என் நேசத்துக்குரிய "உனக்கு" உன் மீது எனக்கிருந்த ... பழைய காதலின் நினைவுச் சுவட்டோடு... எழுதுகிறேன். உன்னை கையாள்வது ஒரு கலை!. தகவல்கள் எப்படியாயினும் ஓர் பிணைப்போடுதான் ஆரம்பிக்கப்படுவாய். உலகம் முழுதும் வியாப்பித்திருந்த உன்னை ஓர் மூலையில் ஒதுக்கியதில் நானும் ஒருவன்!. என் விடுதிக்காலத்தில் என் தேவைகளுக்கான தூதுவன் நீதான்!. நட்பு காதல் உறவு என அத்தனைக்கும் பாலமும்... பலமும் நீயே தான்!. உன்னை பாவிக்கும் போது சிந்திக்கும்... அவகாசம் இருந்ததால் நீ, நிதானத்தின் அடையாளமானாய்!. முன்பொரு காலத்தில் உன்னை புறாவின் காலில் கட்டி அனுப்பினார்கள் பின்... முத்திரை குத்தி அனுப்பினார்கள். இன்றோ மனித முகவரிகள் எழுத்துகளிலிருந்து எண்களாகிவிட்டதால் உன் அழகு பராமரிக்கப்படவில்லை. அதனால்தான்... நீ காணாமல் போகும் முன் “கடிதமே”! உனக்கோர் கடிதம் எழுதுகின்றேன்.
உலகப் பந்தின் இருவேறு திசைகளிலிருந்து நீயும் நானும் காதல் பேசிகளானோம். * கடிகார நிமிடமுள் சில வட்டமடிக்க , அலைப்பேசி மின்கலன் சக்தி இழக்க, ஏதேதோ ... பேசி களித்தோம் , ஏதேதோ ... பேசி களைத்தோம் . * இறுதியாய் , எதைப் பேச மறந்தோம் ... எதைப் பேசி மறந்தோம் ... இருவருக்கும் தெரியவில்லை! . * இருந்தும் தொடர்பைத் துண்டித்து , தயாராகிறோம் ... நாளைய ... அலைபேசி அழைப்புக்காக .
( திருமணத்திற்கு முன்பு ... இல்லற தோழிக்கு பேசியபோது ) (இது ஓர் மீள் பதிவுங்க ..... யாரும் என்வலைக்கு வராத காலத்தில் எழுதப்பட்டது . அதாவது ... பின்னூட்டமேஇல்லாத கவிதைங்க )
உங்கள் மனத்தராசு ... பொருளாதாரத்தையே எடைபோடுகிறது . என் தராசுத் தட்டுகளில்... ஈரமும் அன்பும் தான் எடைக்கற்கள் . உடுத்திய உடைகளிலேயே உட்கார்ந்து விடுகிறது உங்கள் விழிகள் . திரையிடாத என் மனதைப் பார்க்காமல் ! தடாகம் சேறானதும் மீன் பிடிக்கின்றீர்கள் ! நானோ ... தாமரையை இரசிக்கிறேன் . "அவளை" நிலவென்றேன் பொய் பேசுகிறேன் என்கிற நீங்களேதான் நிலவை ஓடிவரச் சொல்லி சோறு ஊட்டுகிறீர்கள் . அந்த ... ரோசா செடியின் முட்களைச் சபிக்கின்றீர் ... நீங்கள் . அங்கே ... மலர்களை இரசிக்கிறேன் ... நான் . துக்கத்தில் கண்ணீர் பிறக்கிறது உங்களுக்கு . கவிதை பிறக்கிறது எனக்கு . ஏனெனில் ... நான் ... கவிஞன் .
01-12-2002- ல் மலேசியா தமிழ்நேசனில் வெளியானது ... பின் 2004 - ல் எனது தேடலைச்சுவாசி நூலிலும் இடம் பிடித்த கவிதை ... இன்று வலைத்தளத்திலும் .... (நிழற்படம் ... கவிமாலை விருது விழாவில் கவிதை வாசிக்கும் பொது 2009 )
தேடல் உன் முகாரிக்கு முடிவுரையும் பூபாளத்திற்கு வாழ்த்துரையும் எழுதுமோர் ... சிறகுச் சித்தாந்தம் . இது சுயமேம்பாட்டின் சுருக்கெழுத்து . வானத்தையே விலைபேசும் வசீகர மந்திரம் . தேடலே ... நித்தம் உன்னை புதிதாய்ச் செதுக்கும் வைர உளி . இருட்டிலும் உன்னை ஒளிரச் செய்யும் சூரிய வெளிச்சம் . தேடல் உன் முன்னேற்றத்தை முகவரியாய் எழுதும். முகத்தைப் பொன்னேட்டில் வரையும் . தேடல் விடியலைக் கற்பிக்கும் வியர்வைப் பாடம் . வெற்றிக் கனி பறிக்க வித்திடும் ஏணி . தேடலினால் சிகரங்கள் உன்னிடம் கைகுலுக்கும் . தேசங்கள் உன்னை மொழிபெயர்க்கும் . தேடல் வாழ்வின் பிடிப்பு வசந்தத்தின் அழைப்பு இது , என்றும் உன்னை இளமையாய் வைத்திருக்கும் சுவை மருந்து - இதை தினம் அருந்து. தேடலை என்றும் சுவாசி ! தேசத்தில் நீதான் சுகவாசி !!
(இது எனது முதல் இலட்சிய படைப்பான "தேடலைச்சுவாசி" நூலிலிருந்து.... ) ( வெளியிட்ட ஆண்டு.2004 சூலை )