ஆகஸ்ட் 31, 2009

விடியும் உன் கிழக்கு

காலம் கனியுமென்றோ
கதவு திறக்குமென்றோ
காத்து கிடக்காதே தோழா !-வாழ்வு
கணத்தில் ஆகிவிடும் பாழாய் !!
*
சோர்ந்து கிடக்காமல்
சுகமெனப் படுக்காமல்
கடமை ஆற்றிடு நீயும் !-அன்றோ
கஷ்டமெல்லாம் ஓயும் !!
*
சொந்த உழைப்பினில்
சிந்தும் வியர்வையில்
புதைந்து இருக்குது வெற்றி !-அதை
புதையலென எடு வெட்டி !!
*
தடைகள் இருக்கலாம்
தவறும் நிகழலாம்
விவேகமாக ஒதுக்கு !-அதனால்
விடியும் உன்றன் கிழக்கு!!
*
கவலை இல்லாமல்
முதுமையைக் கழிக்க
உனக்காகவும் சேமி !-செய்தால்
உறவுக்கு நீயே சாமி !!
*
(எனது தேடலைச் சுவாசி புத்தகத்திலிருந்து )

ஆகஸ்ட் 28, 2009

எப்படி?

கணவன் மனைவிக்குள்
கருத்து வேறுபாடு
ஒத்துப் போகாத மனங்கள்
ஒத்து போயின
"மணவிலக்கு" பெற !
(எனது தேடலைச் சுவாசி புத்தகத்திலிருந்து )

ஆகஸ்ட் 27, 2009

தண்ணீர்


காலம் கசக்கி எறிந்த
கந்தல் துணியாய்
கட்டிலில் அவர் .
@
அசையா உடலில்
அசைவது விழிகள்மட்டும் .
அதுதான் ...
உயிர் இருப்பதற்கான
ஒரே அடையாளம் .
@
வெளியூர்ப் பயணம்
வேண்டாமாம் இன்றைக்கு
சில பெருசுகளின் வேண்டுகோள் .
@
பத்து நாளாய் இப்படிதான்
பொழப்பு கெடுது...
சிலரின் ஆதங்கம் .
@
இன்றைக்கு எப்படியும்
முடிந்து விடும் ...
நம்பிக்கையோடுச் சிலர் .
@
எதிர்பார்ப்பு ...
எப்படி இருப்பினும் ,
நொறுங்கிய மனதுடன்
நெருங்கிய உறவுகள்
ஊற்றிக் கொண்டுதானிருக்கின்றன
உயிர்த் தண்ணீர் !

ஆகஸ்ட் 26, 2009

திணை வினை

தனித்து நிற்கும் மரங்கள்
கைகுலுக்குகின்றன ...
கிளைகளை விரித்து !

நெருக்கமாய் மனிதன்
தனித்து வாழ்கிறான் ...
மனமதைச் சுருக்கி !!

( எனது தேடலைச் சுவாசி புத்தகத்திலிருந்து )

ஆகஸ்ட் 24, 2009

பசி


வளர்ந்த தேசத்தால்
ஒடுக்கப்பட்டவன்!

வறுமை தேசத்தின்
சர்வாரதிகாரி!!



(எனது தேடலைச் சுவாசி புத்தகத்திலிருந்து)

ஆகஸ்ட் 21, 2009

ராசிக்கல்


நம்பிக்கை இழந்தவனை
நம்பி வாழ்கிறான்
ராசிக்கல் வியபாரி!
(எனது தேடலைச் சுவாசி புத்தகத்திலிருந்து )
.

ஆகஸ்ட் 20, 2009

வேடதாரிகள்!

புன்னகையை உதட்டோரம் ஒட்டி வைத்து
*** புனிதரென காட்டிடவே நடித்து வைப்பார்
வன்மத்தை இதயத்தில் மறைத்து வைத்து
***வாஞ்சையோடு பேசுவதை தொழிலாய்க் கொள்வர்
சன்மானம் கிடைக்கின்ற இடங்கள் எல்லாம்
***தன்மானம் இழந்திடவும் காத்து நிற்பர்
இன்முகத்தை வேடமாக அணிந்துச் செல்லும்
*** இவர்போன்ற மனிதரிடம் கவனம் தேவை !

*
அக்கறையும் சர்க்கரையும் பேச்சில் உண்டு
*** அகம்பாவம் ஆணவமும் மூச்சில் உண்டு
வக்கிரத்தை வைத்திருப்பர் மூளைக் குள்ளே
*** வாக்கியத்தில் தெறிப்பதெல்லாம் பாச சொல்லே !
மக்களோடு மக்களாக வாழ நல்ல
***மானிடத்தை போர்வையாக ஆக்கிக் கொள்வர்
எக்கணமும் அரிதாரம் பூசிக் கொள்ளும்
***ஏமார்ந்தால் தலைமீது ஏறிக் கொல்லும்!

*
நல்விதமாய் பழகுவதாய் கைகள் கோர்க்கும்
***நரிபோல வஞ்சகமாய் நேரம் பார்க்கும்
வல்லவராய் தனைக்காட்ட வரிந்து பேசும்
***வசதிக்கு முன்மட்டும் வளைந்து போகும்
துல்லியமாய் கணக்கிட்டு தூண்டில் போடும்
***துடிக்கின்ற மீனுக்கும் இரங்கல் பாடும்
எல்லோர்க்கும் நல்லவராய் வேடம் போடும்
*** எச்சரிக்கை இருந்துவிட்டால் தப்பி ஓடும்
*
புத்தனென்றும் காந்தியென்றும் காட்டி கொண்டு
*** புத்தியிலே புரட்டுகளை தேக்கி வைக்கும்
சத்தியத்தின் அடிநாதம் தான்தான் என்று
***சத்தமாக பொய்யுரைத்தே காலம் தள்ளும்
கத்தியின்றி இரத்தமின்றி காயம் செய்யும்
***காரியத்தை உபத்தொழிலாய் நாளும் செய்யும்
உத்தமராய் முகமூடி அணிந்து வாழும்
***உயிர்க்கொல்லி இதுவென்று ஒதுங்கிச் செல்வீர் !

*
*
( எண்சீர் ஆசிரிய விருத்தம் )

ஆகஸ்ட் 18, 2009

கரம் கோர்ப்போம்... உயிர் மீட்போம் !

எமனோடு போராடுது
எழுதுகோல் பிடித்தகரம் !
எத்தனித்து மீட்டிடுமே
என்மினத்தின் உதவிக்கரம்!!

எழுவாய் அருள்வாய்
எம்மண்ணன் உயிர்க்காக்க !
ஏற்போம் கரம்கோர்ப்போம்
எமன்பிடியின் உயிர்மீட்க !!

சக வலைப்பதிவர் திரு.சிங்கை நாதன் அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சைக்காக 33 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.மேலும் தகவலுக்கு இங்கே செல்லுங்கள்.
பண உதவி செய்ய வேண்டிய முகவரி:
ICICI Account DetailsAccount Number: 612876559Name: M.KARUNANITHI Branch: TanjoreSingapore Account DetailsAccount Number: 130-42549-6 Name: Muthaiyan KarunanithiBank: DBS - POSB Savings
button="hori";
submit_url="http://guhankatturai.blogspot.com/2009/08/blog-post_16.html"

ஆகஸ்ட் 17, 2009

முரண்பாடு (பூக்கள் கொலை)


அவன் இறந்தான்
"பூக்கள் கொலை"
அஞ்சலிக்காக !
*
(எனது தேடலைச் சுவாசி புத்தகத்திலிருந்து )

ஆகஸ்ட் 16, 2009

உழவர் (விவசாயி)

மண்ணைக் இறையாய் மதித்து; அதுகுளிர
விண்ணையே பார்ப்பர் வெறித்தபடி! -கண்ணாய்
பயிர்க்காத்து பாரின் பசியினைப் போக்கும்
உயிராம் இவர்க்கு உழவு .

ஆகஸ்ட் 14, 2009

பால்சுரப்பி


கவிதைக்கு
பொய்தான் அழகு எனில்
இந்த கவிதை
அழகற்றதுதான்

எங்கள் துயரறிந்தால்
நெருப்புக்கும் கண்ணீர் சுரக்கும்
உலகத்த தலைவர்களை போல் – அதற்கு
மௌன மொழி தெரியாது

வாழ்விடங்களில்
குண்டுகளின் கொலைவீச்சால்
இரத்த பிசுபிசுப்பு

உயிர் அறுந்த
உடல்களை கடந்து
உயிர் இருந்த நாங்கள்
ஓடிவந்துவிட்டோம் காட்டிற்கு

தாகம் பசியைத் தவிர
தழுவிக்கொள்ள
ஏதுமில்லா நேரத்தில்
பேறுகால வலியால்
கதறி…. கதறி…. பின்
களைத்து உயிர் பிரிய
அவள்
பிணத்தை கிழித்து
பிள்ளையை எடுத்துவிட்டோம்

ஈர தொப்புள் கொடியும்
வறண்ட உதடுமாய்
சன்னமாய் அழுகிறது குழந்தை

ஏதுமில்லா காட்டில்
எங்களுக்கு சுரந்திருக்கலாம்
கண்ணீருக்கு பதில் ”பால்”

( இந்த கவிதை 5 மாதங்களுக்கு முன் எழுதியது . கவிதையின் கரு முற்றிலும் உண்மை ... திரு புலமைப்பித்தன்னின் ஊடக நேர்காணலில் கிடைத்த தகவலின்படி எழுதி வாசித்தேன் )

ஆகஸ்ட் 13, 2009

பாரினைக் காக்கும் பசுமை

இயற்கையை மீறிய
சாமி இல்லை
இயற்கையை மீறினால்
பூமி இல்லை .
*

நரப்புகள் சில உருவியபின்

நடமாடும் மனிதனைப் போல்

இயற்கையை இழந்த பூமி

இதயம் வெடிக்கிறது !

இரத்தம் வடிக்கிறது.!

*

இயற்கையைச் சிதைத்தால் ,

நம்மைப் புதைக்கும் பூமியவே

நாமே புதைக்க நேரிடும்!

*

இயற்கையை மதித்தால் _அந்த

பசுமை ஒன்றே _இந்த

பாரினை காக்க போரிடும் !

*


ஆகஸ்ட் 12, 2009

கல்


சிற்பிக்கு காகிதம்
சிலருக்கு ஆயுதம் !
*
(எனது "தேடலைச் சுவாசி" புத்தகத்திலிருந்து...)

ஆகஸ்ட் 11, 2009

பூந்தொட்டி (முரண்பாடு )

செடிக்குத் தண்ணீர்,
வேருக்கு எல்லை!
சிரிக்கிறது "பூந்தொட்டி "

(எனது "தேடலைச் சுவாசி " புத்தகத்திலிருந்து )

ஆகஸ்ட் 10, 2009

மரணம்


என்னையே ...நீ
நிழலாகச் சுற்றி வந்தாய்
நான் ...
வாழ்ந்தபோது .

நீ ,
எனக்குள் நுழைந்தபோது
நான் ...
வெறும் நிழலாகிப் போனேன் .

ஆம்
நீ ...
நிழலாக இருந்தபோது
நான் வாழ்ந்தேன் .
இன்று
நான் ...
நிழலாக கிடப்பதால்
நீ
வாழ்கிறாய் "மரணமே" !

ஆகஸ்ட் 08, 2009

புல்லாங்குழல்


இசையாய் வாழும் ...
"இரங்கற்பா"

*

ஆகஸ்ட் 07, 2009

பொதுவுடைமைப் படைப்பாளி


கழனியிலே...
பொதுவான உழைப்பாளி,
கவிதையிலே...
பொதுவுடைமைப் படைப்பாளி.
*
தன்மனதை...
கருப்பாகக் கொண்டவர்,
தன்மானத்தை...
இரும்பாகி நின்றவர்.
*
கவிஞர்...
இளமையிலே...
இறந்து போனவர்.
ஆனால்,
இமயமாய்...
இருந்து போனவர்.
*
*
( சிங்கப்பூரில், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கலை இலக்கிய விழா 2009 க்கான, கழனிக்கவி மலருக்கான என் கவிதை)

ஆகஸ்ட் 06, 2009

கல்வெட்டாக்கிய காப்பியம் ( திருக்குறள் )

அறம் பொருள் இன்பமென
வாழ்வை வகுத்து
எக்காலும் ஏற்புடையதை
ஈரடிக்குள் தொகுத்து
மந்தையாகாமல் மனிதனை
மனிதானாக்கும் இலக்கியம் !
*
இல்லற மேன்மையையும்
இனியவைக் கூறலையும்
இயல்பாய்ச் சொன்ன காவியம் !
*
காதலின் நெறி எது
கற்பின் செறிவெது வென்று
கவிதையில் சொன்னக் காப்பியம் !
*
நட்பின் உயர்வெது
நல்லோர் பண்பெது வென்று
நமக்குணர்த்தும் பொதுமறை !
*
நாடாளும் முறை எது
நாடள்வோர் நிறை எதுவென
நற்குடிக்கு சொன்ன தமிழ்மறை !
*
பசலைத் துயரத்தையும்
பழமை நட்பையும்
படைப்பில் அடக்கிய காவியம் !
*
குடிமை சிறப்பையும்
குற்றங் கடிதலையும்
குறளாய் தந்த ஓவியம் !
*
கல்லாமையின் சிறுமையையும்
கள்ளாமையின் பெருமையையும்
கல்வெட்டாக்கிய காப்பியம் !
*
புறங் கூறாமையையும்
பொறாமைக் கொள்ளாமையையும்
புரிய வைக்கும் இலக்கியம் !
*
வினைத் தூய்மை நாடவும்
விலைமாது தவிர்க்கவும்
விரும்பச் சொல்லும் படைப்பு !
*
சிற்றினம் சேராமையும்
செய்நன்றி மறவாமையையும்
செய்தியாய் தந்த சிற்பம் !
*
வாய்மையின் அழகையும்
வறுமையின் நிகழ்வையும்
வகுத்திட்ட இலக்கியம் !
*
பெருமை எதுவென்றும்
பேதைமை எதுவென்றும்
பிரித்து சொன்ன தமிழ்மறை !
*
வள்ளுவம் கற்றவன் சிறப்பான் !
மறைந்தாலும் ...அவன்
மற்றவர் நினைவில் இருப்பான் !.
*
*
(மலேசியாவில் 2005_ல் நடந்தேறிய முதலாவது உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாட்டி, உலக அளவில் வள்ளுவம் பற்றிய புதுக்கவிதைக்கான ஆறுதல் பறிசை வென்ற எனது கவிதை இது)
*

ஆகஸ்ட் 05, 2009

மலர்கள்... மீண்டும் மலரும்

யானைக் கூட்டம் புகுந்தழித்தப்பின்
வடிவிழந்துக் கிடக்கும்
வாழைத் தோட்டமாய் ...
எங்கள் வாழ்க்கை .
*
ஒவ்வொரு விடியலிலும்
எங்களை... நாங்களே
எண்ணிப் பார்த்துக்கொள்வோம்
இருந்தவர்களில் யாரேனும்
இறந்துவிட்டார்களா என அறிய .
*
பாடச்சாலைகளில் கூட
பதுங்கு குழிகளை நம்பும்
நாங்கள் எப்படி
பகடியோடுக் கதைத்து
பகட்டுடன் வாழ ஏலும் .
*
நிரந்தர அமைதி ...அல்லது
நித்தம் சில பாடைகள்
இதுதான் எங்களின்
இன்றையத் தேவைகள் .
*
நாற்புறமும் ...
செல்லடிக்கும் சத்தம்
பிய்ந்து தொங்கும் உறுப்பு
இரத்தம் வழியும் கண்கள் ...
இருந்தும்
வல்லிய நம்பிக்கையோடு
வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் .
*
பொழுது ஒருநாள்
புலரும்மென்றும் _ அப்போ
எங்களின் ...
மனம் என்ற ...
மலர்கள் மீண்டும் ...
மலருமென்றும்!.
*
*
(இந்தக் கவிதை மூன்று ஆண்டுகளுக்கு முன் , சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக "கவிச்சோலை" யில் பரிசுப் பெற்று... கவிஞர் திரு மேத்தா அவர்களால் பாராட்டப் பட்ட கவிதை . பின் "நாம் " என்னும் காலாண்டிதழிலும் (அக் _ டிச 2008 ) அச்சேறியது)

ஆகஸ்ட் 04, 2009

இதயமே...


உன்னை விரும்பி
உன்னை நினைத்து
உன்னையே வேண்டிய
உயிரின் இதயத்தை
வேரோடு பிடுங்கிச் செல்கிறாய் !
என் ,
காதலின் உறுதியையும் ...
கடைசித்துளி குருதியையும்
சிதைத்தப்படி !
*
ஒரே நொடியில்
இழந்து தவிக்கிறேன் ...
என்னையும் ,
உன்னையும்.
*
உன்னை நினைத்தவனின்
உயிரை உருவிச் செல்வது
மென்மையே உனக்கு அழகா ?
என்னை வதைத்து
எங்கோ நீ செல்வது
பெண்மையே உனக்கு சிறப்பா ?
*
அய்யய்யோ ... என்னை ...
"இதயமே இல்லாதவன் "
இறந்து கிடக்கிறான் என்பார்களே !
...
அடியே ,
நீயாவது சொல்வாயா ..
என்னால்தான் ...அவன்
"இற(ழ)ந்து கிடக்கிறான் " என்று?!.
( நீண்ட இடைவெளிக்கு பின் ஓர் காதல் கவிதை)

ஆகஸ்ட் 03, 2009

வயல்

சேறாக்கும் மனிதருக்கு
சோறாக்கித்தரும்...
சொர்க்கம் .

ஆகஸ்ட் 01, 2009

உயிருண்ணி!


உன் கைகள் ஆயுதமேந்தி
உயிர் அறுவடை செய்வதை
உன் தாய்க் கண்டிருந்தால் ,
கருவினிலே நீ...
கலைந்திருக்கக் கூடாதா யென
கவலைக் கொண்டிருப்பாள்.
*
கொலைக் குருதி குடிக்கும்
கொடூரன் உன்னால் பெற்றத்
தாய்மையை விட...
மலடி வாழ்வே மேன்மையென
மனசு வெம்பியிருப்பாள்.
*
உன்னைப் பொறுத்தவரை...
இரத்தத்தின் நிறம் சிவப்பு.
அது ,
உயிரிலிருந்து
உன்னால்.......
விசிறியடிக்கப்பட்டதென்ற
உண்மைத் தேவையில்லை உனக்கு!
*
உன் கொள்கை குப்பைக்காக
எத்தனையோ கனவுப் பூக்களின்
காம்பைக் கிள்ளி விட்டாயே?
*
உலகம்,
உன்னைத் தீவிரவாதி என்கிறது.
எனக்கு நீயொரு...
ஆண்மையில்லாத ஆயுதமேந்தி
இன்னும் சொல்லலாம்....
*
என்,
கவிதை கொள்கையின்
கண்ணியம் தடுக்கிறது.
*
ஓ... உயிருண்ணியே!
உன்னால் வெட்கப்பட்டிருக்கும்
உன் ஆயுதம்.
*
அப்பாவிகளை அழிக்க
ஆயுதமேந்தும்...
உன் "கை"யில்
அகப்பட்டதற்காக.

(மும்பை தாக்குதலின் போது எழுதிய கவிதை)

Related Posts with Thumbnails