதற்குள்ளே உனையழைத்த எமனும் தீயே.
உரமான கருத்ததனை உலகம் போற்ற
உயர்வான செம்மொழியின் புகழை கூட்ட
தரமான சொற்களினை தமிழில் தேடி
தந்திட்ட பெருங்கவிஞன் பெயரைக் கேட்டால்
சுரதாவின் பெயரைத்தான் சொல்லத் தோன்றும்
சூரியனாய் வாழ்ந்தவரை நினைக்க தூண்டும்
மரபதையும் வரம்பதையும் மீறா நல்ல
மாக்கவிஞன் இவறைவிட்டால் வேறு யாரோ?
( உவமைக்கவிஞர் சுரதா அவர்களின் பிறந்த நாள் 23-11-1921. கவிஞர் சுரதாவை பற்றிய கவிதை மலருக்காக 5 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய கவிதை. நல்ல தரமான ஒரு கவிஞனை நினைவில் நிறுத்தி அவருக்கு புகழ் சேர்ப்போம். இந்தக்கவிதை மலேசியா நாளேடான தமிழ் நேசனில் 06-03-2011 ல் அச்சேரியக்கவிதை)
Tweet |
4 கருத்துகள்:
காலம் பல கடந்து வந்தாலும் கவிதை வளம் நிறைந்த , மரபு வழி வந்த சிறந்த கவிதை!
அருமை...
நன்றி...
(From Android)
உவமைக் கவிஞருக்கு அருமையான் கவிதை...
வாழ்த்துக்கள் ஐயா.
அருமையான கவிதை! என் கல்லூரி நாட்களில் என்னை ஒரு கவிஞனாக அங்கீகரித்த முதல் கவிஞர் சுரதா அவர்கள். என் வீட்டருகே இன்றும் சிலையாக நிற்கிறார்கள். அவரது நினைவுக்கு நீங்கள் செலுத்திய காணிக்கைக் கவிதை அபாரமானது!- கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை
கருத்துரையிடுக