செப்டம்பர் 16, 2014

காலப்பெட்டகம்


காலப்பெட்டகம் – 
ஒவ்வோரு பக்கமாக
புரட்ட புரட்ட…
என்னை கவ்வி இழுத்தது
கால சூழ்ச்சி.
அன்றைய பொழுதுகளின்
மகிழ்ச்சி இழைகளை
கோத்து தடித்திருந்தது
அந்த கால பெட்டகம்!
நஞ்சுண்டு
தற்கொலை செய்துகொண்ட
ராதாகிருஷ்ணன்
மொய்விபரங்களை சேகரித்தபடி…
மகிழ்ச்சி முகம் காட்டுகிறான்.
ஒருவர்பின் ஒருவராக
இறந்து போன
கிட்டிணன் அப்பாவும்
சின்னம்மாவும்
எங்களை வாழ்த்தும்
பெருமிதத்தோடு
அனைவாய் நிற்கிறார்கள்.
சேலையால்
தூக்கு போட்டுகொண்ட
திருச்சங்கு பொண்டாட்டி
கைக்குழந்தையோடு
ஏதோ சிரிப்பில்
மணவறை கடக்கிறார்.
மாலையை எடுத்து
வேண்டி கும்பிட்டு
எங்களுக்கு போடுகின்ற
தாலாச்சி ஆச்சியும்
இன்று இல்லை.
திருநீறு பூசிவிட்டு
வாழ்த்திச் சிரிக்கின்ற
குழுமூர் மாமாவிற்கு
தலைதிவசம் அடுத்த வாரமாம்.
விபத்தில் சிக்கி
அஞ்சலி பதாகையில்
சிரிக்கின்ற தேனப்பன் மகன்
தொரராசு
வாழ்த்துமடல் கொடுக்கும்
களிப்பில்…
என்றேனும் யாராவது
மகிழ்ச்சியின்
இழைகள் கோத்த
தடித்த காலபெட்டகத்தை
புரட்டி புரட்டி
காலச் சூழ்ச்சியில் மிரளலாம்
நம் முகங்கள் கண்டும்
http://singaporecliche.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95/#comment-128

2 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

காலப்பெட்டகம் புரட்டிப்போட்ட நினைவலைகள் கனக்கவைக்கின்றன.!

'பரிவை' சே.குமார் சொன்னது…

காலப்பெட்டகம் கலக்கல்...

Related Posts with Thumbnails