ஜனவரி 26, 2010

கவிதாஞ்சலி (முத்துக்குமார்)


உலகத் தமிழினத்தின்
உறவாகிப்போன _ இன
உணர்வாளனே !
*
ஒற்றைத் தீக்குச்சியினால்
உலகின் மௌனத்தை எரித்த
மாவீரனே !
*
உனக்குள் எரிந்த
உணர்வலைகளை
உலகிற்கும் உணர்த்த
உயிர் ஈகம் செய்தவனே !
*
வல்லுறுகள் கொத்தித் தின்னும்
நம் ,
உறவின் துயரை ...
பார்க்க இயலாது
திணித்துக் கொண்டாயா
தீக்குள் உயிரை ?
*
நாங்கள் ,
வாழ்ந்து இறப்பவர்கள் .
நீ ,
இறந்தும் வாழ்பவன் !
*
இந்த இனமும்
இந்த மொழியும்
இருக்கும் வரை ...
நீ ,
கம்பீரத்தின்
அடையாளமாவாய் .
*
முத்துக் குமரா ,
அந்த தீவின்
அநீதிகளை...
எரிந்து எதிர்த்த உனக்கு ...
இந்த தீவின்
உன் ,
உறவான எங்களின்
வீர வணக்கமும்
அக அஞ்சலியும்
காணிக்கையாக
*
இந்த
கவிதையின் வாயிலாக _உன்
காலடிக்கு .
*
*
(முத்துக்குமார் அஞ்சலி நிகழ்வுகளில் கலத்துகொண்ட காட்சியும்
கடற்கரையில் மலரஞ்சலி நிகழ்வில் நான் வாசித்த கவிதையும் )
(..... இது ஒரு மீள் பதிவுங்க )

13 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நல்ல உணர்வை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.. இருந்தாலும் என்னால் ஏற்றுகொள்ள முடியாத உயிர் இழப்பு

சி.கருணாகரசு சொன்னது…

நன்றிங்க ஞானசேகரன்.
உயிரிழப்பை யாருமே ஏற்க மாட்டார்கள் தான். ஆனால் முத்துக்குமாரின் மரணத்தை நான் மதிக்கிறேன். அவன் மரணம் தான் உலக உணர்வை உலுப்பியது. அந்த மரணத்தையும் கொன்றது சிலரது சுயநலம்.

ஹேமா சொன்னது…

எமக்காக உயிர்விட்ட தியாகச் செம்மலுக்கு என் அஞ்சலிகளும்.அவர் உயிரோடு இருந்து இன்னும் நிறைய எமக்காகப் போராடியிருக்கலாம்.

கருணாகரசு,கண்கள் கலங்க வைக்கும் வரிகள்.

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க ஹேமா. என்னச் செய்ய... எதுவும் செய்யமுடியாத நிலையில் இறந்தேனும், ஈழ இன்னலை உலகிற்கு புரியவைப்போம் என்று முத்துக்குமார் முடிவெடுத்திருக்களாம்.

சாந்தி நேசக்கரம் சொன்னது…

//ஒற்றைத் தீக்குச்சியினால்
உலகின் மௌனத்தை எரித்த
மாவீரனே !//

முத்துக்குமாரன் மூட்டிய தீ அவன் செத்துப்போன பின் எல்லாம் செத்துக் கிடக்கிறது. மெளனங்கள் கலையுமென்று அவன் தனைக்கருக்கினான். மரங்களாக எல்லாம் மரத்துப்போய்....

சாந்தி

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க... சாந்தி, எல்லா வினைகளுக்கும் ஓர் எதிர் வினை உண்டு...என்றேனும் விடிவு வரும்...நல்ல முடிவுத் தரும். நம்பிக்கை இழக்காமல் இருப்போம்.

விஜய் சொன்னது…

சிப்பிக்குள் முத்து அறிவோம்
ஆனால்
சிதைக்குள் முத்தாகி போனாயே

வணங்குகிறோம் உம்மை

விஜய்

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

தியாகத்துக்கு ஏற்றிய சுடராய் கவிதை என்றாலும் முத்துகுமரனின் இழப்பு ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று நிறைய தமிழ் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்..!

அன்புடன் நான் சொன்னது…

விஜய் கூறியது...
சிப்பிக்குள் முத்து அறிவோம்
ஆனால்
சிதைக்குள் முத்தாகி போனாயே

வணங்குகிறோம் உம்மை

விஜய்//

தங்களின் கருத்தே... அழகிய கவிதையாக.. வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

பிரியமுடன்...வசந்த் கூறியது...
தியாகத்துக்கு ஏற்றிய சுடராய் கவிதை என்றாலும் முத்துகுமரனின் இழப்பு ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று நிறைய தமிழ் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்..!//

கருத்தை ஏற்கிறேன் வசந்த்... வருகைக்கு மிக்க நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

கவிதை நல்லாயிருக்கு அரசு. ...

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
கவிதை நல்லாயிருக்கு அரசு. ...//

மிக்க நன்றிங்க ஸ்ரீராம்

arasan சொன்னது…

என்னை கூறு போட்ட நிகழ்வுகளில் இதுவும் ஒன்று...
வலியை எழுதி உள்ளீர்கள்..

Related Posts with Thumbnails