செப்டம்பர் 16, 2014

காலப்பெட்டகம்


காலப்பெட்டகம் – 
ஒவ்வோரு பக்கமாக
புரட்ட புரட்ட…
என்னை கவ்வி இழுத்தது
கால சூழ்ச்சி.
அன்றைய பொழுதுகளின்
மகிழ்ச்சி இழைகளை
கோத்து தடித்திருந்தது
அந்த கால பெட்டகம்!
நஞ்சுண்டு
தற்கொலை செய்துகொண்ட
ராதாகிருஷ்ணன்
மொய்விபரங்களை சேகரித்தபடி…
மகிழ்ச்சி முகம் காட்டுகிறான்.
ஒருவர்பின் ஒருவராக
இறந்து போன
கிட்டிணன் அப்பாவும்
சின்னம்மாவும்
எங்களை வாழ்த்தும்
பெருமிதத்தோடு
அனைவாய் நிற்கிறார்கள்.
சேலையால்
தூக்கு போட்டுகொண்ட
திருச்சங்கு பொண்டாட்டி
கைக்குழந்தையோடு
ஏதோ சிரிப்பில்
மணவறை கடக்கிறார்.
மாலையை எடுத்து
வேண்டி கும்பிட்டு
எங்களுக்கு போடுகின்ற
தாலாச்சி ஆச்சியும்
இன்று இல்லை.
திருநீறு பூசிவிட்டு
வாழ்த்திச் சிரிக்கின்ற
குழுமூர் மாமாவிற்கு
தலைதிவசம் அடுத்த வாரமாம்.
விபத்தில் சிக்கி
அஞ்சலி பதாகையில்
சிரிக்கின்ற தேனப்பன் மகன்
தொரராசு
வாழ்த்துமடல் கொடுக்கும்
களிப்பில்…
என்றேனும் யாராவது
மகிழ்ச்சியின்
இழைகள் கோத்த
தடித்த காலபெட்டகத்தை
புரட்டி புரட்டி
காலச் சூழ்ச்சியில் மிரளலாம்
நம் முகங்கள் கண்டும்
http://singaporecliche.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95/#comment-128

ஜூலை 27, 2014

இணைக்கோடுகள்

இணைக்கோடுகள்.
ஆக்கிரமிப்பு வெள்ளத்தினால்
அடித்துச் செல்லப்பட்டு
கரை ஒதுங்கியவர்கள்...
இந்த நிற்கதியற்றவர்கள்.
இவர்கள்,
நிற்கும்போது விழுகின்ற
நிழல்கூட இன்னோரு தேசத்தில்தான்.
காற்றைத்தவிர
கையிற்கெட்டுவதில்லை எதுவும்.
கேள்விக்குறிகளாய் வாழும்
ஆச்சரியக்குறிகளும் இவர்களே!
தாக்கவரும் எரிகணைகளை
இவர்கள்...
கற்களை வீசி எதிர்க்கின்ற
காட்சியை கண்டேன்.
எரிகணையின் பலமும்
இவர்களின் நம்பிக்கையும்
ஏற்றத்தாழ்வுகளற்ற...
இணைக்கோடுகள்தான் எனக்கு.

ஜூன் 03, 2014

வெட்கம்


கன்றுக்கே கொஞ்சம்தான்
கறப்பதெல்லாம் உங்களுக்கே.

பாலாக மாறிய உதிரத்தை
பருகுகின்றீர் ...
பரவாயில்லை என்
உதிரம் உங்கள்
உயிர் காக்கிறது.

மர அட்டைகளால்
பனையளவு நிற்கும்
நடிகனின் உருவத்திற்கு
குடங்குடமாய்
என் வெள்ளை இரத்தம்!

கொம்பு இருந்தென்னப் பயன்
வெட்கப்படுகிறேன்.

இந்தச்
சொரனை அற்றவர்களுக்கு
எருமை என்று
என் பெயர் சூட்டாதீர்கள்
அவர்கள்
வெட்கங்கெட்டவர்கள்!

(31-05 2014 ல் கவிமாலையில் பரிசுப் பெற்ற என் கவிதை)

மே 04, 2014

மயிலிறகு


நரை தொடங்கிய 
வாழ்வின் நடுப்பகுதியில் நாம்

உனக்கும்
குடும்பம் குழந்தைகள்.

எனக்கும்
குடும்பம் குழந்தைகள்

அன்று...
நீ கொடுத்த மயிலிறகு
இன்றும்
என் புத்தகத்தின் நடுவே.

அது
குட்டியும் போடவில்லை
செத்து போகவும் இல்லை.

ஏப்ரல் 06, 2014

மழையின்றி அமைந்த உலகு



நெஞ்சுக் கூட்டின்
நிழற்படம் போல்
இலைகளை இழந்து
கிளைகளோடு மட்டுமே
“மரமென” நிற்கிறது.

வெப்பச் சூட்டில்
பொசுங்கி கிடக்கின்றன
ஒருக் கிளையில்
ஒருக் கூட்டில்
இரண்டு குஞ்சுகள்.

இளைப்பாற எவருமின்றி 
தனித்துக் கிடக்கின்றன
அந்த மரத்தின் கீழ்
அசையா இருக்கைகள்.

மரத்தை சூழ்ந்திருந்த புல்வெளி
மஞ்சள் கூழங்களாகி விட்டது.
ஏழெட்டு மாதங்களாய்
மழையையே பார்க்காத
மண்ணின் நாக்கு
வறண்டு சுருள்கிறது.

வெப்பக் கொப்புளங்கள்
நாற்றங்கலாகின்றன
மனித உடலில்.

தங்கமாகி விட்டன
தண்ணீர்த் துளிகள்.

(தமிழ் மொழி மாத நிகழ்வின், சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழாவில் கவிதை போட்டியில் ஊக்க பரிசு பெற்ற எனது கவிதை)
விழா நாள் 05-04-14.



Related Posts with Thumbnails