செப்டம்பர் 19, 2009

ஏக்கம்

பெற்றவர்களுக்கு
மணநாள் இன்று .
முத்தம் பரிசளிக்க ஆசை !

அப்பா தனிவீட்டில் ...
புது அம்மாவுடன் !.

அம்மா வேறொரு ஊரில்
புதுக் கணவருடன் !.

மணவிலக்கு பெற்றவர்களின்
மகள் நான் ...

தாத்தா வீட்டில்
தனியாக ...

(எனது தேடலைச் சுவாசி நுலிலிருந்து )

செப்டம்பர் 15, 2009

காஞ்சித் தலைவன் (அண்ணா)

வெண்பா

தறியோசை விஞ்சித் தமியோசைத் தந்த
அறிஞர் இவர்நமக்கு அண்ணன் -செறிவான

வாஞ்சையோடு சீர்த்தமிழை வார்த்தெடுத்த அண்ணாவை
காஞ்சித் தலைவனெனக் காண்.

புதுக் கவிதை

சிறியோரை தம்பியென
சீராட்டும் சீத்தலை .

பெரியாரின் பாசறையை
பிரிந்து வந்த பல்கலை .

இருமொழி வல்லமையில்
இவர் பெற்றார் முதுகலை .

எழில்கொஞ்சும் இவர்பேச்சு
எப்போதும் இளங்கலை .

பலநூறு நூல்படித்த
பைந்தமிழின் நுண்கலை .

இன்றைக்கும் காஞ்சிக்கு
இவரால்தான் உயர்நிலை .

செப்டம்பர் 13, 2009

நட்புடன் ஜமால் அழைக்க...அன்புடன் நான் எழுதும்


= அம்மா... என்னைச் சுமந்த

உயிர்க் கடவுள்.

= ஆசை ... குழந்தை குங்குமப்பூ

= இந்தியா ... பகையோடு கூட்டு சேர்ந்து ,

சொந்தகாரர்களை கொன்ற நாடு.

= ஈகத்தில் வியந்தது ... நாட்டுக்காக

உயிராயுதமாய் மாறிய ஈழத்தமிழன் .

= உண்மையானது ... என் மனைவியின்

அன்பும் நட்பும் காதலும் .

= ஊரறிந்த ரகசியம் ... கலைஞர் ...

தாத்தாவின் உண்ணாவிரதம் .

= எதிர்ப்பது ... விளைநிலங்களை

விலைநிலங்களாக மாறுவதை .

= ஏற்பது ... தன்மானத்திற்கு

இழுக்கில்லா எதையும் .

= ஐந்தினையில் பிடித்தது ...

"முல்லை ".

= ஒலியில் சிறந்தது ... என்

கிராமத்து தாவணிச் சிட்டுகளின்

மருதாணி காலில் கொஞ்சும் கொலுசொலி .

= ஓட்டு எனப்படுவது ... விரலிலும்

மக்கள் விடியலிலும் கறைப்படிந்த கருப்பு .

ஒள = ஒளவ்வபோது நினைவுக்குள் ...

கம்பிச் சிறைக்குள் கரையும் தமிழினம் .

=ஃ இன் வலிமை ... உயிர்மெய் உருவாக்கத்திற்கான

உயிர் "மெய் ".

அழைத்தவர்களுக்கு நட்புடன் ஜமால் , சத்ரியன்

நன்றி

நான் அழைப்பது : கண்ணன் , மற்றும் பா. ரா ,

மற்றவரெல்லாம் எழுதிவிட்டதால் ...

அடுத்தவர் தொடரலாம் .... நன்றி வணக்கம் ...

அன்புடன் நான் சி.கருணாகரசு .

செப்டம்பர் 08, 2009

நாட்காட்டி

ஒருவருட
ஒப்பந்த பாஞ்சாலி.
*
(எனது தேடலைச் சுவாசி நுலிலிருந்து )

செப்டம்பர் 05, 2009

மாலை

பகலுக்கும் இரவுக்கும் பாலம் !
பகலவன் பாய்விரிக்கும் காலம் !

(எனது தேடலைச் சுவாசி நூலிலிருந்து)

செப்டம்பர் 03, 2009

மனித நேயம்



சோறின்றிச் சுருங்கிய
சோமாலியர் உடலில் ...
வரைகின்றன எலும்புகள்
வறுமைக் கோடுகளை .
அவர்கள் ...
பசியால் உயிர் கரைவதை
பார்த்தும் ...மனம் கரையா
பணக்கார நாடுகள் !

முள்வேலிக்குள் மூச்சுத் திணறும்
மூன்று நூராயிரம் தமிழ்ர்கள்
மரணத்தின் விளிம்பில்
மனம் வெதும்பி
காப்பாற்றுங்கள் என
கதறும் அந்த
ஈழத்தின் இன்னலை
காதில் ஏற்காது
கடமையாற்றும் நாடுகள் !.

ஒருவனுக்கு உணவில்லையேல்
உலகையே அழிக்கச் சொன்ன
பாரதி பிறந்த
பாரத நாட்டில்
சாகக்கிடக்கும் கிழவரைச்
சாக்கில் கட்டி ...
சுடுகாட்டில் வீசிய
சொந்தங்கள் !

இப்படியே ... நீளும்
இழிச் செயலால்
இன்று நான் தேடுவது ...
மனிதருக்குள்
"மனித நேயம் "
(கடற்கரைச் சாலை கவிமாலை போட்டிக்கு எழுதியது ... ஓகஸ்ட் - 2009 )

செப்டம்பர் 02, 2009

நெருப்பினில் தெரியும் நிலவு முகம்

நெஞ்சுரம் நேர்மையோடு நேர்க்கோட்டில் நின்றெழுதி
வஞ்சமதை வேரறுக்கும் வர்க்கமது -அஞ்சா
கருத்தியல்பைக் கொண்ட கவிஞன் முகமே
நெருப்பில் தெரியும் நிலவு .

(கவிமாலை போட்டிக் கவிதை யூலை- 2009 )

செப்டம்பர் 01, 2009

முத்தம் ?!

என்னைப் பார்த்துக்
கையசைத்து
கண் சிமிட்டுகிறது .

என் பார்வையும்
அந்த முகத்திலேயே
நிலைகுத்தி நின்றுவிட்டது .

என் மனம்
சிறகைப் பூட்டிக்கொண்டது .
கை கோர்த்து
கனவில் மிதக்கிறேன் ...
இல்லை பறக்கிறேன் .

மின்னலாய் ஓர் ஆசை
அந்த மெல்லிய கன்னத்தில்
ஒரு ...முத்தமாவது ...

முன்னனுபவம் இல்லை
பதற்றமாகவும் இருக்கிறது
பார்த்து விடுவார்களோ ...என்று

... ... ...
பார்த்துக் கொண்டே
பயணிக்கிறேன் .

பேருந்தின்
முன்னிருக்கையிலிருந்து
பின்னால் இருக்கும்
என்னைப் பார்த்து
கையசைத்து
கண்சிமிட்டும் ...
அந்தக் குழந்தையை !.

(எனது "தேடலைச் சுவாசி" நுலிலிருந்து )






Related Posts with Thumbnails